Sunday, April 15, 2012

பூச்சிகள் ஜாக்கிரதை!

பூச்சிகள் ஜாக்கிரதை!
by vayal

நமக்கு பாம்பு, தேள், பூரான் தவிர விஷ ஜந்துக்கள் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் பயமும் இல்லை. ஷாக்கடிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் மிகச்சிறிய ஒரு பூச்சிதான். ஸ்க்ரப் டைஃபஸ் என்ற அந்தப் பூச்சி படுத்தியப்பாடு இருக்கிறதே!
ஒரு மாதத்துக்கு முன் திடீரென்று என் மகள் ப்ரியா காய்ச்சலில் அவசியுற்றாள். 104 டிகிரி காய்ச்சல் இறங்கவேயில்லை. ஆன்டிபயாடிக் எதற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை சோர்வு, எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லா மருத்தவ பரிசோதனைகளிலும் “நெகடிவ்’ என்றே ரிசல்ட் வந்தது. ஏழு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கொஞ்சமும் இறங்காததால் பதறிப்போய் பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.
அப்போது ப்ரியாவின் காலில் பளபளவென ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் ஒன்று தோன்றியது. ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல அது இருந்தது.
அதைப்பார்த்த மருத்துவர்கள், இது ஸ்கரப் டைஃபஸ் தான் என்று உறுதியாகக்கூறி சிகிச்சை அளிக்க, காய்ச்சல் இறங்கியது.
எந்த இடத்தில் டைபஸ் பூச்சி கடித்ததோ அதே இடத்தில் எஸ்கார் என்கிற இத்தகைய அடையாளம் தோன்றுமாம்.
எறும்பு போன்ற மிகச்சிறய பூச்சியான இது, அதிகமாக செடி, புதர்களில் காணப்படும்.
முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
காய்ச்சல் கண்ட ஏழு நாட்களுக்கு பின்பும் இது கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோயாளிகளின் மூளை, இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுமாம். தசைகளைத் தாக்கி நோயாளிகளை மாதக்கணக்கில் பலவீனமாக்கும் தன்மை இதற்கு உண்டு.
இந்தப் பூச்சியின் பாதிப்பு மாவீரன் நெப்போலியன் காலத்திலேயே அதிகம் இருந்ததாம். 1812ஆம் ஆண்டு அவர் மாஸ்கோவில் இருந்து படையுடன் திரும்பும் போது, போரினால் இறந்த அவர் வீரர்களை விட இந்தப் பூச்சி கடியினால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதனாலேயே அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டதாம்.
சமீபத்தில் தமிழகத்தின் சில இடங்களில் டைஃபஸ் நோய் முன்பைவிட அதிகம் காணப்படுகிறதாம். உடலில் தோன்றும் எஸ்கார் என்ற இந்த அடையாளத்தை பார்த்தும் இதைத் தவற விடும் மருத்துவர்களும் உள்ளனராம்.
நன்றி-மங்கையர் மலர்

No comments: