Wednesday, July 6, 2011

புத்தர் கூறிய கதை

புத்தர் கூறிய கதை


(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை )



ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.



முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.



ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.



திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.



அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.



இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.
by Vethathiriyam for World Peace on Thursday,

Saturday, July 2, 2011

அன்பு

அன்பு

அன்பைக் கொடுத்துதான் அன்பைப் பெற வேண்டும்.ஆனால்,வெறுப்பைக் கொடுத்து அன்பை எதிர்பார்க்கிறோம்.
அன்பைப் பற்றி பேச ஒரு வார்த்தை போதும்.ஆனால் அன்போடு வாழ ஒரு வாழ்கையே வேண்டும்...

அன்பின் ஒரே எதிரி கோபம்தான்.கோபத்தின் ஒரே நண்பன் வெறுப்பு.வெறுப்பின் காரணம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் வெறுப்பு வருகிறது.கோபமும் கூடவே வந்துவிடும்..கோபம் வந்தால் அன்பு பறந்தோடி விடும்..
எதையும் யாரிடமும் எதிர் பார்க்க வேண்டாம்..வருவதை ஏற்றுக்கொள்வோம்...வாழ்க வளமுடன்

அன்பான மனிதராக வாழ்வதற்கு
நம் மனதில் பிறரைப் பற்றிய அன்பான வார்த்தைகள், கருத்துகள்.
அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள்.இவற்றை பதிய வைக்க வேண்டும்.பிறரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு,வெளியில் அன்பு காட்ட முனைந்தால் அது வெறும் நடிபாகத்தான் இருக்கும்.

பிறரது பிரச்சினைகளை நம் பிரச்சினைகள் போல எடுத்துகொண்டுஆறுதல் கூறுவது, பிரச்சினைகள் தீர வழி காண்பது, அவர்களுக்காக சங்கல்பிப்பது, இறைவனை வேண்டுவது, முடிந்த உதவிகளை செய்து வாழ்வது, பிறர் தவறை ஏற்றுக் கொள்வது, பொறுத்துக்கொள்வது, சகித்துக் கொள்வது. இவை அன்பான மனிதரின் அடையாளங்கள்

Monday, June 27, 2011

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது, அதிகபட்ச அன்பாக இருந்தாலும்..

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது, அதிகபட்ச அன்பாக இருந்தாலும்..

• பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
• சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
• யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
• நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
• நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.
• நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
• நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
• வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
• சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
• முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.
• பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.
• எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
• நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
• காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.
• விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
• யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.
• ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.
• அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.
• நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.
• உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
• உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்
• வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.
• தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.
• உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
• செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.
• அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
• வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.
• தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.
• பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.
• கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
• ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
• சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
• ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Sunday, June 26, 2011

நல்லவர்களாக வாழுங்கள்

நல்லவர்களாக வாழுங்கள்

* இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்பு தான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால்,
எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.

* அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்.
பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும்.
அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.

* பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

* ஆன்மிக உணர்வுடன் ஆண்டவனிடம் சரணடைந்தால் நம் மனம் தூய்மை பெறும்.
தூய மனம் பேரின்பத்தின் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.

* மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம்.
மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.
அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.

* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால் தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ஏழு விஷயங்கள்

ஏழு விஷயங்கள். . .

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்துப் பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாகப் பேசவேண்டும்.
4) மெதுவாகப் பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாகப் பேசவேண்டும்
7) பேசாதிருக்கப் பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்கக்கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Wednesday, June 22, 2011

தெய்வப் புலவரின் குறள்நெறி-3

தெய்வப் புலவரின் குறள்நெறி-3
தெய்வப் புலவரின் குறள்நெறி





குறள் : "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது"


விளக்கம் :


எல்லாம் வல்ல இறைவனை இதற்கு முன்னால் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று கூறிய வள்ளுவர் இங்கு அறத்தின் வழி நிற்கும் அந்தணர் என்கிறார். அந்தணன் என்போன் அறவோர் என்று கூறிய வள்ளுவர், இறைவனின் தன்மை அறத்தின் வழி நின்று பரிபாலிப்பது ஆகும். இறைவனை நேசிப்பதற்கு முன்பாக அறநெறியை நேசிக்க வேண்டும். அறம் இல்லாமல் ஆண்டவன நேசிப்பது கூட அதர்மமே ஆகும். அறநெறியில் நிற்காத யாருமே ஆண்டவனை அணுகமுடியாது.


மனித வாழ்வில் பாவக்கடலைக் கடப்பதற்கு பரமன் அருள் அவசியம் தேவை என வலியுறுத்தும் வள்ளுவர், இறைவன் தாள் சேர்ந்தவர்கள் மட்டுமே பாவக்கடலைக் கடந்து பக்குவம் அடைய முடியும் என்று குறள்நெறி சாதிக்கிறது. இது ஒரு ஆழ்ந்த ஆய்விற்குரிய செய்தி ஆகும். இறைவன் திருவடியைப் பற்றாத நல்ல நெறியாளர்கள் முடிவு, மோசமான பாவக்கடலில் சிக்கி பரிதவிக்கும் அனுபவத்தை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தெரியவரும். கடவுளை ஏற்காத மதங்கள், சிந்தனையாளர்கள் காலப்போக்கில் மனிதநேயமற்ற மூர்க்கர்களாக மாறிப்போன வரலாறு பல உண்டு. புத்த மதமும் சமண மதமும் கடவுளை ஏற்கவில்லை, அதனால் சமணர்கள் அதர்ம வழியில் சூழ்ச்சி செய்து சைவ நெறியாளர்களுக்கு இடையூறு தந்ததை ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் வரலாற்றில் அறியலாம். இன்று இலங்கையில் கூட புத்தமதம் தமிழர்களைக் கொல்லும் ஆயுதமாகத்தான் உள்ளது.


அச்சாணி இல்லாது சுழன்ற சக்கரம் ஆபத்து நிறைந்தது. அதுபோல அச்சாணியாகிய இறைவனின் திருவடியை மையமாக வைத்து சுழலும் மனிதன் பிறவாழி என்னும் பாவக்கடலில் இருந்து தப்பிதுவிடுவான். இறைவன் திருவடி ஞானம் என்னும் அச்சாணி இல்லாத சக்கரமாகிய நம் வாழ்க்கை சரியாக கழற்றி விடப்பட்டாலும் முடிவில் அது எங்கேயோ முட்டி மோதி அழிந்துபட்டுப் போகும். இதை உணர்ந்த வள்ளுவர் மனித இயக்கம் சரியாக சுழல வேண்டும் என்று கருதினால் முதலில் இறைவன் திருவடி என்கிற அச்சாணியைப் பிடித்துக் கொள்ள வேண்டும் ; அதன்பிறகு அறநெறியில் பயணிக்க வேண்டும்.


என்னிடம் நீதி உள்ளது நெறியான வாழ்வு உள்ளது , வாழ்ந்துவிடுவேன் என்று வாக்குறுதி தரலாம். ஆனால் முடிவு மோசமான அதர்மம் ஆகிவிடும். நாத்திக நெறி அறநெறிப்படி வாழ்வதை ஆமோதிக்கிறது, ஆனால் வாழ்ந்து காட்டும்போது தடுமாற்றம் உண்டாகி தடம் மாறி அவதிப்படுகிறது. இறைவன் திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டால் அன்றி யாருமே அறநெறியில் நிலைக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டே "அரிது" என்ற வாசகத்தை வள்ளுவர் இணைத்துள்ளார். நெறியான கட்டுப்பாட்டை மீறுவது என்பது மனித மனதின் இயல்பான குணமாகும். அச்சாணியில் சுழலும் சக்கரம் அதைவிட்டு வெளியேறவே முயற்சி செய்யும், ஆனால் கடையாணி போட்டு சக்கரத்தை வெளியேறாதபடி தடுத்து விடுவார்கள். இந்தக் கடையாணி என்பதுதான் இறைவனின் திருவடி தரிசனமாகும். இது பயன்பாட்டில் அனுபவிக்காத மனம் கடையாணி இல்லாத சக்கரம் போல ஆகிவிடும்.


கடவுள் துணையோடு தொடங்கும் மனித வாழ்வு ஒருபக்கம்; கடவுளை ஏற்காது அறத்தை மட்டுமே ஏற்று தொடங்கும் மனித வாழ்வு ஒரு பக்கம். இதில் கடவுள் துணை இல்லாத மனித வாழ்வு தொடக்கத்தில் நெறியுடன் பயணம் செய்தாலும் முடிவில் நெறி தவறிய சகதியில் சிக்கி சண்டாளர் ஆகிவிடுவார்கள். இதற்கு சரியான காரணம் உள்ளது. இன்பத்தை அனுபவிக்கிற மனதிற்கு இறுதிப்புள்ளி வைக்கவே தெரியாது. இன்பத்தின் சுழற்சி வேகம் அதிகமாகிற போது பாவங்கள் சூழ்ந்து கொள்ளும். இனிப்பைச் சுவைக்கிற மனம் அது இல்லாத போது அடுத்தவனிடம் இருந்தால் கூட அபகரித்து இன்பம் காண மனித மனம் தயங்காது. இந்த குணமே உலகியல் பாவத்திற்கு காரணமாகும். இறைவனின் திருவடி ஞானம் வாய்க்கப் பெற்றவர்களும் இன்பத்தை சுவைப்பார்கள்; ஆனால் அந்த இன்பம் வரையறை செய்து நிறுத்தப்படும். ஒவ்வொரு இன்பத்தின் முடிவிலும் இறைஞானம் என்பது உதயமாகும்; முற்றுபுள்ளி என்பதும் அமைந்துவிடும்.


உலகம் தோன்றிய காலத்திலிருந்து கடவுளை மறந்து வாழ்வியலை புனிதமாக்க பலபேர் முயன்று முடிவாக தோல்வியே கண்டார்கள். கடவுள் உணர்வு இல்லாத இயக்கம் முடிவாக வன்முறையாளர்களாக மாறிப் போவதே வாடிக்கையான வரலாறு உணர்த்துகிறது. ஏனெனில் ஆசையை சீரமைப்பதும், இன்பத்தை வடிகட்டுவதும் இறைவனால் மட்டுமே முடிந்த செயலாக உள்ளது. ஒரு மிருகத்தின் வாழ்விலும் அறநெறி இருக்க வாய்ப்பே இல்லை, எதிர்பார்க்கவும் முடியாது. இன்பத்தை நுகர்பவன் சலிப்படையும் வரை அவனால் மீளவே முடியாது. சர்க்கரை கிண்ணத்தில் நுழைந்த எறும்பு தான் சாகும் வரை சுவைப்பதிலிருந்து மீண்டு வராது. அது போல கடவுள் உணர்வு இல்லாத மனமும் இந்த எறும்பைப் போலவே போராடும். துன்பத்தில் கூட புத்தனுக்கு ஞானம் பிறந்தது, இன்பத்தில் யாருக்குமே ஞானம் பிறக்காது. இன்பத்தில் ஞானம் பிறக்காதவரை மனிதன் இன்ப நெறியில் எத்தனை பாவமும் துணிந்து செய்வான். இதனை அறிந்து வள்ளுவர் எச்சரிப்பது இக்குறளின் துணிவு ஆகும்.


இறைவனின் திருவருள் இருந்தால் மட்டுமே இன்பத்தின் முடிவில் அதிர்ச்சி உண்டாக்கப்படும். கடையாணியை மோதும் சக்கரம் தனது இயல்பை மாற்றிக்கொள்ளும். எனவே அறநெறியில் பயணிக்க விரும்பும் ஆர்வலர்கள் முதலில் இறைவன் திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு நெறியான வாழ்வில் பயணிக்கும்போது பாவக்கடல் என்பது வராது. அப்படியே பாவக்கடல் குறுக்கிட்டாலும் இறையருளால் தப்பிக்கும் உபாயம் கிடைத்துவிடும். இறைவன் திருவடியைப் பற்றுக் கோடாக கொள்ளாத யாருமே பாவக்கடலில் சிக்கி பரிதவிப்பது உறுதி என்பதை எதிர்மறையாக வள்ளுவர் "திருவடி சேராதார்" பாவக்கடலை கடக்க முடியாது என்கிறார்.


இறைவன் திருவடி சேர்ந்து நெறியான வாழ்வில் பயணிப்போம்.

Tuesday, June 21, 2011

ஜீவகாந்தம்

ஜீவகாந்தம்
நமது உடலில் வலி, நோய், மரணம், எப்படி உண்டாகின்றன? ஏன் உண்டாகின்றன? இவற்றை நம்மால் தடுக்க முடியுமா? என்பது குறித்த அறிவு மிகவும் நுட்பமானது, அந்த அறிவை தெரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு தத்துவம்தான் ஜீவகாந்தம். இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் பல நுண்துகள்கள் ஒன்றுகூடி பரமாணுக்களாகி, அவைகள் இறைவெளியில் சுழன்று கொண்டே இருக்கும்போது ஏற்படும் உரசலினால், பரமாணுக்களிலிருந்து இறைத் துகள்கள் அலைகளாக வெளியாகின்றன. அந்த அலைகள்தான் காந்தம், உடலுக்குள்ளாக உற்பத்தியாகிற காந்தத்தைச் ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் உற்பத்தியாகிற காந்தத்தை வான்காந்தம் என்றும் சொல்கிறோம்.
ஜீவகாந்த சக்தி நம் உடலுக்குள்ளாக இயங்குவதை நாமே உணர்ந்து கொள்ளலாம். கொஞ்சம் தளர்வாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், இரண்டு கைகளையும் நான்கு அங்குல இடைவெளியில் உள்ளங்கைகள் ஒன்றையொன்று நோக்குமாறு, வைத்துக்கொள்ள வேண்டும், உள்ளங்கைகளின் மேல் நினைவை வைக்க வேண்டும். முதலில் விரல்களில் விறு விறுவென்று உணர்வை உணரலாம். கொஞ்ச நேரத்தில் இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையே விறுவிறுப்பான அலை ஓட்டத்தை உணரலாம். இதுதான் ஜீவகாந்த சக்தி, அப்படியே கொஞ்ச நேரத்திற்கு உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று தொடாமல் கொண்டு ஒன்றாகி விடுவதை காணலாம். இத்தகைய செயல்தான், காந்த இயக்கந்தான், ஒவ்வொரு செல்லிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு செல்லிலும் இல்லாமல், மொத்த உடலில் ஜீவகாந்த இயக்கம் வராது. ஜீவகாந்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறபோது ஒரு செல்லானது இன்னொரு செல்லோடு இணைந்து இயக்கிக் கொண்டிருக்கிற தொடர் நிகழ்ச்சியே உடலாக இயக்கத்தில் இருக்கிறது.
ஒரு காந்தக் கல்லை எடுத்துக் கொண்டு, அதன் அருகில் ஒரு ஊசியை கொண்டு வந்தால், காந்தக் கல்லானது ஊசியை பிடித்துக் கொள்ளும், காந்தக் கல்லை ஆட்டினாலும் அவைகள் அனைத்தும் காந்தக் கல்லால் பிடித்துக்கொள்ளப்படும், போதிய அளவு காந்த ஆற்றல் இருக்குமேயானால், நான்கு ஊசிகளும் தொங்குகின்றன, ஆட்டினால்கூட அவைகள் விழுவதில்லை, அவைகள் ஏன் விழுவதில்லை அவைகள் ஒன்றோடொன்று ஒட்டப்பட்டும் இருக்கவில்லை, கட்டியும் வைக்கப்படவில்லை, அப்படியானால் எப்படி அவைகள் விழாமல் நிற்கின்றன காந்த சக்தி அவைகளுக்கிடையே சுழன்று கொண்டேயிருப்பதால், அவைகள் ஒன்றையொன்று கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியே தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. காந்தக் கல்லை ஒட்டியுள்ள ஊசியை கையில் பிடித்துக் கொண்டு, காந்தக் கல்லை எடுத்து விட்டோமானால், எல்லா ஊசிகளும் பொலபொலவென்று உதிர்ந்து விடுவதை காணலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஜீவகாந்த ஆற்றல்தான் கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜீவகாந்த ஆற்றல்தான் உடல் நிலைத்திருப்பதற்கும் அது ஒரே தொகுப்பாக இயங்குவதற்கும் காரணமாக உள்ளது. உடலின் எடைக்கும், செல்களின் எண்ணிக்கைக்கும் தக்கவாறு உடலைப் பராமரிப்பதற்கு போதிய அளவு ஜீவகாந்த சக்தி வேண்டும்.
by Seethamani Krishnan