Sunday, February 12, 2012

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள்!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி


பிளஸ் டூ படிக்கும் என் மகள் தினமும் இரவு 9.30 மணிக்கு மேல் படிக்க முடியாமல் தூங்கிவிடுகிறாள். காலையில் 4.30 - 5.00 மணிக்கு எழுந்தாலும், 6.00 மணி வரை தூங்கித் தூங்கி விழுகிறாள். அவளுடைய தூக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறலாம். அதற்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் எவை?மகாதேவன், ஓசூர். மனிதன் என்ற சொல்லே மனத்தின் வசப்பட்டு இயங்குபவன் என்பதால் ஏற்பட்டது. மனிதனின் வாழ்க்கையில் மனமும் புத்தியும் பெரும் பங்கு கொள்கின்றன. உடலை வளர்க்கும் உணவு மனத்தையும் புத்தியையும் வளர்க்கப் பயன்பட வேண்டும். மனமும் புத்தியும் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆளுகைக்குட்பட்டவை. ஸத்துவம் என்பது அறிவையும், ரஜஸ் என்பது முயற்சியையும், தமஸ் என்பது இவ்விரண்டையும் கட்டுப்படுத்துவதையும் குறிக்கும். உலகம் தோன்றிய பொழுதே உறக்கமும் தோன்றியுள்ளது. உறக்கத்துக்குக் காரணம் தமோ குணம். அதன் மாற்றுருவம் உறக்கம் எனப்படும். தமோ குணத்தின் மிகுதியால் தோன்றும் உறக்கம் பெரும்பாலும் இரவிலேயே ஏற்படுகிறது. உறக்கத்துக்குக் காரணம் கபதோஷத்தின் மூலம் துவாரங்கள் அடைபடுவதாலும், களைப்பினால் பலன்கள் தத்தம் பொருட்களுடன் தொடர்பிலிருந்து விலகிக் கொள்வதாலும் மனிதனை உறக்கம் தழுவிக் கொள்கிறது. புலன்கள் பொருட் தொடர்பிலிருந்து விலகினாலும், மனது இதன் புலப் பொருட்களுடன் தொடர்புவிடாமல் இருந்து கொள்வதால் மனிதன் பல வகையான கனவுகளைக் காண்கிறான் என்கிறது ஆயுர்வேதம். தமோ குணம் அதிகமாகக் காணும்போது ஸôத்வீக ராஜஸ குணங்கள் அடக்கப்பட்டு அறிவு மந்தப்படுதல், சோம்பல், அசதி, தூங்கித் தூங்கி வழிதல், ஒரு வேலையிலும் ஈடுபடாதிருத்தல், ஏக்கம், புத்தி மயக்கம், மெத்தனமாயிருத்தல், ஒருவன் தூண்டினாலன்றி வேலையில் ஈடுபாடற்றிருத்தல், தூண்டப்பட்டாலும் தூண்டப் பெற்ற அளவிற்கு மேல் வேலை செய்யாதிருத்தல், தூண்டப்பட்ட அளவிற்கும் மேலாக அடிக்கடி தூண்டுதல் தேவைப்படுதல், இவற்றால் சுகமா? துக்கமா? என்ற பகுத்தறிவற்றிருத்தல் இவை எல்லாம் காணப்படும். கபதோஷம் பொதுவாக நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை ஆகியவை படைத்தது. தமோகுண கபதோஷத்தின் ஆதிக்கத்தைக் குறைத்தால் உங்களுடைய மகள் தூங்கி வழியும் பழக்கதிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. லேபனம் - நஸ்யம் - தூபனம் போன்ற சில எளிய சிகிச்சை முறைகளால் தூங்கி வழியும் பழக்கத்திலிருந்து விடுபடலாம். லேபனம் - 5 கிராம் ராஸ்னாதி எனும் சூரண மருந்துடன் 2 கிராம் ஏலாதி சூரணத்தைத் கலந்து, 10 மி.லி. இஞ்சிச்சாறு குழைத்து லேசாகச் சூடாக்கி, தினமும் இரவு 7 -9 வரை நெற்றியில் பற்று இடவும். காய்ந்து போகும் இந்த லேபனத்தைத் தட்டி உதிர்த்துவிடவும். நஸ்யம் - அணு தைலம் எனும் மூலிகைத் தைலத்தை, காலை இரவு பல் தேய்த்த பிறகு மூக்கினுள் விட்டுக் காறித் துப்பி விடவும். தூபனம் - ஓர் ஆட்காட்டி விரல் நீளத்திலுள்ள வசம்புக் கட்டையை, மஞ்சளைத் தடவி, முனையில் நெய் புரட்டி விளக்கில் காண்பித்து வரும் புகையை மூக்கினுள் விட்டு, வாய் வழியாக வெளியே விடவும், நஸ்ய சிகிச்சை செய்து கொண்ட பிறகு. கண்டூஷம் - மகாலேபனம் - அஞ்ஜனம் போன்ற முறைகளாலும் பயன்பெறலாம். கண்டூஷம் - ஒரு ஸ்பூன் (5 மி.லி.) அளவு சுத்தமான தேனை வாயிலிட்டுக் குலுக்க, எச்சிலுடன் கலந்து வாய் நிறைய ஆனதும் துப்பிவிடவும், இரவில் படுக்கும் முன். முகாலேபனம் - ஏலாதி எனும் சூரண மருந்தை, பன்னீருடன் குழைத்துக் காலையில் முகம் கழுவிய பிறகு, முகத்தில் பூசி 1/4 - 1/ 2 மணி நேரம் ஊறிய பிறகு, பன்னீரால் நனைத்துக் கழுவிவிடவும். அஞ்ஜனம் - இளநீர்க் குழம்பு 2 சொட்டு கண்களில் விட்டுக் கொள்ளவும். காலை, மாலை உணவுக்கு முன்பாக. சாரஸ்வத சூரண மருந்தைச் சுமார் 5 -6 கிராம் எடுத்து 7.5 மி.லி. (1 1/2 ஸ்பூன்) சுத்தமான பசு நெய் குழைத்து இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிடும் பிளஸ் டூ மாணவ, மாணவியர் படிப்பில் படுசுட்டியாக இருப்பார்கள். தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.