Sunday, January 9, 2011

அச்சம்

அச்சம்

அச்சமே கீழ்மக்களின் ஆசாரம். ஒழுக்கம் தவறாதவன் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுதல் குறித்து ஓர் அற்புதமான ஈசாப் கதை.

ஒரு காட்டில் முயல்கள் பல இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கின. அன்றாடம் அஞ்சியஞ்சி உயிர் வாழ்வதைவிட ஒரேயடியாக செத்துவிடுவது சுகமென்று அவற்றுக்குத் தோன்றியது. எல்லா முயல்களும் ஓரிடத்தில் கூடின; மலை உச்சியை அடைந்து, அங்கிருந்து அடிவாரத்தில் உள்ள மடுவில் விழுந்து உயிரை விடுவது என்று முடிவெடுத்தன. திட்டமிட்டபடி முயல்கள் அனைத்தும் மலையுச்சிக்கு வந்து சேர்ந்தன. மடுவில் விழத் தயாராக நின்றன. அந்த மடுவின் கரையில் இருந்த தவளைகள் மலையுச்சியில் இருக்கும் முயல்களைக் கண்டதும் கலக்கமுற்று, நீரில் பாய்ந்து மறைந்தன. தங்களைவிட அஞ்சி வாழும் உயிரினங்கள் உலகில் உண்டு என்ற உண்மையை அறிந்த முயல்கள், மடியும் முடிவை மாற்றிக் கொண்டன.

இந்த ஈசாப் கதை இன்னொரு நீதியையும் வலியுறுத்துகிறது. உலகில் துன்பத்தைச் சுமப்பவர்கள் நாம் மட்டும் இல்லை. நம்மைவிட மிக மோசமான துன்பத்தை அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் உண்டு. அதனால், துன்பத்திலிருந்து விடுதலை தேடி யாரும் தற்கொலையில் ஈடுபடக்கூடாது. எந்த நிலையிலும் எந்த உயிரினமும் மனிதரைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை.

No comments: