Saturday, June 30, 2012

வேதாத்திரி மகரிஷி ஐக்கிய நாடுகள் சபை

வேதாத்திரி மகரிஷி ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபையில் வேதாத்திரி மகரிஷி ஆற்றிய உரை
(9 சனவரி, 1975) (ஆங்கில உரையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.)

அன்பான நண்பர்களே,
ஆன்மீக மேம்பாடு பற்றிக் கேட்பது என்ற நல்ல நோக்கத்தோடு இங்கு குழுமியிருக்கும் உங்களனைவரையும் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மீக அறிவு என்பது வாழ்க்கையை முழுமையாக்குவதற்கும், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், உலக மக்கள் அனைவரது வாழ்விலும் அமைதியைப் பராமரிப்பதற்கும், மிக அவசியமான ஒன்றாகும்.
மிகப் பெரிய நிறுவனமான ஐக்கியநாடுகள் சபை இதற்காகத் தொடங்கப்பட்டது. மனிதகுலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஐ.நா. சபை இயங்கி வருகின்றது. அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அமைதியைக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை மிகக் கடினமாக உழைக்கின்றது.

எல்லா நாட்டுப் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து உலக அமைதியைப் பற்றி எண்ணுவதற்கான ஒரு நல்ல திட்டமே ஐக்கிய நாடுகள் சபை. ஆபத்தான அணு ஆயுதங்களுக்கு எதிராக மனித இனம் உயிர் வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை உலக சமாதானமாகும்.
தத்துவ ஞானத்தில் சிறந்தவர்களும், உலகளாவிய எண்ணங்களில் சிறந்த அறிஞர்களும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் நற்பணிகளைப் பாராட்டுகிறார்கள்.

ஆன்மீக அறிவு மேம்பாடு
இங்கே, நான் உலக அமைதிக்கு மிக முக்கியமான மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. அது மனித இனம் ஆன்மீக அறிவில் மேம்பாடு அடைவதாகும்.
உண்மையிலேயே, அமைதியான வாழ்க்கைக்குப் பொருளாதார வசதிகள் அவசியமானவை. ஆனால் ஆன்மீக அறிவு இல்லாமல், பொருள் வசதிகள் மட்டும் வாழ்க்கையில் திருப்தியையும், அமைதியையும் கொண்டு வர முடியாது. இங்கு ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.

உணவு, உறைவிடம், உடை ஆகியவை உலகியல் வாழ்வில் அவசியமான பொருட்கள். உலகையும் இம்மூன்று அவசியமான பொருட்களின் சேமிப்பையும் அகக்காட்சியாகப் பாருங்கள்.
துணிகள் உற்பத்தியை உலகம் இன்று உடனடியாக நிறுத்தி விட்டாலும் இப்போது நாம் உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ள துணிகள் எல்லா மக்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமானதாக உள்ளன. இதுபோல், சேமித்து வைத்துள்ள உணவு ஓராண்டிக்குப் போதுமானதாக உள்ளது. உறைவிடமும் ஒருவருக்குத் தேவையான பரப்பளவிற்கு எடுத்துக் கொண்டால், யாருக்கும் உலகில் வீடு இல்லை என்று தவிக்க வேண்டியதில்லை.
சில மனிதர்களிடமும் சில நாடுகளிலும் இந்த வசதிகள் குறைவாக இருக்கலாம். மற்ற மனிதர்களிடமும் நாடுகளிடமும் இவை உபரியாக உள்ளன.

ஆன்மீக அறிவின் மேம்பாடுதான் இவ்வாழ்க்கைத் தேவைகளை உலக மக்களுக்கு அன்பு, மதிப்பு, பொறுப்பு இவற்றுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கின்றது.
ஆன்மீக வளர்ச்சியினால் ஒரு மனிதனிடம் இயற்கையாக மலர்கின்ற அன்பு மற்ற மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வைக்கிறது. அன்பு மற்றவரது தேவைகளையும் ஆசைகளையும் மதிக்கின்றது. திருப்திகரமான வாழ்க்கைக்கு, மற்றவர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அன்பு உதவுகிறது. ஒருவரது அன்பு தனது சொந்த உடலுழைப்பையும், பொருளாதார வசதியையும், அறிவாற்றலையும் மற்றவர்களுக்குத் தந்து, தியாக உணர்வுடன் விரும்பி வாழ உதவுகிறது.
அரசியல், பொருளாதார வழிகளில் ஒருவரது வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்த முயற்சிகள் எடுப்பதோடு, மனித சமுதாயத்தில் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்பட ஒரு வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில், தகுதியுடைய மக்கள் அனைவரும் ஆன்மீக அறிவில் குறிப்பிட்ட காலத்தில் மேம்பாடு அடைவர்.

ஆன்மீக மேம்பாடு என்றால் என்ன? என்பதைக் கவனிப்போம். வாழ்கின்ற முறையில் மனம்தான் மையப் பொருளாக உள்ளது. சிறப்பான இயக்கமாக உள்ளது. ஒருவன் மனதின் மதிப்பையும், அதன் அற்புதமான செயலையும் புரிந்து கொள்ளும்போது, அவனால் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறது.

உயிரும் மனமும்
உயிரின் படர்க்கை நிலையே மனம் என்பதால், முதலில் உயிரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வோம். ஏனெனில், உயிர்தான் மனதிற்கு அடிப்படை. உயிரும் மனமும் மனிதனின் அறிவாட்சித் தரத்தில் (ஆளுமைத்திறனில்) இரகசியமான அம்சங்கள். ஐம்புலன்கள் மூலம் பெறும் அறிவைக் கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

ஓர் ஒழுங்குமுறையான மனப்பயிற்சியின் மூலம்தான் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும். மனம் அதனுடைய மூலத்தைத் தேடுவதும், உயிர், மனம் இவ்விரண்டின் இருப்பையும், அவற்றின் இயக்கத்தையும், இவை ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள தொடர்பையும் புரிந்து கொள்ள மனப்பயிற்சி உதவுகிறது. இத்தகைய மனப்பயிற்சிதான் ‘தவம்’ அல்லது ‘எளியமுறை குண்டலினி யோகம்’ எனப்படுகிறது.

குண்டலினி என்ற பெயர் இறையாற்றலைக் குறிக்கிறது. இது பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஆற்றல்களுக்கும் அடிப்படையான உயர்ந்த பேராற்றல். உயிரினங்களிலுள்ள உயிராற்றல் இறைநிலையின் பேராற்றலின் ஒரு பகுதிதான். இறைநிலையின் பேராற்றல்தான் பிரபஞ்சத்தின் இயக்கங்களை வழி நடத்துகிறது. உண்மையிலேயே அடிப்படையான விண்துகள்களின் தொகுப்புதான் வெவ்வேறு திணிவுகளுடன் விளங்கும்போது தோற்றப் பொருட்களாக அமைகின்றன.
எனவே, விண்துகள் (அல்லது உயிர்த்துகள்) தான் பௌதிகத் தோற்றப் பொருட்கள் உற்பத்திற்கு அடிப்படையான தத்தவமாகவும், மனம் மன இயக்கத்திற்கு அடிப்படையானதாகவும் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்துகள், அதன் இருப்பு, இயக்கம், விளைவு இவற்றை அறிந்து உணர்ந்து கொள்ளுதலே ‘ஆன்மீக அறிவு’ எனப்படும். இந்த அறிவுதான் எல்லா விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானம் ஆகும். பொருளாதார அறிவோடு மட்டும் வாழுதல் என்பது மனதிற்கு ஒருபுறம் பாரமாக இருக்கும். அதைச் சரிசமன் செய்வதற்கு ஆன்மீக அறிவு கட்டாயம் தேவை.

உயிரை உணர்தல்
நமக்குள் உயிராற்றலாக இயங்குகின்ற உயிரை எப்படி உணர்ந்து கொள்வது? உயிர்த்துகள் உடல் முழுவதும் ஊடுருவிச் சென்றாலும் பரு உடலின் நடுப்பகுதியில் ஓர் இயக்க மையம் உயிருக்கு அமைகின்றது. பொதுவாக, உயிரின் இயக்க மையம் என்பது முதுகுத்தண்டின் அடியில் அமைந்து உள்ளது. இதை ‘மூலாதாரம்’ என்று முந்தைய யோகியர்கள் அழைக்கின்றனர்.
இந்த உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைச் சக்கரம் என்ற புருவ மத்திக்கு மாற்றி அமைத்தாலன்றி, உயிரின் இருப்பையும் இயக்க நிலையையும் மனதால் உணர முடியாது.

முற்கால யோகிகள் மூச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும் இந்த உயிர் மையத்தை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால், இவ்விரண்டு முறைகளும் கடினமானவை. அதிகக் காலம் எடுத்துக் கொள்பவை. சக்தியை மேலே கொண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டும்.
இதற்கிடையில் இந்த ஆற்றலை மேலே கொண்டு வரும்போது, வழியில் தடை ஏற்பட்டால், உயிருணர்வு பெறுபவர் சில தீய விளைவுக்கான பயன்களை அனுபவிக்க நேரிடும். எனவே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டோர் இந்த யோகத்தின் நன்மைகளை உணர முடியாமல் போயிற்று.

குருவானவர் குண்டலினி சக்தியின் இயக்க மையத்தை மாற்றி, நிலை நிறுத்தியவுடன் கற்பவர் உயிர்ச்சக்தியின் அழுத்தத்தைப் புருவமத்தியில் மனதால் கவனிக்க வேண்டும். இந்த வழிமுறையே ‘தவம்’ எனப்படும். உயிராற்றலை மனதால் கவனிக்கும்போது மனதின் விழிப்புநிலை முன்னேற்றம் அடைகிறது. உயிராற்றல் வீணாகச் செலவாவதைச் சேமிக்கிறது. மனதில் உறுதியையும் அமைதியையும் அதிகப்படுத்துகிறது.
மனம் அதன் அடிப்படையான உயிரைக் கவனிக்கின்றபோது உயிரும் மனமும் இருப்பதையும் இயங்குவதையும் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பையும் செய்முறை பயிற்சியின் அனுபவத்தால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தவத்தில் தெளிவாக இறைநிலையை உணர்ந்த குருவின் மூலம் ஆன்மீக சாதனை கற்பவரின் உயிராற்றலை, குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஆக்கினை மையத்திற்குக் கொண்டு வந்து, நிலை நிறுத்தி, உணர வைப்பது ‘தீட்சை’ எனப்படும். இது ஆன்மீக சாதனைப் பயிற்சியில் முதல்படி. மேலும் சில பயிற்சிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் கற்றுப் பழக வேண்டும்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்களான (World Community Service Center WCSC) நாங்கள் இந்தக் குண்டலினி தவத்தை ‘எளியமுறைக் குண்டலினி யோகம்’ (Simplified Kundalini Yoga SKY) என்று அழைக்கிறோம்.

www.vethathiri.edu.in
http://en.wikipedia.org/wiki/vethathiri_maharishi
www.facebook.com/groups/vethathiriyam
www.facebook.com/groups/vazhgavalamudan
www.facebook.com/vethathiriyam
www.facebook.com/vethathiriyoga
www.youtube.com/vinborntowin

எளியமுறைக் குண்டலினி யோகம் (SKY)
இது நான்கு பயிற்சி முறைகளை உள்ளடக்கியது. அவை:
1) அகத்தவம் (Meditation) 2) அகத்தாய்வு (Introspection)
3) குணநலப்பேறு (Sublimation) 4) முழுமைப்பேறு (Perfection)

அகத்தவம் மன உறுதியையும் மன அமைதியையும் பெருக்குகிறது.
அகத்தாய்வு அறிவு ஒளி வீசச் செய்கிறது. ஒருவரது வாழ்க்கையில் ஒளி விளக்காக வழி காட்டுகிறது.
குணநலப்பேறு ஒருவரது பழக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி, நல்ல குணங்களை உண்டாக்குகின்றது.
முழுமைப்பேறு என்பது ஆன்மீக மேம்பாட்டில் சிறப்பாகக் கிடைத்த கனி.

இந்த எளியமுறைக் குண்டலினியோகம் முழுவதையும் பத்து (10) வகுப்புகளில் (வகுப்பிற்கு ஒரு மணி நேரம் என்ற முறையில்) கற்றுக் கொள்ள முடியும்.

அன்புள்ள நண்பர்களே,
மனிதன் பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற விநோதமான உயிரினம். ஒழுங்கான ஆன்மீகப் பயிற்சியின் மூலம் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொண்ட பின்னர்தான், மனிதன் முழுமைப்பேறு என்ற இலட்சியத்தை அடைய முடியும்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கமே ஆன்மீக அறிவை எல்லா நாட்டு மக்களுக்கும் பரப்புவது ஆகும். என்னுடைய வாழ்வில் நாற்பது (40) ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு ஆன்மீக அறிவு மட்டுமே தனிமனிதனிடத்திலும் சமுதாயத்திலும் நாடுகளுக்கிடையேயும் அமைதியை விளைவிக்கும் என்பதை நான் கண்டு கொண்டேன். ஆன்மீக மேம்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பான, முழுமையான முறையை நான் வழிவகுத்தேன். அதைத் தகுதியான மனிதர்களுக்குப் போதித்து வருகிறேன்.

அற்புதமான உளப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்ற எந்த நண்பருக்கும் என்னுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இச்சொற்களோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நீங்களனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், அமைதி பெற்று, ஓங்கி வாழ்க வளமுடன்” என வாழ்த்துகிறேன்.

No comments: