Monday, July 25, 2011

எட்டும் இரண்டும்

நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்கி குரு எமக்கு சொல்லி குடுத்ததை இறைவனின் அருளால் நான் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன். எழுத்து பிழை இருப்பின் திருத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே ---- திருமந்திரம் 986

எட்டும் இரண்டும் இனிதான பேரின்பத்தைக் கொடுக்கும் என்பதனை, எட்டையும் இரண்டையும் அறியாதவர்கள், பணம் உள்ளவன் பணக்காரன் இல்லாதவன் ஏழை. அதுபோல எட்டும் இரண்டும் அறிந்தவன் ஞானமாகிய செல்வம் பெற்ற பணக்காரன். எட்டும் இரண்டும் அறியாதவன் ஞானமாகிய செல்வம் இல்லாத ஏழைகள்.
அவர்கள் அதன் இன்பத்தை அறிய மாட்டார்கள். என்ற கூறுகிறார். மேலும் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு அதாவது பத்து என்பதே சித்தாந்த சன்மார்க்க பாதம் என்கிறார் திருமூலர். இது என்னடா!? எட்டும் இரண்டும் பத்து என்பது முதல் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கே தெரியும் இதைச் சொல்ல திருமூலர் எதற்கு என்கிறீர்களா? ஞானிகள் கூற்று எல்லாமே எளியதான ஆனால் அதே சமயம் ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஞானத்தை விளக்கும் மறை பொருளாகவே இருக்கும்.

இனி திருமூலர் சொன்னதை பார்ப்போம்?

எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.

இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.

இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.

யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.

"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது, அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்! அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !

இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் ! சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.

உபதேசம் என்பதன் பொருள், உப = இரண்டு, தேசம் = இடம் . இரண்டு இடம் - இரண்டு கண் என்பதே ஆகும். இதை உறுதிப்படுத்ததான் சாஸ்திர விளக்கம் கூறுவர். அவரும் இதைதான் சொன்னார் - இவரும் இதைத்தான் சொன்னார் - எல்லாருமே இதைத்தான் சொன்னார்கள் என எல்லா ஞானிகள் நூற்களையும், அவற்றின் மறை பொருள்களையும் - பரிபாசையாக சொன்னவைகளை விளக்கித் தெளிவுபடுத்துவர். இந்த உபதேசத்தை ஒரு சடங்காகவே செய்வர். உபதேசம் பெற்றவன் அஞ்ஞான வாழ்க்கையை முடித்து ஞான வாழ்வுக்கு முயல்பவனாக மீண்டும் பிறந்தவனாக கருதப்படுகிறான் . மெய் பொருள் உணர்ந்த உபதேசம் பெற்றவர்களே இரு பிறப்பாளன் ஆகிறான்.

இயேசுநாதர் 2 மீன்களையும் 5 அப்பங்களையும் 5000 பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மீதமுள்ளதை 12 கூடையில் வைத்தார் என பைபிள் கூறுகிறது. பைபிளின் முதல் பகுதியிலேயே வேத வாக்கியங்களை மேலோட்டமாக பார்க்காதீர். ஆழ்ந்து கவனியுங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் 2 மீனையும் 5 அப்பத்தையும் எப்படி ஐயா 5000 பேருக்கு பங்கிட்டு கொடுக்க
முடியும் ? கொஞ்சமாவது சிந்திப்போம்.

மீன் என்றால் தண்ணீரில் வாழும் மீன்அல்ல. மீன் போன்ற அமைப்புடைய நம் கண்கள். இயேசு 2 மீன்களாக தன் இரு கண்களாலும் 5 அப்பம் என்றது ஞானேந்திரியம் ஐந்தாலும் 5000 பேருக்கு உபதேசங் கொடுத்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதாவது கண்ணால் பார்த்து அனைவருக்கும் ஞானதீட்சை கொடுத்தார் என்பதே பொருள். கண்ணில் உள்ள ஒளியால் அக்னியால் ஞானஸ்தானம் வழங்கினார் என்பதே பொருள். மீதமுள்ளவை 12 கூடையில் வைத்தனர். இது 12 கலையுடன் சூரிய நிலையில் நின்றனர் என்றே பொருள்படும். நமக்கு சூரிய கலை வலது கண்ணே. இதையெல்லாம் உண்மை ஞானம் விளக்கம் பெற்றவர்கள் உடனே உணர்ந்து கொள்வார். அறியாதவர்கள் இல்லை என தர்க்கம் செய்யாதீர்கள். எவ்வளவு தூரம் இது உண்மை என அறிய முற்படுங்கள் சிந்தியுங்கள் என்பது எனது தாழ்மையான கருத்து. கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்.

பைபிளில், கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது. உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும். தேவன் ஒளியாய் இருக்கிறார். நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம். உன் சரீரத்தின் விளக்கான கண்ணில் உள்ள தேவனாகிய ஒளியை பெருக்கி உன் சரீரத்தை ஒளிமயமாக்கினால் ஒளிமயமான தேவனை தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளதை சிந்திப்போம்! குர் ஆனிலும் இன்னும் உள்ள அனைத்து மத நூற்களிலும் இதையேதான் கூரியிருகின்றனர். படித்து , சிந்தித்து தெளிவடைவோம்.

இறைவன் எப்படிபட்டவர் என்றால், ஒரு சிறு உதாரணம். நாம் தேடும் குறிப்பிட்ட அன்பரை சரியான விலாசத்தில் தேடி கண்டுபிடித்து விட்டோம். வீடு பூட்டியிருக்கிறது. நாம் வீட்டுக் கதவைத்தட்டி நண்பரை பேர் சொல்லி கூப்பிடுகிறோம். நமது நண்பர் வீட்டில் எங்கிருந்தாலும் என்ன செய்வது கொண்டிருந்தாலும் ஓடோடி வந்து கதவை திறந்து வாருங்கள் வாருங்கள் உட்காருங்கள் ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை வெகுவாக உபசரித்து வீட்டின் உள்ளே கூட்டிச் சென்று அமர வைக்கிறார். இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்! நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே. வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.

நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம். "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார். இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"



வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி
மதிவாணன்
mathish0610@gmail.com

No comments: