Wednesday, June 22, 2011

தெய்வப் புலவரின் குறள்நெறி-3

தெய்வப் புலவரின் குறள்நெறி-3
தெய்வப் புலவரின் குறள்நெறி





குறள் : "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது"


விளக்கம் :


எல்லாம் வல்ல இறைவனை இதற்கு முன்னால் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று கூறிய வள்ளுவர் இங்கு அறத்தின் வழி நிற்கும் அந்தணர் என்கிறார். அந்தணன் என்போன் அறவோர் என்று கூறிய வள்ளுவர், இறைவனின் தன்மை அறத்தின் வழி நின்று பரிபாலிப்பது ஆகும். இறைவனை நேசிப்பதற்கு முன்பாக அறநெறியை நேசிக்க வேண்டும். அறம் இல்லாமல் ஆண்டவன நேசிப்பது கூட அதர்மமே ஆகும். அறநெறியில் நிற்காத யாருமே ஆண்டவனை அணுகமுடியாது.


மனித வாழ்வில் பாவக்கடலைக் கடப்பதற்கு பரமன் அருள் அவசியம் தேவை என வலியுறுத்தும் வள்ளுவர், இறைவன் தாள் சேர்ந்தவர்கள் மட்டுமே பாவக்கடலைக் கடந்து பக்குவம் அடைய முடியும் என்று குறள்நெறி சாதிக்கிறது. இது ஒரு ஆழ்ந்த ஆய்விற்குரிய செய்தி ஆகும். இறைவன் திருவடியைப் பற்றாத நல்ல நெறியாளர்கள் முடிவு, மோசமான பாவக்கடலில் சிக்கி பரிதவிக்கும் அனுபவத்தை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தெரியவரும். கடவுளை ஏற்காத மதங்கள், சிந்தனையாளர்கள் காலப்போக்கில் மனிதநேயமற்ற மூர்க்கர்களாக மாறிப்போன வரலாறு பல உண்டு. புத்த மதமும் சமண மதமும் கடவுளை ஏற்கவில்லை, அதனால் சமணர்கள் அதர்ம வழியில் சூழ்ச்சி செய்து சைவ நெறியாளர்களுக்கு இடையூறு தந்ததை ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் வரலாற்றில் அறியலாம். இன்று இலங்கையில் கூட புத்தமதம் தமிழர்களைக் கொல்லும் ஆயுதமாகத்தான் உள்ளது.


அச்சாணி இல்லாது சுழன்ற சக்கரம் ஆபத்து நிறைந்தது. அதுபோல அச்சாணியாகிய இறைவனின் திருவடியை மையமாக வைத்து சுழலும் மனிதன் பிறவாழி என்னும் பாவக்கடலில் இருந்து தப்பிதுவிடுவான். இறைவன் திருவடி ஞானம் என்னும் அச்சாணி இல்லாத சக்கரமாகிய நம் வாழ்க்கை சரியாக கழற்றி விடப்பட்டாலும் முடிவில் அது எங்கேயோ முட்டி மோதி அழிந்துபட்டுப் போகும். இதை உணர்ந்த வள்ளுவர் மனித இயக்கம் சரியாக சுழல வேண்டும் என்று கருதினால் முதலில் இறைவன் திருவடி என்கிற அச்சாணியைப் பிடித்துக் கொள்ள வேண்டும் ; அதன்பிறகு அறநெறியில் பயணிக்க வேண்டும்.


என்னிடம் நீதி உள்ளது நெறியான வாழ்வு உள்ளது , வாழ்ந்துவிடுவேன் என்று வாக்குறுதி தரலாம். ஆனால் முடிவு மோசமான அதர்மம் ஆகிவிடும். நாத்திக நெறி அறநெறிப்படி வாழ்வதை ஆமோதிக்கிறது, ஆனால் வாழ்ந்து காட்டும்போது தடுமாற்றம் உண்டாகி தடம் மாறி அவதிப்படுகிறது. இறைவன் திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டால் அன்றி யாருமே அறநெறியில் நிலைக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டே "அரிது" என்ற வாசகத்தை வள்ளுவர் இணைத்துள்ளார். நெறியான கட்டுப்பாட்டை மீறுவது என்பது மனித மனதின் இயல்பான குணமாகும். அச்சாணியில் சுழலும் சக்கரம் அதைவிட்டு வெளியேறவே முயற்சி செய்யும், ஆனால் கடையாணி போட்டு சக்கரத்தை வெளியேறாதபடி தடுத்து விடுவார்கள். இந்தக் கடையாணி என்பதுதான் இறைவனின் திருவடி தரிசனமாகும். இது பயன்பாட்டில் அனுபவிக்காத மனம் கடையாணி இல்லாத சக்கரம் போல ஆகிவிடும்.


கடவுள் துணையோடு தொடங்கும் மனித வாழ்வு ஒருபக்கம்; கடவுளை ஏற்காது அறத்தை மட்டுமே ஏற்று தொடங்கும் மனித வாழ்வு ஒரு பக்கம். இதில் கடவுள் துணை இல்லாத மனித வாழ்வு தொடக்கத்தில் நெறியுடன் பயணம் செய்தாலும் முடிவில் நெறி தவறிய சகதியில் சிக்கி சண்டாளர் ஆகிவிடுவார்கள். இதற்கு சரியான காரணம் உள்ளது. இன்பத்தை அனுபவிக்கிற மனதிற்கு இறுதிப்புள்ளி வைக்கவே தெரியாது. இன்பத்தின் சுழற்சி வேகம் அதிகமாகிற போது பாவங்கள் சூழ்ந்து கொள்ளும். இனிப்பைச் சுவைக்கிற மனம் அது இல்லாத போது அடுத்தவனிடம் இருந்தால் கூட அபகரித்து இன்பம் காண மனித மனம் தயங்காது. இந்த குணமே உலகியல் பாவத்திற்கு காரணமாகும். இறைவனின் திருவடி ஞானம் வாய்க்கப் பெற்றவர்களும் இன்பத்தை சுவைப்பார்கள்; ஆனால் அந்த இன்பம் வரையறை செய்து நிறுத்தப்படும். ஒவ்வொரு இன்பத்தின் முடிவிலும் இறைஞானம் என்பது உதயமாகும்; முற்றுபுள்ளி என்பதும் அமைந்துவிடும்.


உலகம் தோன்றிய காலத்திலிருந்து கடவுளை மறந்து வாழ்வியலை புனிதமாக்க பலபேர் முயன்று முடிவாக தோல்வியே கண்டார்கள். கடவுள் உணர்வு இல்லாத இயக்கம் முடிவாக வன்முறையாளர்களாக மாறிப் போவதே வாடிக்கையான வரலாறு உணர்த்துகிறது. ஏனெனில் ஆசையை சீரமைப்பதும், இன்பத்தை வடிகட்டுவதும் இறைவனால் மட்டுமே முடிந்த செயலாக உள்ளது. ஒரு மிருகத்தின் வாழ்விலும் அறநெறி இருக்க வாய்ப்பே இல்லை, எதிர்பார்க்கவும் முடியாது. இன்பத்தை நுகர்பவன் சலிப்படையும் வரை அவனால் மீளவே முடியாது. சர்க்கரை கிண்ணத்தில் நுழைந்த எறும்பு தான் சாகும் வரை சுவைப்பதிலிருந்து மீண்டு வராது. அது போல கடவுள் உணர்வு இல்லாத மனமும் இந்த எறும்பைப் போலவே போராடும். துன்பத்தில் கூட புத்தனுக்கு ஞானம் பிறந்தது, இன்பத்தில் யாருக்குமே ஞானம் பிறக்காது. இன்பத்தில் ஞானம் பிறக்காதவரை மனிதன் இன்ப நெறியில் எத்தனை பாவமும் துணிந்து செய்வான். இதனை அறிந்து வள்ளுவர் எச்சரிப்பது இக்குறளின் துணிவு ஆகும்.


இறைவனின் திருவருள் இருந்தால் மட்டுமே இன்பத்தின் முடிவில் அதிர்ச்சி உண்டாக்கப்படும். கடையாணியை மோதும் சக்கரம் தனது இயல்பை மாற்றிக்கொள்ளும். எனவே அறநெறியில் பயணிக்க விரும்பும் ஆர்வலர்கள் முதலில் இறைவன் திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு நெறியான வாழ்வில் பயணிக்கும்போது பாவக்கடல் என்பது வராது. அப்படியே பாவக்கடல் குறுக்கிட்டாலும் இறையருளால் தப்பிக்கும் உபாயம் கிடைத்துவிடும். இறைவன் திருவடியைப் பற்றுக் கோடாக கொள்ளாத யாருமே பாவக்கடலில் சிக்கி பரிதவிப்பது உறுதி என்பதை எதிர்மறையாக வள்ளுவர் "திருவடி சேராதார்" பாவக்கடலை கடக்க முடியாது என்கிறார்.


இறைவன் திருவடி சேர்ந்து நெறியான வாழ்வில் பயணிப்போம்.

No comments: