Friday, October 21, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிப்பும் தடிப்பும் நீங்க...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அரிப்பும் தடிப்பும் நீங்க...!

என் வயது 49. வாயுவையும் பித்தத்தையும் அதிகரிக்கும்
பொருட்களைச் சாப்பிட்டால் எனக்கு உடல் அரிப்பும் தடிப்பும் தொடங்கிவிடுகிறது. ஆனால் நான் அரிப்புக்குக் காரணம் கபம் என்று படித்தேன்.
இந்த கப, பித்த, வாயுவின் சீற்றங்களைக் குறைத்து
என் உடல் ஆரோக்கியம் மேம்பட வழிகள் எவை?
ஷாகிதா, சென்னை.
மருந்தளிப்பது இருவகையாகும். ஒன்று சோதனம் -
மருந்து கொடுத்து உடலுக்குள்ளிருந்து சீற்றமுற்ற வாத பித்த கப தோஷங்களை வெளியில் வரச் செய்வது. இரண்டாவது சமனம் - உடலுக்குள்ளேயே சீற்றமுற்ற தோஷங்களைத் தணித்து நிறுத்தல்.
வாத தோஷத்திற்கான சிறந்த சோதனமுறை வஸ்தியும், சிறந்த சமனமுறை தைலமுமாகும். வஸ்தி என்றால் ஒரு குழாய் போன்ற கருவியினால் ஆசன வாய் வழியாகத் தைலம், மூலிகைக் கஷாயம்
போன்றவற்றைச் செலுத்தி, குடலைக் கழுவுவதற்கான முயற்சியாகும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக உடலெங்கும் தேய்த்து 1/2 - 1 மணி நேரம் ஊறி வெதுவெதுப்பான தண்ணீரில், காலையில் குளிப்பதும் அல்லது விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலுடன் சாப்பிட்டு, குடலிலுள்ள வாயுவின் சீற்றத்தை இதமாக அடக்குவது போன்றவை சோதன - சமன முறைகளில் சிறந்தது.
பித்த தோஷத்திற்கான சிறந்த சோதன முறை விரேசனமாகும். பித்தத்தைப் பேதி மூலம் வெளியேற்றும் முறை. உடல் வலுவில்லாமல், தோஷமும் குறைவாக இருந்தால், பித்தத்தின் சீற்றத்துக்குச் சமனம் எனும் அணுகுமுறையே சிறந்தது. திக்தககிருதம், தாடிமாதிகிருதம், விதார்யாதிகிருதம் போன்ற நெய் மருந்துகளால் இது சாத்தியமாகும்.
கப, தோஷ சீற்றத்துக்குச் சிறந்த சோதனம் "வமனம்' எனப்படும் வாந்தி செய்வித்தலாகும். வாந்தி ஆகும்போது, இளகிய கபமும் வெளியேறிவிட்டால், உடல் உட்புற உறுப்புகள் சுத்தமாகும். ஆனால் வாந்தி சிகிச்சை செய்து கொள்ள முடியாத வலுவற்ற உடல் நிலைகளில், தேன் மருந்தாக அதாவது சமனம் எனும் அருமருந்தாகப் பயன் தரக்கூடும். கபத்தைக் குறைக்கும் சூரண மருந்துகளுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால், கபத்தின் சீற்றமானது விரைவில் மட்டுப்படும்.
தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களைச் சம
நிலையில் நிறுத்த உணவு, உறக்கம், உடலுறவு இவை மூன்றும் முறைப்படி யுக்தியாக அமையப் பெற உடல் நிலைத்து நிற்கும். ஒரு வீடானது தூண்களால் தாங்கப் பெறுவதுபோல் இவை மூன்றும் உடலைத் தாங்குகின்றன. உடலுறவு நடுவயதில் மட்டும் உதவும். மற்ற இரண்டும் வாழ்நாள் முழுவதும் தாங்கும் தூண்கள்.
"கபம் வினா கண்டூ:' அதாவது கபமில்லாமல் அரிப்பில்லை என்ற சித்தாந்தத்தை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். அதனால் திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமநிலையை அடைய, முன் குறிப்பிட்ட சோதன - சமன முறைகளை நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் எடுத்துக் கொள்ளவும்.
"ஹரித்ராகண்டம்' எனும் ஆயுர்வேத மூலிகைப் பொடி மருந்தை காலை, மதியம், இரவு 1 ஸ்பூன் (5 கிராம்) உணவுக்கு முன்பு தொடர்ந்து சாப்பிட்டு வர, உங்களுடைய அரிப்பும் தடிப்பும் குறைய, அதிக வாய்ப்பிருக்கிறது.
கருங்காலிக்கட்டைத் தண்ணீரைக் குடிப்பதும் நலமே. சுமார் 15 கிராம் கருங்காலிக் கட்டை, 1 லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து, 1/2 லிட்டராகக் குறுக்கி, ஒருநாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகி வரவும்.

நன்றி : தினமணி கதிர்

No comments: