Monday, January 31, 2011

கர்மயோகம்

கர்மயோகம்

ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. ‘வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலையைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்… அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங்கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி அழுதது.

இதைக் கேட்ட ஞானி, “காலணியே! நீ கர்மயோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்துவிட்டு எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன்மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருதிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு-அவமதிப்பு, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்மயோகம்” என்றார்.

Wednesday, January 26, 2011

பகுத்தறிவு

பகுத்தறிவு

ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

“You can educate fools; but you cannot make them wise”.

Monday, January 24, 2011

பற்றற்ற நிலை

பற்றற்ற நிலை

பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். “சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?” என்று கேட்டார் பரமஹம்சர். “ஒரு தடையும் இல்லை!” என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரேடியாக ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற்குக்கூட முடிவதில்லை.

பற்றற்ற பற்று

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.

Sunday, January 23, 2011

புதுமை படைத்தல்

புதுமை படைத்தல்

புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.




புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.



டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர். அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.



புதுமை படைப்பதற்கான வழிகள்:

· மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

· அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

· மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?



புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.



புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

Friday, January 21, 2011

பெரிதாக குறிவை

வாழ்க வளமுடன்



‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

*
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

Thursday, January 20, 2011

மன அலை

மன அலை
வாழ்க வளமுடன்
உங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.

மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).

முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.

எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்.

உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.

Wednesday, January 19, 2011

மன ஒருமைப்பாடு

மன ஒருமைப்பாடு

மனதை ஒரு முகப்படுத்த கற்றவன் ‘மகான்’ ஆவான். இதனை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்.

* கல்வியின் அடிப்படையான இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். மனதை ஒரு முகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும்.
* நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்களை படிக்கமாட்டேன். முதலில் மனத்தை ஒரு முகப்படுத்தும் ஆற்றலையம், நல்ல பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை சேகரித்துக் கொள்வேன்.

மனஒருமைப்பாடு பற்றி உலக வரலாறு கூறுவது:

* ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி இவ்வாறு கூறுகிறார் – ஒரு நாள் நள்ளிரவு நேரம். அழகிய மனைவி. இளம் வயதினாள். அவள் தூங்கவில்லை. கவிஞனும் தூங்கவில்லை. எழுதுகோல் அவன் கையில் இருக்கிறது. அவன் பார்வை எங்கோ எட்டாத தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருக்கிறது. படுத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் கண்களோ கணவன் எப்போது எழுந்து வருவார் என்று ஏங்குகின்றன.

அவன் எழுதுகிறான். இவளோ ஏங்குகிறாள். எழுந்து அவனை நெருங்கிச் செல்வதற்கு அடியெடுத்து வைத்தாள். மெதுவாக, மிக மெதுவாகத்தான் அவள் வந்தாள். ஆனாலும் கவிஞன் சொன்னான்…

‘பெண்ணே? மெதுவாக நட – என் கனவுகளைக் கலைக்காதே என்று…’. ஆம், நுண்ணிய மென் பொருளைத் தேடி பயணம் போகும் கவிஞனின் இதயம் மனைவியின் பூப்பாதம் எழுப்பும் மெத்தென்ற ஒலியையும் சகிக்க மறுக்கிறது.

* வில் வித்தையில் வித்தகர் அர்ச்சுனனின் மன ஒருமைப்பாடு. மரத்தின் உச்சியிலிருக்கும் பறவையை ஒரே அம்பில் வீழ்த்த வேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. வில் வளைந்து நாணேற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனுக்குப் பறவையின் கழுத்து மட்டுமே தெரிந்தது. விட்டார் அம்மை, விழுந்தது பறவை. வில்வித்தையில் வெற்றி வீரனானான். கழுத்து மட்டுமே எப்படித் தெரிந்தது? மற்ற சிந்தனைகள் எதுவும் அவன் உள்ளத்தில் புகவில்லை – புகுமாறு விடவில்லை. எனவே அவன் கண்கள் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்த்தன. ஆனால், அர்ச்சுனனைத் தவிர மற்றவர்களது கண்களோ மரத்தின் கிளைகளையும் இலைகளையும் அவற்றோடு பறவையையும் பார்த்தன.
* நெப்போலியன் மன ஒருமைப்பாடு – நெப்போலியன் தனது உள்ளத்தைப் பல அறைகள் கொண்ட ஒரு கூண்டிற்கு ஒப்பிடுகிறார். ஓர் அறையினைத் திறந்து வைத்திருக்கும் போது, அதாவது ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது மற்ற எல்ல அறைகளையும் அடைத்து வைத்து விடுவாராம்.

Tuesday, January 18, 2011

மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்

1893-ம் வருடம் தென்னாப்பிரிக்காவின் ஆளரவற்ற ஒரு ரயில் நிலையத்தில் கடும் குளிரில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தான் 24-வயது இளைஞன். இரயில் பயணத்துக்கான முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், நிறவெறி காரணமாக கீழே இறக்கப்பட்ட அராஜகத்தை நினைத்துத் துடித்தான். வழக்கறிஞர் தொழில் செய்யும் தமக்கே இந்தக் கொடுமை நிகழ்கிறது என்றால், படிக்காத இளைஞா்களுக்கு என்னவெல்லாம் அநியாயம் நிகழும் என எண்ணிப் பார்த்தான்.

இந்த அநியாயத்தை எதிர்த்து நிற்பதா அல்லது இந்தியாவுக்கு திரும்பிவிடுவதா என்ற இரண்டே கேள்விதான் அப்போது அவனிடம் இருந்தது. இரவெல்லாம் சிந்தித்தவன், காலையில் சூரியன் கண்விழிப்பதற்குள் மிகத் தெளிவான போராளியாக மாறினான். அடிமைத்தனத்தையும், அராஜகத்தையும் எதிர்க்கத் துணிந்தான். போராட வேண்டுமாயின் பணபலம் மற்றும் ஆள்பலம் வேண்டும், உன்னிடம் இரண்டும் இல்லை என்பதால் தோற்றுவிடுவாய் என்று அவநம்பிக்கை விதைத்த நண்பர்களைப் பார்த்து “மனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று போராட்டத்தைத் தொடங்கினான். அதில் வெற்றி பெறவும் தொடங்கினான். ஆம்…பாரதத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அந்த இளைஞன். 21-ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்தியப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டுதான், இந்தியா அவரை கைநீட்டி அழைத்தது.

ராக்பெல்லர்

ராக்பெல்லர்



அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்

நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை; எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.

முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.

தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.

Monday, January 17, 2011

வான்மீகியின் வரலாறு

வான்மீகியின் வரலாறு

வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் பார்த்து, “நீ ஏன் திருடுகிறாய். இது, பாவம் இல்லையா?” என்றார் நாரதர். ‘என் குடும்பத்தைக் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்’ என்றான் அவன். ‘உன் பணத்தில் பங்கு பெறுபவர்கள், நீ செய்யும் பாவத்திலும் பங்கேற்பார்களா என்று கேட்டு வா’ என்றார் நாரதர். அவன் முதலில் பெற்றோரிடம் சென்றான். ‘வழிப்பறியில்தான் நம் வாழ்க்கை நடக்கிறது. அடுத்தவர் பொருளைக் கையாடும் எனது பாவத்தில், உங்களுக்குப் பங்கில்லையா?’ என்றான். ‘பாவி மகனே, நீ செய்யும் ஈனத் தொழிலை இதுநாள் வரை நாங்கள் அறியவில்லையே. உனது பாவத்தில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?’ என்று கோபத்தில் கத்தினர்.

வருத்தத்துடன் அவன் மனைவியிடம் சென்று நடந்ததை விளக்கினான். ‘கைப்பிடித்த பெண்ணுக்குக் காலம் முழுவதும் வாழ்வளிப்பது கணவனது கடமை. நீ தவறான வழியில் பொருள் ஈட்டினால், அந்தப் பாவத்தில் நான் எப்படிப் பங்கேற்க முடியும்?’ என்றாள் மனைவி. நாரதரிடம் திரும்பியவன், ‘இனி, நான் என்ன செய்தால் நல்லது?’ என்று வழி கேட்டான். ‘உனது பணத்தைப் பங்கு பிரித்தவர்கள், நீ செய்த பாவத்தில் பங்கேற்க விரும்பவில்லை. அவர்களது அன்பு சுயநலமானது. எனவே, பாவத் தொழிலை விட்டுவிடு. இறைவனை இதயத்தில் நிறுத்தித் தியானத்தில் ஈடுபடு. உன் மனம் மாசுகளிலிருந்து விடுபடும்’ என்றார் நாரதர். அப்படியே செய்தான் திருடன்.

வருடங்கள் வளர்ந்தன. தியானத்தில் இருந்தவனைப் புற்று மூடியது. வானத்திலிருந்து ‘முனிவரே எழுந்திடும்’ என்று அசரீரி கேட்டது. ‘கள்வனாகிய நானா முனிவன்?’ என்றான் அவன். ‘தியானம் உனது மாசகற்றி, முனிவனாக மாற்றிவிட்டது. புற்றிலிருந்து எழுந்து வந்ததால் இனி நீ ‘வான்மீகி’ என்று அழைக்கப்படுவாய்’ என்றது அசரீரி. ராமாயணம் தந்த வான்மீகியின் வரலாறுதான் இது.

விமர்சிக்கும் உலகம் இது

விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

Thursday, January 13, 2011

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்

ஒரு கப்பல் கட்ட வேண்டுமா? உங்கள் ஆட்களைக் கூப்பிட்டு, மரத்தைக் கொண்டுவரச் சொல்லி, வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, உத்தரவுகள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்காதீர்கள். முடிவு இல்லாத அகண்ட கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் போதும்.
எல்லோரையும் நம்முடைய பயணத்தில் சேர்த்துக் கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் அடி மனத்தில் நுழைந்து பாதித்து, உங்களைவிட அவர்கள் அதிக உற்சாகமாகப் புறப்படும்படி செய்துவிட வேண்டும்.
மனிதர்களை கூட்டு சேர்த்துக்கொள்வது என்றால், அவர்கள் முழுக்க முழுக்க ‘இது என்னுடைய வேலை’ என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு, தொழில் இலக்குகளோ, புள்ளி விவரங்களோ போதாது. ஒரு லட்சிய வேள்வியின் பயனாக விளைவது அது.
கூட்டாளிகள் வந்து சேர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் மும்முனைத் திட்டம்.
எடுத்த காரியம் வெல்ல வேண்டும்.
நாம் வெல்ல வேண்டும்.
நம்முடன் சேர்ந்தவர்கள் வெல்ல வேண்டும்.
நம்முடைய லட்சியத்தால் கவரப்பட்டு, தோழர்கள் தானாக வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; நம் சுருதியில் இழைந்து பாட வேண்டும். யாரையும் வலிமையைக் காட்டி இழுக்கக் கூடாது.
கட்டாயப்படுத்தி கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டோமானால், எப்போது அவர்கள் நம்முதுகில் குத்துவார்கள் என்றே தெரியாது. நம் முதுகைக் காப்பாற்றுவதற்கே நேரம் சரியாகப் போய்விடும். ஆனால் பணியின் மீது முழு ஈடுபாட்டை அவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட்டால் போதும்; எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

Tuesday, January 11, 2011

ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்


பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழுஉற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ் எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாக செயலிழந்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘A Brief History of Time’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணிணி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித் தர சிரமம் குறைந்து. அதிகமாகச் சிந்தித்து நிறயை எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

‘காலம் எப்போது துவங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல்நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனமம் தளராமல் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.

Monday, January 10, 2011

சேவை

சேவை

பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக்காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி, வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று, கூப்பிய கரங்களுடன் குழைந்து நிற்பான். இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?

கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்பு நலன்களையும் புகழ்பவர்கள். மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள். இறைவனின் அன்புக்கு உரியவர்கள். பிறர் நலனுக்காகச் செயல்படுபவர்களே! கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

மனிதன் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை கணமேனும் இருக்க முடியாது. ‘நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி’ என்கிறார் மகாகவி பாரதி.

பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம்பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி, சும்மா இருத்தல் தகாது என்கிறது நம் சமயம். நான், எனது என்ற உடமை-மனோபாவம் உள்ளவர்களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள்வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.

Sunday, January 9, 2011

அச்சம்

அச்சம்

அச்சமே கீழ்மக்களின் ஆசாரம். ஒழுக்கம் தவறாதவன் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுதல் குறித்து ஓர் அற்புதமான ஈசாப் கதை.

ஒரு காட்டில் முயல்கள் பல இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கின. அன்றாடம் அஞ்சியஞ்சி உயிர் வாழ்வதைவிட ஒரேயடியாக செத்துவிடுவது சுகமென்று அவற்றுக்குத் தோன்றியது. எல்லா முயல்களும் ஓரிடத்தில் கூடின; மலை உச்சியை அடைந்து, அங்கிருந்து அடிவாரத்தில் உள்ள மடுவில் விழுந்து உயிரை விடுவது என்று முடிவெடுத்தன. திட்டமிட்டபடி முயல்கள் அனைத்தும் மலையுச்சிக்கு வந்து சேர்ந்தன. மடுவில் விழத் தயாராக நின்றன. அந்த மடுவின் கரையில் இருந்த தவளைகள் மலையுச்சியில் இருக்கும் முயல்களைக் கண்டதும் கலக்கமுற்று, நீரில் பாய்ந்து மறைந்தன. தங்களைவிட அஞ்சி வாழும் உயிரினங்கள் உலகில் உண்டு என்ற உண்மையை அறிந்த முயல்கள், மடியும் முடிவை மாற்றிக் கொண்டன.

இந்த ஈசாப் கதை இன்னொரு நீதியையும் வலியுறுத்துகிறது. உலகில் துன்பத்தைச் சுமப்பவர்கள் நாம் மட்டும் இல்லை. நம்மைவிட மிக மோசமான துன்பத்தை அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் உண்டு. அதனால், துன்பத்திலிருந்து விடுதலை தேடி யாரும் தற்கொலையில் ஈடுபடக்கூடாது. எந்த நிலையிலும் எந்த உயிரினமும் மனிதரைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை.

Friday, January 7, 2011

கடவுள்

கடவுள்

ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் அன்னமிட்டார். அந்தச் அன்னத்தில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த செய்கையை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான். குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

“என்ன இது குருவே?” என்றான் அவன். “பிரமத்தில் ஒரு பிரம்மம், பிரமத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, ‘என்ன இது?’ என்கிறது ஒரு பிரம்மம்!” என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; அன்னமும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்களும் பிரம்மம்; கேட்ட சீடனும் பிரம்மம்; தானும் பிரம்மம்; என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

· ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், “ஆண்டவனை அடையும் வழி என்ன?” என்றான். “மனிதர்கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி” என்றார் அந்த மகான்.

· ‘கடவுள் இல்லை’ என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், ‘கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்’ என்று தனது நூலில் எழுதினார்.

· ‘உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு’ என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன்மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.

சிந்தனைகள்

சிந்தனைகள்

· நண்பனே! முதலில் மனிதனாய் இரு. பிறகு நீ விரும்புவன அனைத்தும் உன்னைப் பின் தொடர்வதை நீ காண்பாய்.

· நம்மையே நாம் நம்பாதவரை நமக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் அனைவருள்ளும் கடவுள் இருக்கிறார்.

· மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

· மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும், நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.

· மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்.

· உலகப் பெரியோர்கள் வாழ்க்கையை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் ஞான ஒளியைப் பெறுவதற்கு, இன்பத்தை விடத் துன்பமே – செல்வத்தைவிட வறுமையே – புகழை விட இகழே அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தெரியவரும்.

Wednesday, January 5, 2011

சிந்தனைகள்

சிந்தனைகள்

· நீங்கள் வெற்றி பெறுவதற்கு மிகுந்த விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் “சமுத்திரத்தைக் குடித்திடுவேன்” என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழைத்தால் நீ உனது குறிக்கோளை நிச்சயம் அடைவாய்.

· மக்களுக்காகச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவன் ஆகிறான்.

· மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகிறான்.

· தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

· எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே. அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்து விடமுடியும்.

· ஒரே ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால் உனக்கு ஆதரவான காலம் வரும்.

Tuesday, January 4, 2011

ஆசை

ஆசை

ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.

* நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
* அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.
* துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.
* நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டுவந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதிகலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெது வெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. ‘என்ன சுகம், என்ன சுகம்’ என்று அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்

தெளிவிலாதேன…

‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்குமதானே?

இல்லறம்

இல்லறம்

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி

Sunday, January 2, 2011

இல்லறம்

இல்லறம்

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது. ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி

கர்மயோகம்

கர்மயோகம்

ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. ‘வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலையைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்… அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங்கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி அழுதது.

இதைக் கேட்ட ஞானி, “காலணியே! நீ கர்மயோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்துவிட்டு எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன்மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருதிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு-அவமதிப்பு, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்மயோகம்” என்றார்.

Saturday, January 1, 2011

பற்றற்ற பற்று

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.