Sunday, January 29, 2012

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

சுயநலமற்ற தன்னார்வத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

தன்னார்வத் தொண்டு செய்வது என்பதே ஒரு பொதுச்சேவைதானே, இதில் சுயநலமென்ன? பொதுநலமென்ன? என்று கேட்கத்தோன்றலாம். ஆனால் சுயநலமாக இல்லாமல் பொதுநல எண்ணத்துடன் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதே உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்த கருத்தைத்தான் ஆரோக்கியத்துடன்கூடிய நீண்டகால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துகிறது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக `பொதுநல' நோக்குடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறது அமெரிக்க உளவியலாளர் சாரா கோன்ராத் தலைமையிலான ஆய்வு.

அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரின் சுமார் 10,317 உயர்கல்வி மாணவர்களை கடந்த 1957-ம்ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற (Wisconsin Longitudinal Study நஞ்ஞிக்ஷட் என்னும்) ஆய்வின் தகவல்களை பரிசோதித்தனர். இதில் கலந்துகொண்ட மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், அவர் களுக்கு கடந்த 2008-ம் ஆண்டில் வயது சராசரியாக 69.12 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், `பொதுநல' நோக்குடன் அல்லது இரக்க குணத்துடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்றும், மாறாக சுயநல காரணங்களுக்காக அல்லது சுய திருப்திக்காக ஈடுபடுவோரும், தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களும் ஒரே ஆயுட்காலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கடந்த 2004-ம் ஆண்டில், இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டோமா இல்லையா, தொடர்ந்து ஈடுபட்டோமா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும்,தன் னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டதற்கு காரணங்களாக சுமார் 10 கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரியப்படுத்த சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் மேற்குறிப்பிட்ட 10 கேள்விகளை கேட்பதற்கு, சுமார் 12 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டிலேயே, அவர்களுடைய உடல் ஆரோக்கியம், சமுதாய அந்தஸ்து (பொருளாதார நிலை), திருமண நிலை மற்றும் புகைப்பிடித்தல், உடல் எடை அளவீடு, மதுப்பழக்கம் போன்ற ஆரோக்கிய கேட்டுக்கான காரணிகள் என பல்வேறு விவரங்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே, இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள் எத்தனை பேர் கடந்த 2008-ம் ஆண்டில் உயிரோடு இருந்தார்கள் என்று நிர்ணயித்தார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 2,384 தன்னார்வலர்கள் அல்லாதவர்களில் 4.3 விழுக்காட்டினரும், சுயநல காரணங்களுக்காக தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர்களில் 4 விழுக்காட்டினரும், 10 கேள்விகளுக்கு பதிலலளித்த பின்னர் 4 ஆண்டுகளில் (2008ல்) நோய்வாய்ப்பட்டு இறந்துபோயினர். மாறாக, பொதுநல நோக்குடன் தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர் களில் வெறும் 1.6 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த 2008ல் இறந்து போயினர்என்கிறது இந்த ஆய்வு!

அட, ஆச்சரியமாக இருக்கிறதே! ஆமாம், இவர்களுக்குள் இருக்கும் இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

பிறரின் நலத்தை முன்னிலைப்படுத்தி தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோருக்கு தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளைச்சல்கள் அல்லது பிரச்சினைகளான `நேரவிரயம்' மற்றும் `சம்பளமின்மை' போன்றவை குறித்த பாதிப்போ, கவலையோ முற்றிலும் போவதுகூட இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சாரா கோன்ராத்!

ஆக, `சுயநலத்துடன் மேற்கொள்ளப்படும் தன்னார்வத் தொண்டுகளால் நமக்கு பயனிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிதர்சனம் முற்றிலும் நேர் மறையானது' என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இந்த ஆய்வு!

ஒரு வேளை இப்படியெல்லாம் நடக்கும் என்பது நன்றாக தெரிந்ததால்தான் `முல்லைக்குக் கூட தன் தேரைக் கொடுத்திருப்பாரோ' மன்னன் பாரி?
thanks vayal

No comments: