Friday, July 6, 2012

தைராய்டு பிரச்னையை தவிர்க்கலாம்!

தைராய்டு பிரச்னையை தவிர்க்கலாம்!



தீக்ஷாவுக்கு வயது 14. எப்போதும் துறுதுறுவெனத் திரிவாள். திடீரென தீக்ஷாவுக்கு உடம்பு ஊத ஆரம்பித்தது. 'இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்கை, அதனால் உடல் எடை அதிகரித்திருக்கும்’ என்று தொடக்கத்தில் அவளுடைய பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், எல்லோரும் 'குண்டூஸ்’ என்று கிண்டல் அடிக்க ஒருகட்டத்தில் பள்ளிக்கூடம் செல்லவே தீக்ஷா வெட்கப்பட்டாள். தன்னுடைய உறவினர்கள் முன்பு வரக்கூட அச்சப்பட்டாள். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் உடல் எடை மட்டும் குறையவில்லை. கடைசியில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. அவளுக்கு தைராய்டு பிரச்னை இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. 'இந்த வயதில்கூட தைராய்டு பிரச்னை வருமா?’ என்று அதிர்ச்சி அடைந்தனர் அவளது பெற்றோர்.
தைராய்டு பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நமது உடலின் சீரான இயக்கத்துக்கு உதவுகின்ற பல்வேறு உறுப்புகளில் முக்கியமானது தைராய்டு சுரப்பி. இது முன் கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் இருந்து சுரக்கின்ற முக்கிய ஹார்மோன்கள், தைராக்சின் மற்றும் டிரைஐயோடோதைரோனின். நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராகச் செயல்பட, இந்தஹார்மோன்களின் பங்கு ரொம்ப முக்கியம். ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் இருந்து வெளிவரும் சில ஹார்மோன்கள், தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவுகின்றன.
தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரத்தல், தைராய்டு சுரப்பியில் வீக்கம் அல்லது கட்டிகள் உண்டாகுதல் என தைராய்டு சுரப்பியில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பதால் உடலின் இயக்கம் குறையும். உடலில் நீர் அதிகரித்தல், உடல் சோர்வு, தோல் வறட்சி, இதய நோய்கள், மாதவிடாய்ச் சிக்கல்கள் போன்றவை ஏற்படலாம். உடலில் நீர் சேர்வதால், உடல் எடை அதிகரித்து பருமன் போன்ற தோற்றத்தை அளிக்கும். கர்ப்பக் காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், கருவில் உள்ள குழந்தைக்கு முதல் 12 வாரங்கள் வரை தைராய்டு சுரப்பி உருவாவது இல்லை.
எனவே, முதல் மூன்று மாதங்கள் வரை தாயின் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைக்கொண்டே கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், தாய்க்கு ஏற்படும் தைராய்டு குறைபாடு குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் சின்னதொரு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கருத்தரிப்பதற்கு முன்பே பெண்கள் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
திருமணமான இளம்பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு குறைபாட்டினால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு, கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர தைராய்டு குறைபாடு என்பது குழந்தைகளையும் பாதிக்கும். உயரம் குறைதல், பள்ளிப் பாடங்களில் கவனமின்மை உள்ளிட்டக் குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் உடல் எடை குறைதல், படபடப்பு, அதிகமாக வியர்த்தல், கை கால் நடுக்கம், அதிகப் பசி, வயிற்றுப்போக்கு மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன் நம் உடலில் உருவாக உதவும் முக்கியமான தாதுப்பொருள் அயோடின். தைராய்டு குறைபாடு மற்றும் முன் கழுத்துக் கழலை ஏற்பட முக்கியமான காரணமும் அயோடின் குறைபாடுதான்.
தைராய்டு சுரப்பியில் குறைபாடு ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆட்டோ இம்யூனிட்டி என்று சொல்லப்படும் தன் எதிர்ப்பு ஆற்றல் தன்மையாகும்.
ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைப் பரிசோதிப்பதே, தைராய்டு பிரச்னைகளைக் கண்டறிய எளிதான வழி. தைராய்டு சுரப்பியில் வீக்கம் மற்றும் கட்டிகள் ஏற்பட்டால், அல்ட்ரா சோனோகிராம் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மேலும் கட்டிகளில் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளனவா என அறிந்துகொள்ள ஊசி மூலம் தைராய்டு சுரப்பியை ஆய்வுசெய்யும் எப்.என்.ஏ.சி (Fine Needle Aspiration and Cytology) எனப்படும் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
பெருவாரியான தைராய்டு பிரச்னைகளை அறுவை சிகிச்சையின் அவசியம் இன்றி மாத்திரைகள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். சரியான அளவில் மாத்திரைகளை உட்கொண்டு, உரிய நேரத்தில் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்துவந்தால், தைராய்டு பிரச்னை உள்ளவர்களும் மற்றவர்களைப் போல இயல்பாக செயல்பட முடியும். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் தைராய்டு பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், தைராய்டு பிரச்னை வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் உணவில் காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். இது முன் கழுத்து கழலை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தைராய்டு அதிகமாகச் சுரக்கும் பிரச்னை உள்ளவர்கள் அயோடின் அதிகமாக இருக்கும் கடல் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
புகை பிடித்தல் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கச் செய்யும். எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, வருடத்துக்கு ஒரு முறை பரிசோதனை போன்றவையே தைராய்டு பிரச்னை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
தொகுப்பு: பா.பிரவீன்குமார்
thanks : Doctor vikatan

No comments: