Monday, January 10, 2011

சேவை

சேவை

பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக்காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி, வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று, கூப்பிய கரங்களுடன் குழைந்து நிற்பான். இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?

கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்பு நலன்களையும் புகழ்பவர்கள். மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள். இறைவனின் அன்புக்கு உரியவர்கள். பிறர் நலனுக்காகச் செயல்படுபவர்களே! கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

மனிதன் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை கணமேனும் இருக்க முடியாது. ‘நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி’ என்கிறார் மகாகவி பாரதி.

பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம்பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி, சும்மா இருத்தல் தகாது என்கிறது நம் சமயம். நான், எனது என்ற உடமை-மனோபாவம் உள்ளவர்களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள்வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.

No comments: