Monday, November 14, 2011

முழங்கால் மூட்டில் வலி - ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி

முழங்கால் மூட்டில் வ... என்ன செய்ய வேண்டும்?
எனக்கு 42 வயதாகிறது. ஐந்து மாதங்களாக முழங்கால் மூட்டு வலியுள்ளது. உட்கார்ந்து எழுந்தால் "பட் பட் பட்' என்று முழங்கால் மூட்டில் இருந்து ஒலி வருகிறது. வலது கால் முழங்கால் மூட்டில்தான் அதிக வலி. அதுபோல வலது தோள் பட்டையிலும், வலது குதிகாலிலும் வலி உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் தீர்வு கிடைக்குமா?
ஒரு வாசகி, கமலாபுரம்.
"சிலேஷக சிலேஷ்மா' என்று ஒரு பசை வஸ்து இருக்கிறது. மனித உடலிலுள்ள சிறிய, பெரிய சகல மூட்டுகளுக்கிடையே கட்டுத் தளராமல் வழவழப்பையுண்டு பண்ணிக் கொண்டு இருக்கிற இந்தப் பசை வஸ்து உங்களுக்கு வறண்டு போய்விட்டதோ? என்று தோன்றுகிறது. இந்த சிலேஷக சிலேஷ்மாவுக்கு ஏற்படும் கோளாறினால் கீல் பிடிப்பு, முடக்கு வலி முதலிய உபாதைகள் ஏற்படும். இரண்டு எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள இந்தப் பசையினால், உராய்வு ஏதும் ஏற்படாமல் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. குணங்களின் வாயிலாக செயல்களை நிகழ்த்தும் இந்த சிலேஷ்மா, வறண்டுவிடாமலிருக்க, அதன் நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், மழமழப்பு, கொழ கொழப்பு, நிலையான தன்மை போன்ற குணங்களை நீங்கள் உணவின் மூலமாகவும், செயல்களின் வாயிலாகவும், மருந்துகளின் மூலமாகவும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உணவைப் பற்றி ஆராய்ந்து தெளிவுறுதல் நலமாகும். நிலம், நீர் ஆகியவற்றை ஆதிக்ய பூதங்களாக்கிய சிலேஷ்மா எனும் கபதோஷத்தைப் பெற இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகள் உதவிடக்கூடும். ஏனென்றால் இனிப்புச் சுவையானது, நிலம் மற்றும் நீரினால் உருவாகிறது. ஆனால் இந்த இரு மகா பூதங்களை, குடலிலிருந்து முட்டியின் ஜவ்வு வரை எடுத்துச் செல்வது எளிதல்ல. அதற்குக் காரணம், அவை இரண்டும் கனமான வஸ்துக்களாக இருப்பதுதான். அவற்றைக் கொண்டு செல்ல புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை நீங்கள் மிதமாக உணவில் சேர்க்க வேண்டும். நெருப்பில் எளிதாக வேகக் கூடிய நிலம் மற்றும் நீரினால், எலும்புக்களுக்கிடையே அமைந்துள்ள சிலேஷக சிலேஷ்மா வளர்ந்து, முழங்கால் மூட்டில் ஏற்படும் "பட் பட்' என்ற சப்தம் குறைய வாய்ப்பிருக்கிறது. அரிசியை நன்றாகக் கழுவி, கஞ்சியை வடித்து, நன்கு பக்குவப்படுத்தி, அதிலுள்ள ஆவிப் புகை அடங்கிய பின், சூடான சாதத்துடன் பால், புலால் ஆகியவை கலந்து காலை உணவாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவுக்கு முன் வாழைப்பழம் சாப்பிட உகந்தது. மாலையில் அத்திப் பழமும், இரவில் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும்.
அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், தரையில் அமர்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்ற செயல்களைத் தவிர்க்கவும். சமையல் செய்வதானால் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு செய்து, முழங்கால் மூட்டுகளுக்குப் போதுமான ஓய்வு அளிப்பது நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் படுக்கையில் படுத்திருந்து, கால் மூட்டுகளுக்கு அதிக வேலைப் பளு தராமலிருப்பதால், உட்புற ஜவ்வு வலுப் பெற வழி ஏற்படும்.
"ஜடாமயாதி' என்று ஒரு சூரண மருந்து விற்பனையாகிறது. அரிசியை வேக வைத்து, வடித்தெடுத்த கஞ்சியுடன் இந்தச் சூரணத்தைக் குழைத்து, வெதுவெதுப்பாக முழங்கால் மூட்டுகளில் காலை, மாலை உணவுக்கு முன் சுமார் ஒரு மணி நேரம் பற்று இட்டு வைத்தல் மூலம், சிலேஷக சிலேஷ்மா வளர்வதற்கும், வலியைப் போக்குவதற்கும் உதவும். சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை பற்றிடலாம். நன்றாகப் பசியெடுத்துச் சாப்பிடக் கூடியவராக நீங்களிருந்தால், க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற்றில், சிறிது வெது
வெதுப்பான பாலுடன் சுமார் 3 - 6 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மூட்டு வலி குறைவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.
உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச்சுவை, எண்ணெய்ப் பசையற்ற உணவு போன்றவற்றைத் தவிர்க்கவும்; அல்லது குறைக்கவும். சைக்கிள் சவாரி, பேருந்தில் நின்று கொண்டு பயணித்தல், கால் மேல் கால் போட்டு அமருதல், அடிக்கடி கால்களை ஆட்டிக் கொண்டிருத்தல் போன்றவற்றையும் தவிர்ப்பது நலம்.
கால் மூட்டுகளிலும் தோள் பட்டையிலும் கணுக்கால்களிலும் மூலிகைத் தைலங்களைப் பூசுதல், மூலிகை இலைகளால் வேக வைக்கப்பட்ட நீரிலிருந்து வெளியாகும் நீராவியை, வலி உள்ள பகுதிகளில் காண்பித்து வியர்வையை வரவழைத்தல், வலி உள்ள பகுதிகளில் எண்ணெய் கட்டுதல் போன்ற சிறந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவமனைகளில் நீங்கள் செய்து கொள்வது நலமே

No comments: