Saturday, June 16, 2012

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

Tuesday, June 12, 2012

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’
by vayal
நாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்' அனுபவம்.



கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.

அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலம் கொல்லிமலை என்பதால், மாவட்ட நிர்வாகம் இதன் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் சொல்கிறார்..

"தமிழக அரசு கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்ய ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்-அமைச்சர் கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற உத்தரவிட்டதின் பேரில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க அடிவார பகுதியில் புதிய சோதனை சாவடி ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகள் மூலம் கொல்லிமலையின் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.

கொல்லிமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.

***

14 நாடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.



வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

***

கொத்துக் கொத்தாய் பலாப்பழம்

கொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

***



நன்றி-தினத்தந்தி

Saturday, June 9, 2012

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்

தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது? அறிவியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.. மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும் உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.

நாம் ஏன் தூங்குகிறோம். இது கேள்வி. தூக்கம் வருவதால் தூங்குகிறோம். இது பதில் பதில் வேடிக்கையாயில்லை..

நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும் தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம், என இரண்டு வகைகள் உள்ளன.

தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.

மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது. இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்..

கண் அசைவுத் தூக்கத்திற்கு வருகையில் விரைவாக மூச்சு விடுதல், மூச்சு விடுவதை அதிகரித்தல் ஆகியன ஒழுங்கின்றி இருக்கும் கண்கள் மேலும் கீழுமாகப் பல்வேறு திசைகளில் அசைவதுடன் இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் ஆகியன அதிகரித்து கைகால்களை அசைக்க முடியாது. இது போன்ற நிலைகளில் கனவுகள் ஏற்படும்.

நாம் தூங்கத் தொடங்கிய 70 முதல் 90 நிமிடத்தில் ஏற்படுவது கண்ணசைவுத் தூக்கம், முதல் கட்டத்திலிருந்து நான்கு கட்டங்கள் வந்தபிறகு கண்ணசைவு தூக்கம் வருவதை ஒரு சுற்றுத் தூக்கம் சுழற்சி என்பார்.

ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச் செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது. காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும். அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.

மது அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வராது.. லேசான தூக்கமே வராது. லேசான தூக்கமே வரும். ஆதலால் அவர்களை விரைவில் எழுப்பி விடலாம். ஒரு முறை கண்ணசைவுத் லேசான தூக்கம் பாதிக்கப்பட்டால் திரும்பவும் ஒரு சுற்றுத் தூக்கம் பாதிக்கும். கண்ணசைவு தூக்கம் முடிந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். தூக்கமானது இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று பொதுவாக கூறவியலாது. தூங்குபவரின் வயதுக்கு ஏற்ப மாறும். பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும்.. கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்..

ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது. வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிளால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம். துக்கம் கெட்டு வண்டி ஒட்டினால் நிச்சயம் விபத்துகள் நேருகின்றன.

கண்களை சாலையில் சாய்ப்பது சிரமமாக இருந்தால் கொட்டாவி வருவதை நிறுத்த முடியாமல் போனால் வண்டி எந்த இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதே தெரியவில்லையெனில் வண்டி ஒட்டக்கூடாது. தூங்காமல் இருந்து வண்டி ஒட்டுவது ஆபத்து..

மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை கவனக்குறைவு ஞாபக மறதி மன உளைச்சல் ஆகியன ஏறபடும். குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும்.தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்

தூக்கம் சில மருத்துவ உண்மைகள்
இரவு நீண்ட நேரம் மருத்துவமனைகளில் கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களால் சரியாக வைத்தியம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரகாசமான விளக்குகள் எரியவிட்டால் இடையிடையே தூங்க அனுமதித்தால் அடிக்கடி ஷிப்ட் மாற்றினால் இக்குறைப்பாட்டை சரி செய்யலாம். 85 வகையான தூக்க நோய்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் சர்க்கரை நோய் மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். பகல் இரவு ஷிப்ட் மாற்றி வேலை செய்வதால் உடல் பசி முதல் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல் மனக்குழப்பம், மன இறுக்கம் இதய பாதிப்பு கல்லீரல் குடல் நோய்கள் ஆகியன ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பிபிஒ கால் சென்டரில் வேலை பார்ப்போர் இனிமையான தூக்கத்தையும் உடல் நலத்தையும் தொலைக்கிறார்கள். தூக்கம் கெடுவதுடன் -முறையற்ற உறவுகள் போதைப் பழக்கம் ஆகியன இதனால் ஏற்படுகின்றன. நல்ல தூக்கத்தை மாத்திரை தராது இடையிடையே விழிப்பதை தவிர்க்க நீண்ட தூக்கம் அவசியம்

Thursday, June 7, 2012

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்

Wednesday, June 6, 2012

9ன் சிறப்பு தெரியுமா?

9ன் சிறப்பு தெரியுமா?

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்

நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது

நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்

நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்

நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்

அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்

நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

நவ குண்டங்கள்:

யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்

நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி

நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான். 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Saturday, June 2, 2012

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை !!!

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை !!!

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

கீரைகளின் பயன்கள்

கீரைகளின் பயன்கள்

விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

அரைக்கீரை:

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.

மணத்தக்காளி:

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.

பசளைக்கீரை:

மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை:

வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.

முளைக்கீரை:

எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

அகத்திக்கீரை:

வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை:

வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.

முருங்கை கீரை

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

By : தமிழ்ச் சமுதாயம்
எந்த நாடு விவசாயத்தை ஆளுகிறதோ... அந்த நாடே இனி உலகை ஆளும்...