Monday, January 31, 2011

கர்மயோகம்

கர்மயோகம்

ஞானி ஒருவரிடம் வந்த செருப்பு ஒன்று, அவரிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது. ‘வணக்கத்துக்குரிய ஞானியே! என் பரிதாப நிலையைக் கேளுங்கள். நான், என் எஜமானரை இரவும் பகலும்… அவரின் கால்களை கல்லும் முள்ளும் காயப்படுத்தாமல் காக்கிறேன். அவரின் உள்ளங்கால்களில் அழுக்குப் படியாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அந்த நன்றியற்ற மனிதர், என்னை எப்போதும் கதவுக்கு வெளியே விட்டு விடுகிறார். இந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறி அழுதது.

இதைக் கேட்ட ஞானி, “காலணியே! நீ கர்மயோகத்தில் சிறந்து விளங்குகிறாய். உன் சுயநலத்தைத் தியாகம் செய்துவிட்டு எஜமானருக்கு தொண்டு செய்கிறாய். அவரின் பாதத்தை நீ தாங்குவதன்மூலம் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறாய். நீ தியாகத்தின் திருவுருவம். ஒரு கர்மயோகி தனது பணியையே தெய்வ வழிபாடாகக் கருதிச் செய்ய வேண்டும். கைம்மாறாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இறைவனே எல்லா வடிவங்களிலும் இருக்கிறார். எல்லாப் பணிகளையும் இறைவன் பணியாகக் கருதிச் செய்தால், பாராட்டை எதிர்பார்க்கத் தோன்றாது. மதிப்பு-அவமதிப்பு, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகியவற்றை சமமாகக் கருதிச் செயல்படுவதே சிறந்த கர்மயோகம்” என்றார்.

Wednesday, January 26, 2011

பகுத்தறிவு

பகுத்தறிவு

ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

“You can educate fools; but you cannot make them wise”.

Monday, January 24, 2011

பற்றற்ற நிலை

பற்றற்ற நிலை

பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான். பரமஹம்சர் வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான். “சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே?” என்று கேட்டார் பரமஹம்சர். “ஒரு தடையும் இல்லை!” என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் பொற்காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான். அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு பொற்காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரேடியாக ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்துவிட்டு, விரைவாக திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்துவிட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன். அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார். நம்மால் அந்தப் பணக்காரனைப் போல் ஒவ்வொன்றாக இழப்பதற்குக்கூட முடிவதில்லை.

பற்றற்ற பற்று

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான். ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார். சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான். “ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்?” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன். “வேதம் படித்த நீ பயப்படலாமா? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது. அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர். சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது. நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது. செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது. பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும்போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’ என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்; விரும்பியது விலகினாலும் துன்பம்; விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம். ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்… ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட, அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது.

Sunday, January 23, 2011

புதுமை படைத்தல்

புதுமை படைத்தல்

புதுமை என்றாலே புது விஷயங்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு! புதுமை என்றால் முதலில் ஓர் அவா, தாகம். அடுத்தது மனிதர்கள். மூன்றாவது புதிய சிந்தனை. உலகத்தின் மிகச் சிறந்த புதிய சிந்தனைகள் தோற்றுப் போயிருக்கின்றன. ஏனென்றால் மனிதர்கள் அவற்றை முழுமனதாக ஏற்கவில்லை; அவர்கள் மனதில் ஆவல் பொங்கவில்லை.




புதுமைகள் புரட்சிகளாக மாறுவதற்கு, நம்மை முற்றிலும் புதிய தளத்துக்கு அழைத்துச் செல்வதற்கு, பேரவா கொண்ட மனிதர்கள் அவசியம் தேவை. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புதிய சிந்தனையை வைத்துக் கொண்டு மக்கின்டாஷ் கணிப்பொறியை உருவாக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டு, ஒரு ‘வெறித்தனமான, மகத்தான கணிப்பொறியை’ உருவாக்கச் சொன்னார். கணிப்பொறி உலகத்தையே கவிழ்க்கப் போகிற ஒரு கணிப்பொறியை உருவாக்குவது அவர் நோக்கம்.



டேவிட் ஆகில்வி, வரலாறு படைத்த விளம்பரங்களைத் தயாரித்தவர். அவரும் புதிய சிந்தனையை பிடித்துக் கொண்டு வந்து யார் கையிலும் கொடுக்கவில்லை. தன் அணியைக் கூப்பிட்டார். ‘அழிவில்லாத சிரஞ்சீவியான படைப்புகள் எவற்றையாவது உருவாக்குங்கள்’ என்று மட்டுமே சொன்னார்.



புதுமை படைப்பதற்கான வழிகள்:

· மனிதர்களை ஊக்கப்டுத்துவது, சக்தியை வெளியே கொண்டுவருவது, அதிகாரம் கொடுப்பது என்றெல்லாம் பேசுகிறோம். இதற்கு நிறைய நேரமும் சக்தியும் செலவிடுகிறோம். ஆனால் ‘ஊக்கம் கொடுப்பது’ என்பதை வெளியிலிருந்து செய்ய முடியாது. மனிதர்களுக்குள் ஏற்கனவே உறைந்து கிடக்கும் ஆர்வத்தில் நெருப்பு பற்ற வைப்பதே ஒரே வழி.

· அதிகார அமைப்புகள், ஒரு நிறுவனம் நிலைபெற உதவும். ஆனால் அதே அமைப்புகள் நாம் போகும் பாதையையே கூடக்கட்டுப்டுத்தலாம். இந்த அமைப்புகளை மாற்றுவது என்றால் நிறுவனம் ஏன் அந்தத் தொழில்துறையே – இயங்கும் விதத்தை மாற்றவேண்டியிருக்கும்.

· மனிதர்கள் கூட்டமாகச் சேர்ந்து கனவு காணும்போது தொழில்துறைகளே மாற்றம் அடைகின்றன. நீங்கள் உங்கள் அணியுடன் சேர்ந்து கனவு காண்கிறீர்களா, அல்லது உங்கள் தனிப்பட்ட கனவுகளை கீழே இருப்பவர்களிடம் தெரிவித்து அவற்றை நிறைவேற்றச் சொல்கிறீர்களா?



புதுமையாளர்கள் கனவுக் கூட்டங்களை நடத்தி, அணியில் உள்ளவர்களையும் பயணத்தில் முழுவதும் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். செய்யமுடியாத சாதனைகளைச் செய்யத் தூண்டுதல் தருகிறார்கள்.



புதுமையாளர்கள் புதுமைகளைச் செய்வதில்லை. தாங்கள் செய்வதையே புதுமையாக்குகிறார்கள்.

Friday, January 21, 2011

பெரிதாக குறிவை

வாழ்க வளமுடன்



‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

*
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

Thursday, January 20, 2011

மன அலை

மன அலை
வாழ்க வளமுடன்
உங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.

மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).

முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.

எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்.

உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.