Friday, November 11, 2011

மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மந்தமாகச் செயல்படுவதை வேகப்படுத்துவது எப்படி?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது 55. நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தச் செயலையும் "சடக்'கென்று செய்ய இயலாது. சிறிது நேரம் உடலை இங்குமங்கும் நகர்த்தி பிரயத்தனம் செய்தால் மட்டுமே எச்செயலையும் செய்ய முடியும். தசைப் பகுதிகள் இறுக்கமாக இருப்பதால், படி ஏறும்போது
முதல் நான்கு படிகள் சிரமப்பட்டு ஏற வேண்டும். அதன் பிறகுதான் எளிதாக ஏற முடிகிறது. இதேபோல், உடலில் உள்ள எல்லாத் தசைப் பிரிவுகளுமே சிறிதுநேர
முயற்சிக்குப் பின்பே செயல்பட முடிகிறது. இதற்கு
ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா? க.அழகுராஜன், விருதுநகர்.

மூளைப் பகுதியிலிருந்து இடப்படும் கட்டளைகளான "எழுந்திரு, நட, உட்கார், படு' போன்ற செய்தித் தொகுப்பினைத் தசைப் பகுதிகளில் அமைந்துள்ள நரம்புகள் ஏற்று, அதன்படி செயல்படுவதும், தோலில் ஏற்படும் தொடு உணர்ச்சியினை, அதனடியில் அமைந்திருக்கும் நரம்புகளின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்வதுமான ஓர் உணர்ச்சிகளின் போராட்டம் உயிருள்ள ஒரு மனித உடலில் எந்நேரமும் நடந்து கொண்டிருப்பது ஓர் இயல்பான நிகழ்ச்சியாகும்.
கண நேரத்தில் நடைபெறும் இச்செயல்களின் வேகமானது, உங்களுடைய விஷயத்தில் மந்தமான கதியில் நடைபெறுகிறது.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதால், இது தாய், தந்தையரின் "பீஜ தோஷத்தினால்' ஏற்பட்டுள்ளதோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது. "பீஜம்' என்றால் விதை என்று பொருள். நல்ல சத்தான ஒரு விதையை, பண்பட்ட ஒரு நிலத்தில் விதைத்தால், செழிப்பான ஒரு செடி வளருவதை நாம் காணலாம். அதுபோல, ஓர் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்குத் தாயின் சினைமுட்டையும், தந்தையின் விந்துவும், த்ரிதோஷங்களாகிய வாத - பித்த - கப தோஷங்களின் சமநிலையைப் பெற்றிருக்க வேண்டும். வாதம் என்னும் தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி, முறமுறப்பு, நுட்பம், அசையும் தன்மை போன்றவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு அதன் தாக்கமானது மூளையிலும் தசை நரம்புகளிலும் காணும். இருந்தாலும் பெற்றோரை மட்டுமே குறை கூறுவதும் தவறாகும். நீங்கள் வளர்ந்த சூழ்நிலை, இடம், உணவுமுறைகள், செய்யும் தொழில் போன்றவையும் காரணமாகலாம்.
மூளை மற்றும் தசைப் பகுதிகளைச் சார்ந்த நரம்புகளில் அமைந்துள்ள வாயுவின் செயல்திறனைச் சீராக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. மூளை நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய க்ஷீரபலா தைலம், கார்ப்பாஸôஸ்த்யாதி தைலம், பலா குடூச்யாதி தைலம், மதுயஷ்ட்யாதி தைலம், தசை நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு, தான் வந்திரம் தைலம் போன்றவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகித்து நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, வாத தோஷத்தை சீராக்கும் திறன் உடையவை என்பதால் இந்தச் சுவைகளை மிதமாக உணவில் சேர்க்கவும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, வாதத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையவை என்பதால், இச்சுவை நிறைந்த உணவு வகைகளைக் குறைக்கவும். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும், புளிப்புச் சுவையுள்ள மோர், எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெதுவெதுப்பான தண்ணீர், புளிப்பான கருந்திராட்சை பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்துவது, வாயுவின் சீரான செயல்பாட்டுக்கு அனுகூலமானதாக இருக்கும்.
தலையில் மூலிகைத் தைலங்களை வெதுவெதுப்பாக நிரப்பி வைக்கும் "சிரோவஸ்தி' எனும் முறையும், ஆசனவாய் வழியாக செலுத்தப்படும் தைலம் மற்றும் மூலிகைக் கஷாயமுறைகளும் உங்களைப் போன்ற உபாதை உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளாகும். ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து இந்தச் சிகிச்சைகளைச் செய்து கொள்வது மிகவும் நல்லது.
உள் மருந்துகளாக விதார்யாதி கஷாயம், தசமூலம் கஷாயம், க்ஷீரபலா 101, முஸ்தாதி மர்ம கஷாயம், பிரசாரிண்யாதி கஷாயம், தான் வந்திரம் கஷாயம் போன்றவற்றை பசியின் தன்மைக்கு ஏற்ப, பாலுடனோ, வெந்நீருடனோ சாப்பிடுவது நல்லது. இதற்கும் ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும்.

No comments: