Saturday, July 16, 2011

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை
இறந்தபின் மனிதனுடைய வினைப்பதிவுகள் என்னவாகிறது? இது பரவலாக நிலவி வரும்
வினா. வினைப் பயன் விட்டுப் போகாது. ஒவ்வொரு உயிரும் தன் வினைப் பயனைத்
தூய்மை பெறும்வரையில் வேறு உடலில் சேர்ந்தேனும், தன் வினைப்பயனாக
துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தே தீரும். அதற்காகப் புதிதாகப் பிறவி
எடுக்க வேண்டும் என்பதில்லை.
ஒரு குழந்தை பிறந்து அது தன் பன்னிரெண்டு வயது வரை தன்னிச்சையாக
வினைகளைப் பெறவில்லை; பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று வைத்துக்
கொள்வோம். பன்னிரண்டு வயதிலே இறந்து விட்டது. இந்நிலையில் அக்குழந்தையின்
உயிரின் நிலை என்ன? 12 வயதிற்குள்ளாக எந்தக் குழந்தை உயிர் விட்டாலும்
தன், தாய் அல்லது தந்தை, பாட்டன், பாட்டி போன்ற கருத்தொடரான உறவினர்களின்
உயிரோடு அடைக்கலமாகி விடும். விரிந்த உயிர் சுருங்கி விடுவதுபோல
அவ்வுயிருக்கு வேறு எந்தப் பதிவும் இல்லை. ஆகவே அந்த உயிரில் பதிவு பெற்ற
உயிர்கள் தாயும் தந்தையும்தான். எனவே, அவ்வுயிர் தாய், தந்தையரிடமே
சேர்ந்து விடும். அவ்வுயிருக்கும் அமைதி ஏற்பட்டு விடும்.
பெற்றோர்களுக்கும் அக்குழந்தையை வளர்த்தமையால் அவர்களின் வினைகளும் ஒரு
பகுதி கழிந்து விடுகின்றன. இவ்வாறு இருவர் வினைகளும் கழிந்த ஒரு
கூற்றுதான் அக்குழந்தையின் முடிவு.

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை பற்றி நாம் பல கதைகளைச் சொல்லக்
கேட்டிருக்கிறோம். இறந்த உயிர் வானுலகம் செல்லும். வானுலகத்தில்
சொர்க்கம், நரகம் உண்டு. நல்வினை செய்த உயிர்கள் சொர்க்கத்திற்குச்
சென்று இன்பமுறும். தீவினை செய்த உயிர் நரகம் சென்று அங்குள்ள நெருப்புக்
கொப்பரையில் விழப்படச் செய்தும், செக்கிழுத்தும், பாம்பு, பூரான் போன்ற
விஷ ஜந்துக்களாலும் துன்புறும் என்று கருடபுராணத்தில் கதை
சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு, மனிதனுக்கு அச்சமூட்டி, தவறுகள் செய்யாது
இருப்பதற்காக, தீவினைகள் செய்யாது இருப்பதற்காக பல கதைகள் சொல்லப்பட்டு
வந்தன. அக்காலத்தில் அவை நன்மையே அளித்து வந்தன.

இக்காலத்தில் இதை நம்புபவர்கள் இல்லை. இந்த விஞ்ஞான காலத்தில் சொர்க்கம்,
நரகம் என இரு உலகங்கள் பூமிக்கு மேல்புறமாக இருக்கிறது என்பதை நம்பவும்
முடியாது. காலத்தால் அக்கதைகள் மறைந்து விட்டன. உண்மையான சிந்தனைக்குரிய,
அறிவுக்குப் பொருத்தமான நல்ல கருத்துக்களை, நம் பழக்கத்தின் காரணமாக
ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மையான கருத்துக்களை மனித குலத்தின்
வாழ்வின் நலத்திற்காக வெளியிட்டுத் தான் ஆக வேண்டும். இவற்றை
இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் வரும் சிந்தனையாளர்களுக்கு இது
மிகவும் அவசியம். மரணமென்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால்
உயிரினத்தில் அமைந்துள்ள கருமைய இரகசியங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள
வேண்டும்.

திருக்குறள் - ஒரு அறிமுகம

திருக்குறள் - ஒரு அறிமுகம்,


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மிளகு

மிளகு
நறுமனப் பொருள்களின் அரசன் என்று போற்றப்படும் மிளகு உடலுக்கு நல்லதா?
உடல் நலத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் நல்லது!

மிளகில் சோர்வு அகற்றி இடையறாத ஊக்கம் தருகிற நறுஞ்சுவையும், நறுமணமும் உள்ள பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன.

100 கிராம் கறுப்பு மிளகில் புரதம் 11.2% கொழுப்பு 6.8% என்று உள்ளது. இதில் 300 கலோரி கிடைக்கிறது.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது.

குழந்தைகள் மட்டுமல்ல, வாழ்வில் முன்னேற முயற்சிப்பவர்களுக்குத் தேவையான சக்தியையும் வழங்கும். அதற்கு ஏற்ப கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், புரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளாறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட்ட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து அரைத்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், அறவு மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்பு வலி, பற்சொத்தை உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
குருவே துணை

Friday, July 8, 2011

இறைவழிபாடு

இறைவழிபாடு

தெருவில் “Keep your Clean & Beauty” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நாட்டுப்பற்று மிகுந்த சர்தார்ஜி சுற்றுச்சூழல் கெட்டுப்போய்விடும் என்ற நல்லெண்ணத்தில் தன் வீட்டில் வரும் குப்பை, கூளங்கள், வீணான உணவுப் பொருட் களை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போடாமல், தன் வீட்டு அறை ஒன்றிலேயே சேகரித்து வந்தார். இப்போது வீட்டின் உள் சூழல் கெட்டுப் போய்விட்டது. நாற்றம். துர்நாற்றம்.
தன் தவறை உணராத சர்தார்ஜி வீட்டின் வெளிப்புறம் நாற்றத்தினை உருவாக்கும் அழுகிய பொருட்கள் ஏதேனும் காணப்படுகிறதா? என தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.
சர்தார்ஜியின் தவறை சுட்டிகாட்ட நினைத்த அவர் மனைவியின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. சர்தார்ஜி தொடர்ந்து அதே தவறை (குப்பையை வீட்டிற் குள் பாதுகாக்கும் ) செய்து வந்தார்.
இறுதியில் மனைவி, மக்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பின் பக்கத்து வீட்டி னரும் உடல் நலன் கருதி வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு குடி சென்று விட்டனர்.
சர்தார்ஜி குடும்பத்தார், உறவினர், நண்பர்களை இழந்தாலும், தன் செயலை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை.
சர்தார்ஜியை போன்றே நம்மில் பலரும் அவ்வப்போது ஏற்படும் சிறு மற்றும் பெரிய பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், எதிர்மறை அனுபவங்கள், சண்டை சச்சரவு களால் மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங் கள், நெருடல்கள், ஆத்திரம், கோபம், வன்மம், பகை, போட்டி மனப்பான்மை, பழிவாங்கும் எண்ணம், போன்ற குப்பைகளை அவ்வப்போது மனதிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தாமல், மனதை மாசுபடுத்த அனுமதித்து விடுகிறோம். விளைவு மனமென்னும் கோவில், தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பிறப்பிடமாகவும் மாறுகிறது. பயன்மிக்க, உயர்ந்த கருத்துக்கள், திட்டங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், (அன்பு, கருணை, உதவி, உழைப்பு, மன்னிப்பு, மாண்பு ) உருவாக வேண்டிய மனம் அமைதியின்மை, வெறுப்பு, பழிவாங்குதல், தோல்வி மனப்பான்மை, வெறுமை, அவமானம், துக்கம், போன்ற எதிர்மறை இயல்புகளின் புகலிடமாக மாறி விடுகின்றது. மனிதன் இத்தகைய நிலைதான் இன்றைய சமுதாயத்தின் பல்வேறு எதிர்மறை செயல்களான கொலை, தற்கொலை, விவா கரத்து, மனநிலை பாதிப்பு, அடிதடி, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் பல விபத்துக்களுக்கான அடிப்படை காரணமாக அமைகின்றது. அதை விட நம் சாதனை வாழ்விற்கு தேவையான குடும்ப, சமூக, நட்பு வட்ட ஆதரவு தளம் குறைய துவங்குகின்றது. சந்தோஷம், சாதனை கனவுகள், சிறந்து விளங்குகின்றன. ஆகவே நம் வாழ்வில் என்ன என்ன பிரச்சனைகள், அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், காயங்கள், ஏற்பட்டி ருந்தாலும் அவை யார் காரணமாக வந்திருந் தாலும், நாம் அவ்வப்போதே அந்த எதிர்மறை அனுபவங்கள் காரணமாக நம் மனதில் ஏற்படும் பகையுணர்வு, பழிவாங்கும் உணர்வு, துக்கம், கோபம், மற்றும் அவமானம் போன்ற அசுத்தங் களை சுத்தப்படுத்த முயற்சி எடுப்பது நல்லது.
மனதின் மாசை அகற்றி, புத்துணர்வு உருவாக்க, அவ்வப்போது நேரம் ஒதுக்குவது நல்லது. அப்படி மனதில் ஏற்படும் காயங்களை ஆறவைத்துவிட்டால், பிற்காலத்தில் பெரிய மனநோய்கள் வருவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். எதிர்மறை தாக்கங்களையும், விளைவுகளையும் தடுத்து நிறுத்த முடியும். குடும்ப உறவுகள், நட்பு வட்டம் குறைவதை ஆதரவு தனம் சுருங்குவதை கட்டுப்படுத்த முடியும், நம் சந்தோஷ, சாதனை வாழ்வு சாத்தியமாகும்.
மனதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி
நண்பர் ஒருவர் மகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார். வீட்டிற்குச் சென்றேன். வீடே திருவிழா கோலம்தான் சந்தோஷத் திற்கான காரணத்தை தெரிந்தால், ஆச்சரியப் பட்டு போவீர்கள்.
நண்பர் குடும்பத்திற்கும், அவர் உறவினர் குடும்பத்திற்கும் இடையே நிகழ்ந்து வந்த அடிதடி, போட்டி, பொறாமை, கொலை, பனிப்போர் போன்றவற்றை பேசித்தீர்த்து மீண்டும் நல்லுறவை உருவாக்கியதைக் கொண் டாடும் கொண்டாட்டம் தான் அன்றைய சந்தோஷ நிகழ்வு,
தலைமுறை, தலைமுறையாக இருந்து வந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை எடுத்த நண்பர் பேச்சு வார்த்தையின் போது பிரச்சனைக்குரிய 1 ஏக்கர் நிலத்தில், 70 சென்ட், நிலத்தை மனமுவந்து எதிர்தரப் பினருக்கு விட்டுக் கொடுத்ததனாலேயே பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதைதான்
விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை.

கெட்டுப் போபவர்கள்
விட்டுக் கொடுப்பதில்லை.

என்ற பொன் மொழி உணர்த்துகிறது.
இப்போது இரு குடும்பத்தினரும் பகைமை உணர்வை மறந்ததனால்

(அ) மன அமைதியோடு வாழ முடிகின்றது.
(ஆ) மன அமைதியோடு தொடர்புடைய உடல் நலம் உருவாகின்றது.
(இ) அவர்கள் சக்தி, நேரம் மற்றும் திறன்கள் சண்டை சச்சரவுகளில் வீணாகிக் கொண்டிருந்தது. தடுத்து நிறுத்தப்பட்டு, பயனுள்ள வகையில் பயன்படுத்த துவங்கப்பட்டிருக்கின்றது.
(ஈ) குடும்பங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை யால் சமூகசூழல் செம்மைப்படுத்தப் பட்டுள்ளது.
(உ) இரண்டு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல சமூதாயத்தினருக்கும் நாளை என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற பயஉணர்வு வேரறுக்கப்பட்டுவிட்டது.
(ஊ) மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம் பிக்கையை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்து கின்றது.
(எ) பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப் பதன் மூலம் அன்பு நிலை நாட்டப் படுகின்றது. உறவுகள் மலர்கின்றது.
மன்னிக்கும் செயலினை உளவியல் வல்லுநர்கள் மனக்குளியல் அல்லது உணர்வு விடுதலை அல்லது எண்ண விடுதலை என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால், அவை நம்மை ஆள்கின்றது. ஆட்டுவிக்கின்றது.
ஆனால் மன்னிக்கும் மாண்புடன், தீமை செய்தவருக்கு மன்னிப்பு அருள்வதனால் நாம் நம் உணர்வுகளை ஆட்சி செய்கின்றோம். நம் விருப்பப்படி நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை நல்ல திசைகளில், வாழ்வின் உன்னத குறிக்கோளை நோக்கி பயன்படுத்துகிறோம்.
சாதனைகள் சாத்தியமாகிறது. சந்தோஷம் சகஜமாகின்றது. ஆகவே
மன்னிப்போம், மறப்போம்,
சரித்திரம் படைபோம்.
10. இது பிரார்த்தனை நேரம்
கடவுள் இருக்கின்றாரா? இல்லையா ? என்ற கேள்வி அவ்வப்போது பலரால் பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வந்த போதும், இன்றளவும் பெருவாரீயான மக்கள் கடவுள் நம்பிக்கையுடன், தொடர்ந்தோ, அவசியப்படும் போதோ, அவசரங்களுக் காகவோ, இறை வழிபாடுகள், பிராத்தனைகளில், ஈடுபட்டு வருவது கண்கூடு.

இறைவழிபாடு, ஜெபம், தரிசனம், பிரார்த் தனை, பூஜை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை , அர்ச்சனை, ஓதுதல் என எத்தனையோ பெயர் களில், வழிகளில் இறைவனை துதிக்கின்றனர், வணங்குகின்றனர், வேண்டுதல்களை சமர்ப்பிக் கின்றனர்.
பிரார்த்தனை பலனளிக்குமா?

இறைவனை பற்றியும், பிராத்தனையின் பலன்களை பற்றியும், இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தாலும், அனுபவபூர்வமாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும், ஆன்மீக அனுபவ பகிர்வுகள் மூலமாகவும், இறைவழிபாடு, வேண்டுதல், பிரார்த்தனை, கூட்டுப்பிரார்த்தனை, துôரதேச பிரார்த்தனை (Distant Prayer) அடுத்தவர் களின் பிரார்த்தனை (Intercessory Prayer) ஆகிய வற்றை நம்பிக்கையோடு பயன்படுத்துபவர்கள் அளப்பரிய பலன்களை அனுபவித்து வருவதற் கான ஆதாரங்களைக் காண முடிகின்றது.

பிரார்த்தனை எப்படி பலனளிக்கிறது?
பிரார்த்தனை அல்லது ஜெபம் அல்லது இறைவழிபாடு வழங்கும் பலன் ஆன்மீக பலம், மதம் என்பது ஆன்மீக பலத்தை அடைய நாம் பயன்படுத்தும் ஒரு பாதை மட்டுமே. ஆன்மீக பலம் என்பது இறைவனிடம், பரம்பொருளிடம், நாம் கொள்ளும் நம்பிக்கையில் விளைவாக கிடைக்கும் அருள் பலனே ஆகும். இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக பலம் நமக்கு,

(அ) நம் மீதே நம்பிக்கையை உருவாக்குகின்றது. எத்தகைய சூழலிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இறைசக்தி என்னை காத்தருளும் என்ற அபார நம்பிக்கையை வழங்குகிறது. ஆன்மீக பலம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை உடையவர்கள், எத்தகைய நோய்கள், துன்பங்கள் அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும், எளிதில் மீண்டு சகஜ நிலைக்கு வந்து விடுவதாக பல்வேறு உளவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்து கின்றன. ஆகவே பிரார்த்தனை, இறைவழிபாடு மற்றும் இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக சக்தி நாம் எத்தகைய எதிர்மறை சூழ லிலும் துணிவுடனும், சந்தோஷ மனநிலை யுடனும் சாதனை வாழ்வு வாழ உதவுகின்றது.

(ஆ) துன்பங்கள் அகலும், நன்மைகள்
இறை நம்பிக்கை மற்றும் தொடர்ந்த பிரார்த்தனையுடன் வாழ்ந்து வருபவர்களிடம், தவறுகள், அநியாயங்கள், துரோகம், ஏமாற்றுதல், பொறாமை போன்ற எதிர்மறை குணநலன்களின் தாக்கம் குறைவாக காணப்படும். நாம் தீமைகள் செய்யாதவரை நமக்கு தீங்குகள் விளையும், வாய்ப்புகள் மிக மிக குறைவே. அடுத்த நிலையில் இறை அன்பு உடையவர்கள் அடுத்தவருக்கு முடிந்த அளவு நன்மைகள் செய்து வருவார்கள். பலன் அவர்களுக்கும் நன்மைகள் அதிகமாக விளைந்து வரும்.

(இ) இறை நம்பிக்கை ஆணவத்தை
அடக்கி வைக்க உதவுகின்றது.
ஆணவமற்ற ஆளுமை அன்பு, பண்பு, அமைதி, பாசம், எளிமை, மனிதாபிமானம் உள்ளிட்ட சந்தோஷ சாதனை, வாழ்விற்கு தேவை யான அனைத்து குணநலன்களுக்கும் அடிப்படை யாகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, பிரார்த்தனையோடு கூடிய இறைநம்பிக்கை.

1. உடல் நலம் 2. மனநலம் 3. தன்னம்பிக்கை 4. எண்ணத்துôய்மை 5. நட்பு வட்டம் 6. பாது காப்பு உணர்வு

என எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கு கிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு மற்றும் பிரார்த்தனை நம் வாழ்வில் சந்தோஷத் தையும், சாதனைகளையும் வாரி வழங்கும் அட்சய பாத்திரம் என்பதை உணருவோம். சந்தோஷ சாதனை சரித்திரத்தை எழுதத் துவங்குவோம்.

வெற்றி பெற வழி

வெற்றி பெற வழி

தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும்.

கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.

இது தான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம்(Essence) ஆகும்.
ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கும் துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை.

துன்பத்தைத் தீர்க்கிறபோதும், அதனால் நமக்கு துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?
அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.

தனக்கும் துன்பமில்லாது பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில் நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும்.

இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெறவேண்டியதே இல்லை.
எந்த இடத்திலே, எந்த காலத்திலே, எந்த நோக்கத்தோடு,
எந்தச் செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ
அதற்குத் தகுந்தவாறே உனக்கு விளைவும் வரும், வெற்றியும் வரும்

வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி

Wednesday, July 6, 2011

புத்தர் கூறிய கதை

புத்தர் கூறிய கதை


(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை )



ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.



முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.



ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.



திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.



அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.



இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.
by Vethathiriyam for World Peace on Thursday,

Saturday, July 2, 2011

அன்பு

அன்பு

அன்பைக் கொடுத்துதான் அன்பைப் பெற வேண்டும்.ஆனால்,வெறுப்பைக் கொடுத்து அன்பை எதிர்பார்க்கிறோம்.
அன்பைப் பற்றி பேச ஒரு வார்த்தை போதும்.ஆனால் அன்போடு வாழ ஒரு வாழ்கையே வேண்டும்...

அன்பின் ஒரே எதிரி கோபம்தான்.கோபத்தின் ஒரே நண்பன் வெறுப்பு.வெறுப்பின் காரணம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் வெறுப்பு வருகிறது.கோபமும் கூடவே வந்துவிடும்..கோபம் வந்தால் அன்பு பறந்தோடி விடும்..
எதையும் யாரிடமும் எதிர் பார்க்க வேண்டாம்..வருவதை ஏற்றுக்கொள்வோம்...வாழ்க வளமுடன்

அன்பான மனிதராக வாழ்வதற்கு
நம் மனதில் பிறரைப் பற்றிய அன்பான வார்த்தைகள், கருத்துகள்.
அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள்.இவற்றை பதிய வைக்க வேண்டும்.பிறரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு,வெளியில் அன்பு காட்ட முனைந்தால் அது வெறும் நடிபாகத்தான் இருக்கும்.

பிறரது பிரச்சினைகளை நம் பிரச்சினைகள் போல எடுத்துகொண்டுஆறுதல் கூறுவது, பிரச்சினைகள் தீர வழி காண்பது, அவர்களுக்காக சங்கல்பிப்பது, இறைவனை வேண்டுவது, முடிந்த உதவிகளை செய்து வாழ்வது, பிறர் தவறை ஏற்றுக் கொள்வது, பொறுத்துக்கொள்வது, சகித்துக் கொள்வது. இவை அன்பான மனிதரின் அடையாளங்கள்