Monday, January 24, 2011

பற்றற்ற பற்று

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.

No comments: