Thursday, December 23, 2010

சிந்தனைகள்

சிந்தனைகள்

· நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என நினைத்தால் வலிமை படைத்தவனாக நீ ஆகிவிடுவாய்.

· அற்ப இதயமுடைய மனிதரிடமிருந்து எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனஉறுதி உன்னிடத்தில் இருக்க வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்குப் போதுமான வலிமை உனக்கு இருந்தாக வேண்டும்.

· ஒரு முகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழியாகும்.

· மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இருந்தால் பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

· உலக வரலாறு என்பது தன்னம்பிக்கையுள்ள, சில மனிதரின் வரலாறே ஆகும். உள்ளே மறைந்து இருக்கும் தெய்வத்தன்மையை வெளிக்கொணரும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு.

Wednesday, December 22, 2010

கனவில் தொடங்கிய பயணம்

கனவில் தொடங்கிய பயணம்

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். ‘இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

நம்மில் பலபேர் இந்த வயதில் “ஓய்வு பெற்று விட்டேன்” என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? “நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்”. நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ‘இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்’.

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. ‘நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்’!

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்; ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு ‘இன்னம் கொஞ்சம் ஓடு!’ என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

அரவிந்தின் ‘பேராசை’ அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்’ என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது ‘அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்’ என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. ‘யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்’.

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

* 24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
* 2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.
* உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.
* அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.
* தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.
* இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.
* இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.
* ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

Monday, December 20, 2010

நாவடக்கம்

நாவடக்கம்



“பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.



ஒரு நாள், போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க… அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்தக் களிறை வெளியேற்றினான். அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், ‘அரசே, நம் யானை இன்று போர்க்களத்தில் தனது துதிக்கையை நீட்டிவிட்டது. இனி அது போருக்குப் பயன்படாது’ என்றான்.



ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு என்றார் புத்தர்.



மனதில் மாசு இருந்தால்தான் நாக்கு பொய் பேசும். மனதை அடக்காமல் நாக்கை அடக்குவதால் நன்மை இல்லை.

பிரச்சனையைத் திருப்பிப் போடு

பிரச்சனையைத் திருப்பிப் போடு

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அல்லது ஒவ்வொரு நிர்வாகத்திலும் மிகப்பெரிய திருப்புமுனைகள் நடந்திருக்கும். பிரம்புடன் உள்ளே நுழைந்து பார்த்தால் மூச்சு அடைத்துப் போய்விடுவோம் அந்த அளவுக்கு எளிமையாக இருக்கும்.

சில சமயம், பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் அணுகினாலே போதும்; பிரச்சனை சட்டென்று தீர்ந்துவிடும். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஜான் ஸ்கல்லி. அவர் ‘நீயூட்டன்’ என்ற பெயரில் உள்ளங்கை அளவு கணிப்பொறி ஒன்று (PDA) தயாரித்தார். கீ போர்டில் டைப் செய்யத் தேவையில்லாமல், நம் கையெழுத்தையே அது படித்துப் புரிந்துகொள்ளும் என்று சொல்லப்பட்டது. கடைசியில் நீயூட்டனுக்கு என்ன ஆயிற்று? பரிதாபத் தோல்வி! அந்த இயந்திரத்தால் மனிதக் கையெழுத்தை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அவ்வளவுதான். இதை நம்பி 500 மில்லியன் டாலர் செலவழித்து முடிந்தபிறகு இந்தத் தோல்வி.

இதே சமயத்தில் வேறு பல நிறுவனங்களும் ‘கையால் எழுதியதைப் படிக்கும் கணிப்பொறி’ என்று தயாரிக்க முயன்றாலும், அவற்றுக்கும் தோல்விதான். மொத்தத்தில் பில்லியன் டாலர், சாக்கடையில் போய்விட்டது. இப்படித் தோல்வி அடைந்த நிறுவனங்களில் ஒன்றுதான் ‘பாம்கம்ப்யூட்டிங்’ அதன் தலைவர் ஜெஃப் ஹாக்கின்ஸ். அவர் யோசித்துப் பார்த்துவிட்டு, அடிப்படைக் கேள்வியையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார். ‘இதுவரை எல்லோரும் சிக்கலான மென்பொருள் எழுதி எழுதி, கணிப்பொறி எப்படிப்பட்ட எழுத்தையும் புரிந்துகொள்ளுமாறு முயற்சி செய்தார்கள்’. இதற்கு நேர்மாறாக, கணிப்பொறியால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் எழுத முயன்றால் என்ன?

பிறகு அவர்கள் கண்டுபிடித்தது ‘க்ராஃபிட்டி’ என்ற ஒரு வகை எழுத்து வடிவம். பேனாவை எடுக்காமல் ஒரே வீச்சில் ஒவ்வொரு எழுத்தையும் எழுதும் முறை அது. இதை நாம் எழுதக் கற்றுக் கொள்வதும் சுலபம்; படிப்பதும் கம்ப்யூட்டருக்கு எளிது. அப்படிப் பிறந்ததுதான் பாம்பைலட்!

பாம் பைலர் 1997ல் விற்பனைக்கு வந்தது. 2000க்குள் வருடத்துக்கு 1 பில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டித் தந்தது. பாம்பைலட்டை உருவாக்க ஆன செலவு? வெறும் 3 மில்லியன் டாலர்! இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் ‘பிரச்சனையைத் திருப்பிப்போடு’ என்ற மந்திரம்தான்.

Saturday, December 18, 2010

ஒப்பீடு

ஒப்பீடு


ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ.. ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும் என்று விளக்கினார். ‘முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து, பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மனநிறைவு அடையலாம்’ என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்து நிறுத்தினேன். ‘ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன் இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ என்றேன். யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். நீ ஒரு முறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!!!

ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முன் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடுவானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்திசாலித்தனம்.

அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது.

உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.

Friday, December 17, 2010

சிந்தனைகள்

சிந்தனைகள்
கல்வியின் அடி ப்படையான  இலட்சியமே  மனதை ஒரு முகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
கல்வி, தன்னம்பிக்கை இவற்றின் மூலமே நம்முன் மறைந்திருக்கும் தெய்வீக சக்தியை நாம் வெளிபடுத்த முடியும்.
ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலை நிறுத்த முடியும்.
ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெருஞ் செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அவை தாம் ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிகாட்டும். சில சமயங்களில் கயவரும் புகழ்பெறுவதுண்டு. எந்த நிலையிலும் பெருந்தன்மையுடன் நடப்பவனே உண்மையில் பெரியோனாவான்.
நம் எண்ணங்களே நம் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. இரும்பின் மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வோர் அடியும் அதன் உருவத்தைத் தீா்மானம் செய்வது போல், நம் ஒவ்வோர் எண்ணமும் நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது. வார்த்தைகள் அவ்வளவு முக்கியம் அல்ல; எண்ணங்களே மிக முக்கியமானவையாகும்.

Wednesday, December 15, 2010

சேவை மனப்பான்மை

சேவை மனப்பான்மை
வாழ்க  வளமுடன் - குருவே துணை
“ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது”.
‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். ‘நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது’ என்று சீடர்கள் சொல்ல, ‘பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?’ என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.
காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்”.
நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 
“வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்.”
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

Tuesday, December 14, 2010

TODAY'S THOUGHT

புதிய சிந்தனை – II
சிந்தனை1: முடிந்தால் இதற்கு ஒரு வழிகண்டுபிடிப்போம் இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்.
சிந்தனை2: பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது.
 ‘ஏன் முடியாது?’ என்று பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ‘எப்படியெல்லாம் செய்ய முடியும்?’ என்று யோசிப்பது.
சிந்தனை3: ‘இடம் மாறித் தேடுவது’.
இதற்கு நம் துறையின் மையத்தை விட்டு ஓரமாகப் போய்த் தேடலாம். நம் தொழில்துறையும் வேறு துறைகளும் சந்திக்கும் குறுக்குச் சாலைகளில் தேடலாம். இந்தக் கணத்தில் வேறு ஏதோ ஒரு தொழில்துறையில் இருப்பவர், உங்களுக்கு இருக்கும் அதே மாதிரி பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருக்கலாம் அல்லவா?
உதாரணம்: விப்ரோவின் தொலைக்கட்டமைப்பின் (Remote Infrastructure) தலைவராக இருக்கும் ஜி. கே. பிரசன்னாவிடம் இதற்கு ஓர் எளிய பாலிசி இருக்கிறது. ‘ஒன்றைச் செய்ய முடியாது என்றால், அதற்கேற்ற கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனபதுதான் காரணம். அந்தக் கருவியை முதலில் செய்வோம். முடியாததெல்லாம் தானே முடிந்துவிடும்’.
இந்தத் தத்துவம், விப்ரோவையும் பிரசன்னாவையும் தொலைக் கட்டமைப்பு நிர்வாகத்தில் உலக அளவில் முன்னோடிகளாக்கிவிட்டது! இப்போது அவர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள கம்ப்யூட்டர்களையும் மற்ற சாதனங்களையும் இந்தியாவில் இருந்தபடியே நிர்வாகம் செய்கிறார்கள்.
டாட்ஸ்கின்னர் சொன்னதை சற்று மாற்றிச் சொல்வதென்றால், ‘நீங்கள் வரைபடத்திலேயே இல்லாத இடங்களுக்கு பயணம் புறப்பட்டு விட்டீர்கள் என்றால், அந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனபது முக்கியமல்ல; நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், தகவல்கள் எங்கிருந்து எப்படிப் பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
வாழ்க  வளமுடன். குருவே துணை.

Monday, December 13, 2010

new thought

புதிய சிந்தனை
வெற்றிகரமான புதிய சிந்தனைகளை எழவிடாமல் தடுப்பது நம்முடைய அறிவு அல்ல; உணர்ச்சிகள் தான். வரலாறு, அனுபவம் போன்றவை நமக்குப் பல உணர்ச்சி பூர்வமான தடைகள் போட்டு வைத்திருக்கின்றன. அந்தத் தடையை மீறிச் சிந்திக்கும் போதுதான் நம் பார்வை வேறு திசையில் போகும். அங்கேதான் புதுமையும் பிறக்கும்.
புதிய சிந்தனைகளைத் தடுக்கும் அணைகள் என்று சொல்லத் தக்கவை மூன்று உண்டு:
  • நாம் செய்ய நினைப்பதற்கு முன்மாதிரிகள் ஏதாவது உண்டா என்று தேடுவது.
  • இதைச் செய்வது ஏன் முடியாது என்று சாக்குப் போக்குகள் எழும்போது அவற்றை ஒப்புக்கொண்டு அங்கேயே நிறுத்திவிடுவது.
  • ஏற்கனவே தேடிச் சலித்த இடங்களிலேயே திரும்பத் திரும்பப் புதிய ஐடியாக்களைத் தேடுவது.
முன் மாதிரிகளைத் தேடும்படலம் ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘இதற்கு முன் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா?’ என்பதுதான். இதுவரை செய்யப்படாவிட்டால் இனியும் அது முடியாத காரியம். முடியக்கூடியதாக இருந்தால், யாராவது இதற்குள் செய்திருப்பார்களே!!! முன் மாதிரிகளைத் தேடுவது என்ற அணை, நம்முடைய அடிமை மனப்பான்மையிலிருந்து எழுவது.
டாக்டர். துவாரகாநாத், டைட்டன் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர்; நுண்பொறியியல் துறைத்தலைவர்; இதற்கு முன் அவர் எச்.எம்.டி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றிச் சொல்வார்: ஏதாவது புதுமையாகவோ, வித்தியாசமாகவோ ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரிகளிடம் பேசுவார். அந்த அதிகாரிகள் ஜப்பானில் சிட்டிஸன் நிறுவனத்தில் 18 மாதங்கள் வேலை செய்துவிட்டு வந்திருப்பவர்கள். ‘ஜப்பானியர்களாலேயே ஒன்றைச் செய்ய முடியவில்லை என்றால், அது வேறு யாராலும் முடியாது. எனவே இந்த யோசனை சரிவராது’ என்று நிராகரித்து விடுவார்கள்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, கடைசியில் துவாரகாநாத் அதிகாரிகளுக்கு தெரியாமல் நேரடியாக சிட்டிஸனை அணுகினார். அவர் சொன்னதைக் கேட்ட ஜப்பானியர்கள் ‘அருமையான ஐடியா’ என்று துள்ளக் குதித்தார்கள். ‘இந்த ப்ராஜெக்டில் உங்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்’ என்று முன் வந்தார்கள். எனவே, முதல் அணையை உடைப்பதற்கு தேவை, ஒரு முன்னோடியின் மனநிலை. ‘முடிந்தால் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்’ என்ற மனநிலை.
புதிய சிந்தனை:
·         செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. செய்வதற்கு ஒரு ஐடியா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதை கண்டுபிடிக்கும் வரை அவருக்குத் தூக்கம் வராது.
·         வெற்றிக்கான இரண்டாவது மனநிலை, பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது. ‘ஏன் முடியாது?’ என்று பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ‘எப்படியெல்லாம் செய்ய முடியும்?’ என்று யோசிப்பது.
புதிதாய் சிந்திப்போம்! புதிய சகாப்தம் படைப்போம்!!