Tuesday, July 31, 2012

உடலும் -உடற்பயிற்சியும்

உடலும் -உடற்பயிற்சியும்

இன்றைய கால கட்டத்தில் இளமையாக என்றும் பதினாறாக கட்சியளிக்க ஐம்பது பக்கம் போனவர்களுக்கும் ஆசைதான். அதற்கு நிச்சயத் தேவை உடல் ஆரோக்கியம். அதற்கு மிகவும் தேவை உடற்பயிற்சி. இதை உடலை வருத்திதான் செய்யவேண்டும் என்பது இல்லை.

நமது பள்ளிகூட காலத்தில் டிரில் வாத்தியார் சொல்லித்தந்த மாதிரி கையை காலை ஆட்டி செய்தால் கூட போதும். ஆனால், பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி செய்வதில்லை என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்றைய உலகில் ஏராளமான நவீன வசதிகள் வந்துவிட்டன.

இன்றைய கணினி காலத்தில் அதிகமானோர் நாற்காலியை விட்டு எழாமலேயே தங்கள் பணியை செய்கிறார்கள்.

அலுவலகம் விட்டு வந்ததும் மீண்டும் நாற்காலி தொலைக்காட்சி அல்லது கணினி இதனால், பெரும்பாலானோர் தங்களது உடல் உழைப்பைச் செலுத்துவதில் பின் தங்கியுள்ளனர்.

உதாரணத்திற்கு ஒரு காலத்தில் பல கிலோமீட்டர் வரை நடந்து சென்ற மனிதன், தற்போது அலுவலகத்துக்கு மட்டுமின்றி பக்கத்து தெருவிற்குக் கூட வாகனத்தில் தான் செல்கின்றான். இதனால், உடல் உறுப்புகள் அனைத்தும். இயங்காமல் ஓய்விலேயே இருக்கின்றன.

இயங்காமல் இருக்கும் எந்திரம் துருவேறிப்போய் சிறிது காலத்துக்குப்பின் இயக்கமுடியாமல் போய்விடுகிறது அல்லவா?அதே போல் இயக்கப்படாத நம் உடல் உறுப்புகள் நோய் பிடித்து போகிறது.

இப்படி பட்ட ஓய்வு மனிதனுக்கு மிகுந்த நோய்களை அளிக்கிறது என்பதே உண்மையாகும்.

உலகம் முழுவதும் நடைபெற்ற ஒரு ஆய்வில், ஆண்டிற்கு 53 லட்சம் இளைஞர்கள் போதிய உடற்பயிற்சி இல்லாமல், தங்களது சோம்பேறித் தனத்தால் இறக்கிறார்கள் என்பதுதான் இப்போதைய அதிர்ச்சிதரும் தவலாக தெரியவந்துள்ளது.

அதாவது 10 ல் ஒரு மரணம் உடல் செயற்பாடின்மையால் ஏற்படுகின்றன. அதீத சோம்பேறித்தனம், நீண்டகால நோய்க்கு வழிவக்கிறது எனவும் எச்சரிக்கின்றனர்.

உடற்பயிற்சியின் அவசியம் குறித்தே பெரும்பாலும் விழிப்புணர்வுகள் வழங்கப்படுகிறது. ஆனால், சோம்பேறித்தனத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வுகள் வழங்கப்படுவதில்லை.

இதுவே, இளைஞர்களிடம் சோம்பேறித்தனம் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், உடற்பயிற்சிகளை அனைவரும் பெறும் வகையில், அதனை எளிதாகவும், பெறத்தக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு உடற்பயிற்சியை அரசு பொதுசுகாதாரத்தில் சேர்க்க வேண்டும் என்றனர். அதேசமயம், வாரத்திற்கு குறைந்தது இரண்டரை மணிநேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு தரும் வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

ஆண்டில் அதிகம் ஏற்படும் மரணங்கள் புகைப்பிடித்தல், கேன்சர், நீரிழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படுவதாக நாம் கருதுகிறோம். உண்மையில், பெரும்பாலான மரணங்கள் உடற்பயிற்சியின்மையாலே ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி என்பது சுமையல்ல சுகம் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம்.

புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்க்கு சமமாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்று கண்டறிந்திருக்கிறது.

"தெ லான்செட்" இதழில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கான்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த உடற்பயிற்சியின்மை என்ற பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் இந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டனில், மூன்றில் இரண்டு வயது வந்தோர், பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை செய்யத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.
நன்றி : " தன்னம்பிக்கை "

Sunday, July 29, 2012

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல் !!!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல் !!!

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.
கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்

Friday, July 27, 2012

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

ஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்!

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆயுள் அதிகரிக்கும் தயிர்

தயிர் அதிசயம் மிக்க உயிருள்ள உணவு. தயிரின் மகத்துவம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே 3000 வருடங்களுக்கு முன்பே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.

தயிரில் லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. நமது கிராம மக்கள் கூறுவது போல் "ரத்தம் செத்துப்போகாமல்'' செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்சன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.

தயிரிலுள்ள கால்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிக அளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது.

கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவும். வழி வகுக்கிறது. இது பி. காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைபாட்டை தவிர்க்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது.

இதயத்திற்கு ஏற்ற சாக்லேட்

பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கோகோ பானம் அருந்துவது தான். இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள்.

ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது. இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் டார்க் சாக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சாக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.

கருப்பு திராட்சை சத்துக்கள்

கருப்பு திராட்சையில் உள்ள சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம். அதேபோல் பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அமெரிக்காவை விட ஒகினாவா என்ற ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மடங்கு அதிகம். இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்குதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. ஆலிவ் எண்ணெய் அளவிற்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளன.

ஆலிவ் ( olive) என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஆலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரிய வந்துள்ளது. ஆலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி சாலட்களில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இதயத்தை காக்கும்.

கல்லீரலை வலுவாக்கும் துளசி

கல்லீரலை வலுவாக்கும் துளசி

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.

Thursday, July 26, 2012

சமையல் முறைகள்

சமையல் முறைகள்

1. சத்து அழியாத முறை

-> நெருப்பில்லாமல் சமைத்தல்(பழங்கள்),
-> உலர்த்துதல்
-> அவித்தல் (நீராவியில்)

2. நடுநிலை முறை -> வேக வைத்தல்

3. சத்து அழிக்கும் முறை

-> வருதல்
-> பொரித்தல்

நெருப்பில்லாமல் சமைத்தவை இயற்கை உணவுகள். சூரிய ஒளியில் இயற்கையால் சமைக்கப்பட்ட பழங்களே சிறந்தவை. பழங்கள், காய்கள் ஆகியவற்றைப் பச்சையாக உண்பது உயர்ந்த உணவாகும். அதிலுள்ள சத்துக்கள் அழியாமல் நமது உடலில் சேரும்.

உலர்ந்த திராட்சை போன்ற உணவுப் பொருட்களிலும் சத்துகள் அழியாது இருக்கும்.

நீராவியில் உணவுப் பொருட்களைச் சமைத்தால் அவித்தலாகும். சத்துக்கள் கெடாது.

வேக வைத்து உணவையே நாம் சாதரணமாக உண்ணுகின்றோம். அவற்றில் சத்துகள் வீனாகின்றான். வருதலும், பொரித்தலும் ஆன உணவவுப் பொருட்கள் நமது உடலைத் தூய்மை செய்வதில்லை. அவற்றைத் தவிர்த்தல் நல்லது.

கிராம்பின் மருத்துவ குணங்கள்…..

கிராம்பின் மருத்துவ குணங்கள்…..

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், ட‌யமின், ரிபோ பிளேவின், நயாசின், விற்ற‌மின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் கொலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Wednesday, July 25, 2012

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

திப்பு சுல்தான்

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.


திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.


ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.


திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.


போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

- விடுதலைப் போரின் வீர மரபு…