Thursday, June 9, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பறங்கிக்காய் மகிமை!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பறங்கிக்காய் மகிமை!

என் வயது 31. சிறுநீர்ப் பையில் புண்கள் இருப்பது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிந்தது. அதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. உடல் எடை 45 கிலோதான் உள்ளது. புண்கள் ஆறவும் உடல் எடை கூடவும் வழி என்ன? வை.ச.விமல் ஆனந்த், திருவாரூர்.

உணவின் மூலமாக ஏதேனும் விஷத் தொற்றோ, கிருமித் தொற்றோ ஏற்படுமானால், அதை வெளியேற்ற உடல் சிறுநீரகங்களைப் பயன்படுத்தி சிறுநீரைத் தாரையாகப் போகச் செய்கிறது. கல்லீரல் வழியாக இந்த விஷத் தொற்றை வெளியேற்ற, பித்த திரவங்களின் வழியாகச் சிறுநீரில் கலக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புண்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. அதனால் நீங்கள் உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி, மருந்துகளைச் சாப்பிட்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். வெளியே உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதை நிறுத்தி, வீட்டில் தயாரிக்கப்படும் தரமான உணவு வகைகளை மட்டுமே நீங்கள் சாப்பிடுவது நல்லது. இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த பறங்கிக்காய் சாப்பிட மிகவும் நல்லது. அது உடல் அழற்சி, பித்தப் பெருக்கு இவற்றைத் தடுக்கும். பழுத்த பறங்கிக் காயின் காம்பை உலர்த்தி தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீரகங்களின் உள்ளே விஷப் பற்றுதலின் தாக்கம் குறையும். 4 - 8 விதையைச் சிறிது தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்க, சிறுநீரக அழற்சி குறையும். நீர்ச்சுருக்கை அகற்றும் பனங்கற்கண்டை அந்த விதைக் கஷாயத்துடன் சேர்த்துச் சாப்பிட, விரைவில் குணம் கிடைக்கும். பறங்கிக் காயைப் போல, பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கள் உள் அழற்சியைப் போக்கி, சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த கறிகாய்களையும் உணவில் அதிகம் சேர்ப்பது நலமே. நன்னாரி வேர்த்தூளைக் குடிநீரில் 5-10 கிராம் போட்டு அது ஊறியதும் சாப்பிட, சிறுநீரை அதிகமாக வெளியேறச் செய்து ரத்தத்தைத் சுத்தப்படுத்தும். உடற்காங்கை குறைக்கும். நன்னாரி பானகம் கோடையில் ஏற்றது. வால்மிளகைப் பசுவின் பாலில் ஊற வைத்து, அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த்துவார வேக்காளம் குறையும். முலாம் பழச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துப் பருகினால் சிறுநீர் எரிச்சலுக்கு நல்லது. தண்டுக் கீரை மலத்தை இளக்கி கொதிப்பை அடக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி, நீர்ச்சுருக்கு இவற்றுக்கு நல்லது. அதுபோல சிறுகீரையும் தண்டுக் கீரையைச் சார்ந்ததே. கண் புகைச்சல், நீர்ச்சுருக்கு, சிறுநீர்ப்பைப் புண், வீக்கம் இவற்றைப் போக்கும். உடல் அழகைத் தரும்., பசலைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, ருசியின்மை, வாந்தி முதலியவற்றுக்கு நல்லது. பருப்புக் கீரை இனிப்பும் புளிப்பும் உள்ளது. கொதிப்பை அடக்கும். சிறுநீரைப் பெருக்கும். குடல் வறட்சியை நீக்கி மலத்தை இளக்கும். உள் புண்ணை ஆற்றும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவது நல்லது. இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த சவ்வரிசிப் பாயாசம் சாப்பிடவும். புஷ்டி தரும் இனிய உணவாகிய சவ்வரிசியைக் கஞ்சி, கூழ், வடாம் என்று பல வகைகளில் நீங்கள் பயன்படுத்தினால் நீர்த்தாரை அழற்சியை நீக்கி, உடலையும் புஷ்டிப்படுத்தும். ஆயுர்வேத மருந்துகளில் சந்தனாஸவம் 15 மிலி, சாரிபாத்யாஸவம் 15 மிலி கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு சுமார் 21 -28 நாட்கள் சாப்பிடலாம். ************* பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)செல் : 9444441771
மருத்துவம்

No comments: