Tuesday, November 1, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தீராப் பசிக்கு என்ன காரணம்?
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

என் வயது 21. சைவ, அசைவ உணவுகளை வயிறு முட்டச் சாப்பிட்டாலும் 15 நிமிடங்களில் மீண்டும் பசி எடுத்துவிடுகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுகிறேன். இவ்வளவு சாப்பிட்டும் உடல் மெலிந்து காணப்படுகிறேன். என்னுடைய தீராப் பசிக்கு என்ன காரணம்?
அபுபக்கர், திருச்சி-8
குடிசை வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காற்று வீசாமலிருந்தால் அந்தக் குடிசை மட்டுமே எரியும். கரியிலுள்ள நெருப்பை ஒரு குழலால் ஊதி, தங்க நகையை உருக்கி ஒட்டுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இந்த இரு உதாரணங்களின் மூலம் நாம் அறிந்து கொள்வது, நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதற்கு காற்றின் தேவை மிக அவசியமானது என்பதுதான். இதேபோலவே உங்களுடைய வயிற்றிலும் நடந்து கொண்டிருக்கிறது. பசித்தீயின் அருகில் ஸமான வாயு எனும் ஒரு வாயு செயல்படுகிறது. பசித் தீயைத் தூண்டுகிறது.
சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்புக் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ் நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன.
ஸமான வாயுவின் தூண்டுதலின் மூலம் கொழுந்துவிட்டு எரியும் உங்களுடைய பசித் தீயில் வந்துவிழும் உணவுப் பொருட்கள் அனைத்தும் விரைவாகச் செரிக்கின்றன. ஆனாலும் உடல் ஊட்டமடையவில்லை. உணவின் சத்து உடல் உட்புறப் பகுதிகளில் சேராமல், பெருமலமாகவும், சிறுநீர் வழியாகவும், வியர்வையின் வழியாகவும் வெளியேறத் தொடங்கினால், உடல் ஊட்டம் பெறாமல், மெலிந்தேயிருக்கும். கிணற்றைத் தூர் வாரிவிட்டால், கிணற்றிலுள்ள உறைகளின் இடுக்கிலிருந்து புதிய நீர் ஊறி, புதிய தண்ணீர் நிரம்புவதைப் போல, கெட்டுப் போயுள்ள குடலின் பித்த நீரையும், காற்றையும் நீங்கள் வெளியேற்ற வேண்டும். அதற்கு ஆயுர்வேத லேகிய மருந்தாகிய கல்யாணகுலம் உதவக் கூடும்.
காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சித் தண்ணீர் நன்றாகச் செரித்த பிறகு, மதிய வேளையில் இந்த லேகிய மருந்தை சுமார் 15 - 20 கிராம் நக்கிச் சாப்பிட, தேவையற்ற கெட்டுப் போன பித்த - வாயு நன்றாக நீர்ப்பேதியாகி வெளியேறிவிடும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, இதுபோல சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குச் செய்து கொள்வது மிகவும் நல்லது. புதிய பித்தநீரின் வரவால் உங்களுடைய பசியானது கட்டுக்குள் வந்துவிடும். அதை மதிக்காமல் மீண்டும் நீங்கள் உணவை அதிகமாக ஏற்பது தவறாகும். "தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயளவு இன்றிப் படும்' என்ற வள்ளுவர் பெருமான் கூறியதை நினைவில் நிறுத்திக் கொள்ளவும். தன் ஜீரண சக்தியை மதிக்காமல் அளவுக்கு மீறி அதிகமாக உண்பவனுக்கு நோயும் அளவுக்கு மீறி எல்லையின்றி ஏற்படும் என்ற அவருடைய குறிப்பை மதித்துச் செயல்படவும். காலையிலும் இரவிலும் மித உணவை எளிதில் செரிக்கக்கூடிய வகையில் சாப்பிடவும். மதிய வேளையில் நன்றாகச் சாப்பிடலாம்.
விதார்யாதி கிருதம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை லேசாக உருக்கி, காலை, மாலை சுமார் 15 மி.லி. 41 -48 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ஸமான வாயுவின் சீரான செயல்பாட்டையும், பசித்தீயின் உக்ரத்தைக் குறைத்தும், உடல் தேவைக்கான அளவில் போஷணத்தையும் நிறைவாக நீங்கள் பெறலாம். அப்ரக பஸ்மம் தற்சமயம் கேப்ஸ்யூல் வடிவில் வரத் துவங்கியுள்ளது. உணவிற்கு சுமார் 1/2 - 1 மணி நேரத்துக்கு முன்பாகச் சிறிது வெதுவெதுப்பான பாலுடன் பருக, பித்த வாயுக்களின் சீற்றத்தை அடக்கி, உடலுக்கு நல்ல ஊட்டத்தையும் பெறலாம்.
உணவில் இனிப்புச் சுவையை சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளவும். மாவுச் சத்துள்ள பண்டங்கள், அதன் பிரிவுகளான சர்க்கரைகள், நெய் முதலிய சில கொழுப்புப் பண்டங்கள் இனிப்பு வகையில் அடங்கும். பித்த வாயுவை அடக்குவதில் மற்ற சுவைகளைவிட, இனிப்புச் சுவை சிறந்தது. கண்களின் தெளிவு, கேசங்களின் அடர்த்தி, தசை வலிவு, மேனி நிறம், திசுக்களின் வளர்ச்சியும் அடர்த்தியும், ரஸ - ரக்த தாதுக்கள் தோஷமற்றுத் தெளிந்திருப்பது போன்றவை இனிப்புச் சுவையின் தனிச் சிறப்புச் செயல்களாகும்.
thanks : thina mani kadhir

No comments: