Friday, October 21, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் -பொடுகு

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம் -பொடுகு
எனக்கு வயது 25. தலையில் அரிப்பும், பொடுகும், முடிகொட்டுவதாகவும் இருக்கிறது. தலை வறண்டு, வெடித்து, செம்பட்டை முடிகளால் அவதிப்படுகிறேன். இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா? ஜி.லதா, சிதம்பரம்.
தலையிலுள்ள தோல் பகுதிக்கு எண்ணெய் பதமிடுவது மிகவும் அவசியம். அப்படிப் பதமிடுவதால் தலை முடிக்கும் அது பயன் தருகிறது. நீங்கள் காலையில் குளிப்பதற்கு சுமார் 3/4 மணி - 1 மணி நேரம் முன்பாக, ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய தூர்வாதி கேர (தேங்காய் எண்ணெய்) தைலத்தை பஞ்சில் முக்கி எடுத்து, தலைமுடியை நன்றாகப் பிரித்துவிட்டு, மயிர்க் கால்களில் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு, மருதாணி இலை, எள், அதிமதுரம், நெல்லிக்காய் இவற்றைப் பால் விட்டு
அரைத்துப் பால்விட்டுத் தளர்த்தி சிறிது சுட வைத்து, எண்ணெய் தடவிய தலையில் சிறிது நேரம் அப்பி ஊற வைத்துக் குளிக்க நல்லது. அதுபோலவே, கரிசலாங்கண்ணி இலையையும், நெல்லிக்காய்களையும், அதி மதுரத்தையும் அரைத்துப் பூசிக் குளிக்கலாம். இப்படிச் செய்வதால், தலைமுடியிலும், தோலிலும் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். உங்களுடைய கடிதத்தில் ஷாம்பு உபயோகிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சீயக்காய்த் தூள் மட்டுமே உபயோகிப்பதாகவும் எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் சீயக்காய் தூளிலுள்ள வறட்சியைக் குறைக்க நெல்லிக்காய் வற்றல், வெந்தயம், காய்ந்த எலுமிச்சம் பழத்தோல் முதலியவற்றுடன் சேர்த்து அரைத்து, சாதம் வடித்த கஞ்சியில் இவற்றைக் குழைத்துத் தேய்த்துக் கொள்வதும் நல்லதே.
உடல் சூட்டால், தலையில் பொடுகும், அரிப்பும் ஏற்படலாம். குடலில் மலப் பொருட்கள் தங்கத் தங்க, உடலில் அழற்சியும் சூடும் அதிகமாகும். அதனால், அதை வெளியேற்ற ஆயுர்வேத மூலிகை லேகிய மருந்தாகிய திரிவிருத் லேகியத்தைச் சுமார் 10-15 கிராம், காலையில் குடித்த கஞ்சி, செரிமானம் ஆன நிலையில், மதிய உணவுக்கு முன் நக்கிச் சாப்பிடவும். நீர்ப்பேதியாகி, குடலிலுள்ள மலமும் அழுக்கும் நீங்குவதால், உடற்சூடு நன்றாகக் குறைந்துவிடும். மாதம் ஒருமுறை இப்படிச் செய்து கொள்ளலாம்.
நீங்கள் மனதையும் அமைதியுடன் வைத்திருக்கப் பழக வேண்டும். மனதில் எழும் கோபதாபங்களால் உடல் சூடு அதிகரித்து தோலில் வறட்சி ஏற்படும். மனத்தின் அமைதிக்கான நற்பண்புகள் உங்கள் உபாதையைக் குறைக்க உதவும். இரவில் படுக்கும் முன் உள்ளங்கால்களுக்குத் தேங்காய் எண்ணெய்த் தடவி கொள்வதன் மூலமாகவும் உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளலாம்.
தலைக்கு விட்டுக் குளிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருத்தல் நலம். குளோரின், ப்ளீச்சிங் பவுடர் போட்ட தண்ணீரைத் தலையில் விட்டுக் குளித்தால், வறட்சி ஏற்பட்டு, பொடுகு ஏற்படலாம். தண்ணீரை ஒரு பாத்திரத்திலூற்றி, இரவு முழுவதும் ஆடாமல் வைத்திருந்து, மறுநாள் காலை துணியால் வடிகட்டி, தலை குளிக்கப் பயன்படுத்தவும்.
உள் மருந்தாக, நாரசிம்ஹ ரசாயனம் எனும் லேகிய மருந்தைக் காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில் சுமார் 5 - 10 கிராம் நக்கிச் சாப்பிடவும். தொடர்ந்து 3 - 6 மாதங்கள் வரை சாப்பிடலாம்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
நன்றி : தினமணி கதிர்

No comments: