Monday, March 19, 2012

திருமூலர்

திருமூலர்
திருமூலரின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளவை சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துள் திருமூல நாயனார் புராணமும், நம்பியாண்டார் நம்பி திரு மூலரைப் பற்றிப் பாடிய பாடலும்34 ‘தமிழ் மூவாயிரம்’ என்னும் திரு மந்திரப் பாயிரத்தில் உள்ள ‘திருமூலர் வரலாறு’ என்னும் அதிகாரமு மாகும். இவற்றுள், பாயிரத்தில் உள்ள பல பாடல்கள் இடைச் செருகலாக உள்ளன.
திருமூலர் பொதிகை மலையில் அகத்தியரைக் காண்பதற்காகக் கயிலை மலையிலிருந்து தென் திசைக்கு வந்தார் என்ற பெரிய புராணச் செய்திக்குத் திருமந்திரப் பாயிரத்தில் ஆதாரம் யாதுமில்லை. மாறாக, ஆசிரியர் நூலினுள் அகத்தியரின் வரலாற்றைஅவர் பொதிய மலைக்கு வந்த காரணத்தை ஒரு புராணக்கதை போலக் கூறுகின்றார்35. அகத்தியர் பற்றிய வரலாறுகள் பல. அவற்றுள் எந்த அகத்தியர் திரு மூலருக்குச் சம காலத்தவர் எனத் தெரியவில்லை.
‘திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார், ஆண்டுக்கு ஒரு பாடலாகத் திருமந்திரப் பாடல்களை இயற்றினார்’ என்று சேக்கிழார் கூறும் செய்தி அவர் செவி வழிக் கேட்டதாதல் வேண்டும். திருமூலர் யோக ஆற்றலால் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால், யோகத்தில் 3000 ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொரு பாடலாகத் திருமந்திரத்தைப் பாடினார் எனக் கொள்ளுதற்குச் சான்றில்லை. மாறாக, திருமந்திரத்தின் பல பகுதிகளை நோக்கும் போது, அவை ஒருங்கே ஒரு காலத்தில் செய்யப்பட்டனவாகத் தோன்று கின்றனவே அன்றி, ஆண்டுக்கொரு பாடலாக வெளிப் போந்தவையாகத் தோன்ற வில்லை.
இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் திருமூலரின் காலத்தைக் கண்டறிவதில் இடர் பாடுகள் உள்ளமையைத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இங்கு ஒரு சில அகச் சான்றுகளைக் கொண்டு அவரது காலத்தை வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் திருத் தொண்டத் தொகையுள் ‘நம்பிரான் திருமூலர்’ எனக் குறிப்பிடுகின்றமையால், 8ஆம் நூற்றாண்டையே திருமூலரின் காலத்திற்குப் பின் எல்லையாகக் கொள்ளலாம். திரு மந்திரத்துள் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்னும் குறிப்பு வருகிறது36 சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுடன், கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் சேர்ந்து ஐந்து மண்டலங்களாக எண்ணப்படும் வழக்கு உண்டான பின்னரே திருமூலர் நூல் பாடியிருக்க வேண்டும். சங்க இலக்கியத் திலும், சிலம்பிலும் கொங்கரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன என்ற போதிலும் கொங்கு மண்டலம் என்ற குறியீடு இல்லை. தொண்டை மண்டலம் என்ற வழக்குப் பல்லவர் ஆட்சிக்குப் பின்னரே உண்டாயிற்று. பல்லவரின் ஆட்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம்நூற்றாண்டு வரை நிலவியது. திருமூலர் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார்37 சிற்றம்பலத்தில் முதன்முதலில் பொன்வேய்ந்தவன் 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னாகிய சிம்மவர்மன்1 ஆவான்.
தேவார காலத்திலும் அதற்குப் பின்னும் சமய, காப்பிய இலக்கியங்களைப் பல்வகை விருத்தயாப்புகளில் பாடும் வழக்கம் இருந்தது. திருமூலரோ கலிவிருத்த யாப்பையே மேற்கொண்டுள்ளார். இக்காரணத்தால் அவர் தேவார காலத்திற்கும் முன்பிருந்தவராதல் வேண்டும்.
வெள்ளை வாரணனார் திருமந்திரத்தின் சொற்கள், தொடர்கள் ஆகியவை மூவர் தேவாரத்திலும் ஆளப் பெற்றமையை எடுத்துக் காட்டுகின்றார்.
மேற்குறித்த காரணங்களைக் கொண்டு திருமூலர் நூல் பாடிய காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினை யொட்டிச் சற்று முன்பின்னாகக் கொள்ளப் படலாம்38.
நந்தியின் சீடர்கள்எண்மர். அவர்கள் ‘நாதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றவர். அவர்கள் நான்கு நந்திகள், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர், திருமூலர் என்போர்.39
திருமூலருக்குச் சிவன் ஏழுலட்சம் முறைகளைக் கூறினார். அவைகளைத் திருமூலர் செய்து பார்த்துத் தேர்ந்தார் அம்முறைகளைச் சுருக்கிச் கொங்கணர் பாடினார்.40
திருமூலர் அறிந்த முறைகளைக் கொங்கணர் பாடினார் என்றதனால் கொங்கணர் திருமூலரின் மாணவராதல் வேண்டும்.
திருமூலர் சோழனின் வேண்டுகோளுக்கிணங்க சிதம்பரத்தில் நடராசன் சிலையைத் தங்கத்தால் வார்த்துத் தந்தார் என்று அகத்தியர் குறிப்பிடுவதனால் திருமூலருக்கு அகத்தியர் சமகாலத்தவராகவோ அல்லது பிற்பட்டவராகவோ இருக்கலாம்.
“வெல்லுமே யினியென்ன இராசாளி முன்னே
மேவுமோ கொக்குகள் கொங்கணரே ஐயா
சொல்லுமே சட்டைமுனி சொன்ன வாரே
தூண்டினதை மூலரென் சிறிய தந்தை
பல்லுறவை படித்தாரே பிண்ணாக் கீசர்
பாடுமென்ற உரைப்படி பாடி னேனே”41
என்னும் மச்சமுனி உரையால், திருமூலர், கொங்கணர், சட்டைமுனி, பிண்ணாக்கீசர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவராவர்.
“செய்யவே திருநீல கண்டர் வைப்பு”
“நீலகண்டர் உரைத்திருத்த பாண்டம் கூட”
“உள்ளபடி திருநீல கண்டர் வித்தை
உற்றுப்பார் திருமூலர் உரைத்தா ரப்பா”42
என்பதனால், திருநீலகண்டரும் மச்சமுனியும் சமகாலத் தவராக கருதலாம்.
“பான்மையாம் கொங்கணரும் இந்த பாகம்
பாரினிலே களங்கமறச் சொல்ல வில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தி யருக்கு
மேதினியில் விளக்கமறச் சொல்ல வில்லை
வாண்மையுடன் புலிப்பாணி இந்த பாகம்
வசனித்தார் ஆயிரத்துவன் னூருக்குள்”43
“ஆமேதான் அகத்தியரும் முன்னே செல்ல
அன்பான தேரையரும் பின்னே செல்ல”44
எனவரும் போகரின் குறிப்புகளால் கொங்கணர், அகஸ்தியர், புலஸ்தியர், புலிப்பாணி, தேரையர் ஆகியோர் போகரின் காலத்தவர்களாகவோ முற்பட்டவர்களாகவே இருக்கலாம்.
“பொய்யுரையான் சத்தியங்கள் மெத்த வுண்டு
ஆகனவன் திண்டுடலன் குச்சிக் காலன்”45
போகர், பொய்யுரைக்காத வாய்மையாளர் என்றும் தடித்த உடலும் குச்சிக் காலும் கொண்டவர் என்றும் உரைப்பதனைக் கொண்டு, காகப்புசண்டரும் போகரும் சமகாலத்தவர் என்று கொள்ளல் தகும்.
“மெச்சுவேன் யாகோபு தேரை யாரை
வேணபொருள் வைத்திருக்கும் அகஸ்திய நாதன்
குச்சுப் போற் தானிருக்கும் கோரக்கன் தன்னை
குடுகுடுக்கைக் கஞ்சாவைக் கொட்டி மேய்ந்தான்”46
என்றதனால் யாகோபு, தேரையர், அகத்தியர், கோரக்கர் ஆகியோரின் காலமே காகப்புசண்டர் காலமும் ஆகலாம்.
“ஆளான ரோமரிஷி பாட்ட னுக்கு
அழகாக வந்துதித்த இராம தேவன்”47
ரோமரிஷி, இராமதேவர் ஆகியோரை போகரின் காலத்தொடு கூறலாம்.
“தெள்ளுதமிழ்க் கவிவாணர் இவர்க்கு ஈடுண்டோ?
செந்தமிழின் சுவையறிந்த சிவ வாக்கியர் தான்”48
என்றதனால் போகருடன் சிவ வாக்கியரை இணைத்துக் காணத் தோன்றும்.
நபிகள் நாயகத்தை யாகோபு கண்டு வந்ததாகப் போகர்49 குறிப்பிடுவதிலிருந்து நபிகள் காலமே சித்தர்களின் காலமும் ஆகலாம்.
சட்டமுனியின் உபதேசத்தால் ஞானம் பெற்ற பாம்பாட்டிச் சித்தர், வெகுகாலம் வாழ்ந்திருந்து, சமாதி அடைந்தார்50.
“சேக்கிழார் அறுபத்து மூவர் தானோ”51
என, காகப்புசண்டர் உரைப்பதனால் சேக்கிழார் காலத்திற்குப் பிற்பட்டவர் காகப்புசண்டர் எனலாம்.
“கோரக்கரும் போகரும் சம காலத்தவர் என்றும், இவர்கள் காலத்திலேயே பதினெண் சித்தர்களும் வாழ்ந்தனர் என்றும், அது கி.பி. மூன்றிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் பேராசிரியர். ந. சேதுரகுநாதன் கருதுகிறார்.”52
“போகர் சீன நாட்டைச் சேர்ந்த மண்பானை முதலியவற்றைச் செய்பவர் என்பர். இவரைப் பௌத்தத் துறவி என்றும் சீனப்பயணியாக 1600 ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டுக்கு வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான சில இடங்களைக் தரிசித்துவிட்டு தமிழ் நாட்டுக்கு வந்தவ ரென்றும் கூறுவர்”53
“கேளேநீ கலியுகத்தில் இருநூற் றைந்தில்
கேசரிபோல் புலிப்பாணி பேரும் பெற்றேன்”54
என்பதிலிருந்து கலி205இல் புலிப்பாணி என்னும் பெயரைப் பெற்றதாக உரைப்பதிலிருந்து இவரின் காலம் (கிறித்து ஆண்டு, கலியாண்டு 3101லிருந்து துவங்குகிறது) 3101205 = 2896, கி.மு. 2896 என்றாகிறது. புலிப்பாணி போகரின் மாணவராகக் கருதப் படுவதனால் அதுவே, போகரின் காலமாகலாம்.
“சோழ நாட்டில் காவிரி நதியின் பாங்குற்ற கொள்ளிட நதி தீரத்தில் அமைந்துள்ள பரூர்ப்பட்டி என்னுஞ் சிற்வுரில் உள்ள, சடையப்ப கவுண்டன் என்பவர் என்னை அனுசரித்து வாழ்த்தி நின்றார். ஆங்கே, பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில், சமாதி நிலையுடைந்தேன். சித்தனாகிய எனக்கு மரணம் என்பதோ இல்லை. அதே போன்று, பரிவிருத்தி ஆயிரத்து நூற்றியிருப்பதாறாவது ஆண்டில் சமாதி அடைந்த சித்தர்களுடன் வெளியே வந்து, கருணையுடன் மக்களை ஆள்வோம்.”55 என்பதால் கோரக்கர் காலம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 என்றாகும்.
“உத்தமஞ்சி வாடுசுமி நீ வெனவே
மனர் வடுகி லுரைத்தல் போல்”56
என்று தெலுங்கு வேமன்னரைக் குறிப்பிடுவதனால், வேமன்னர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர்57 என்பதால் தேரையரையும் 15ஆம் நூற்றாண் டெனலாம். மேலும் “உருளைக் கிழங்கு கற்பம்” பற்றி கரிசலில் குறிப்பிடுவதனால், உருளைக் கிழங்கு தென்னிந்தியாவுக்கு வந்தது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு என்று அறிவதனாலும் தேரையர் சற்றேறக் குறைய 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு58 என்பர்.
உருளைக் கிழங்கு, தேரையர் காலத்தை அறியப் பயன்படுமா என்பதில் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் விளை பொருளாக ஆனது 16 ஆம் நூற்றாண்டு அவ்வளவே, பொருளாகவோ, மருந்தாகவோ அதற்கு முன்பிருந்தும் வந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் வேமன்னர் பற்றிய குறிப்பு காணப்படுவதிலிருந்து ஓரளவுக்கு வேமன்னர் காலத்தொடு தொடர்பு இருப்பதாகக் கருதலாம். என்றாலும், பதிகப்பாடல்கள் மூலநூலாசிரியர் தான் இயற்றினார் என்பதிலும் ஐயம் தோன்றுகிறது.
தமிழில் உள்ள மருத்துவ நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிவதில் பெருத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளைக் கூறுமிடத்து ஒன்றுக் கொன்று மாறுபட்ட தகவல்களாகவே இருக்கின்றன.
அகத்தியர் என்னும் சித்தர்காலத்தைக் கண்டறிந்த அறிஞர்கள், அகத்தியர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியம் போன்றவற்றில் 37 பேர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களில் மருத்துவம் போன்ற முறைகளைச் செய்த அகத்தியர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகவும் கருதுகின்றனர்.
மருத்துவ நூலுள் காணப்படும் செய்திகளைக் கொண்டு பார்த்தால், திரு மூலருக்கும் அகத்தியருக்கும் தொடர்பிருந்தது தெரிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரோடு எப்படித் தொடர்பு கொண்டிருக்க முடியும்?
கோரக்கர் நூல், கோரக்கர் கி.பி. 1233இல் சமாதி அடைந்தாகக் கூறுகிறது. ஆனால், அந்நூல் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
போகர், 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பர். புலிப்பாணி, தன்நூலில் போகருக்குப் பின் தான் பழனி கோயில் முறையைச் செய்யத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிடும் போது, அது கி.மு. 2896 எனத் தெரிகிறது. அப்படியானால் புலிப்பாணி போகரின் மாணவர் என்பது பொருந்தாது. அதே போல் தேரையர் கி.பி. 16ஆம் நூற்றாண்டு என்பர். இவரும் போகரின் மாணவர் என்பர் இதுவும் பொருந்தவில்லை.
திருமூலரும் போகரும் சமகாலத்தவராக மருத்துவ நூல் கூறுகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரும், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போகரும் எப்படிச் சமகாலத்தவராகக் கருத முடியும்? என்றாலும், ஒரு சில ஆண்டுகள் முன் பின்னாக இருந்து, இவ்விருவரும் சமகாலம் என்பது ஓரளவுக்கு ஒத்துப் போகலாம். மற்ற சித்தர்கள் காலம் ஒத்துக் காணப்படவில்லை.
எனவே, தற்போது வழங்கி வரும் நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிய முயல்வது முறையாகத் தோன்றவில்லை. அவை அனைத்தும் பிற்காலத்தில் பலரால் இயற்றப் பெற்றவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்பைத் தங்கள் மனம் போனவாறு இணைத்துக் கூறியுள்ளனர்.

No comments: