Wednesday, April 4, 2012

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

சர்க்கரை நோய் சில தகவல்கள்:

சர்க்கரை நோய் சில தகவல்கள்:

1. இன்று உலகைப் பயமுறுத்தி கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக மனிதர்களை பாதிப்பது, தீவிரவாதமோ, அணுகுண்டோ அல்ல.! சர்க்கரை நோய் என்ற கொடிய பிரச்சினை தான். இதை நோய் என்று குறிப்பிட்டாலும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்பது ஒரு இயல்பான மாற்றம் தான் அதாவது குறைபாடு. வரப்போகும் மூளை, இதயம், கிட்னி, கண் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறி. உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி தகவல்களின் படி, இந்தியா தான் சர்க்கரை நோயாளிகளின் ஜனத்தொகையில் நம்பர் ஒன்.!

2. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், டி.பி., கான்சர் போன்ற பல பயங்கரமான வியாதிகள் இருந்தபோதும், நடைமுறையில், வெகுஜன பாதிப்பு சர்க்கரை நோயினால் தான்.

3. வயிற்றில் உள்ள கணையத்தில் ( பான்க்ரியாஸ்) தொடங்கும் பிரச்சினை உடலெங்கும் தொடர்வது, ஒரு மருத்துவ விந்தை. கணையம் சுரக்கும் "இன்சுலின்" என்ற ஹார்மோன் குறைபாடு தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரனமாக அறியப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகள், பான்க்ரியாட்டிக் பீட்டா செல்களின் குளுகோஸ் ஈர்ப்புத் தன்மை குறைபாடு ( சென்சிட்டிவிடி & ரெசிஸ்டன்ஸ்) போன்ரவை வலுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முன்னேற்ரங்கள்.

4. இந்த இன்சுலினை நேரடியாக உடம்பில் செலுத்த ஊசிகளும், பீட்டா செல் குறைபாடுகளை களைய, பல புதிய, மேம்படுத்தப்பட்ட, சுலமாக எடுத்துக்கொள்ளும் வகையில் மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கிறது. ( அவை பற்றி தொடர்ச்சியாக காண்போம்).!

5. இந்தியாவில் இயங்கும் மருத்துவமனைகளில் 4ல் ஒரு பங்கு, சர்க்கரை நோய் குறைபாடுகள் சம்பந்தமாக உள்ள்து...டையாபடிக் கிளினிக்ஸ் & ஹாஸ்பிட்டல்ஸ் என்பது இன்னொரு முக்கிய தகவல்.!

6. வரும் காலத்தில், இந்த இன்சுலினை கணையம் தவிர, உடலின் வேறு ஏதாவது பகுதியில் சுரக்க வைக்க இயலுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. கண்டு பிடிப்பவர்களுக்கு நிச்சயம் நோபல் தான். அதன் பின்னர் ஒரு பொற்காலம் மக்களுக்காக காத்திருப்பது திண்ணம்.

7. இதயம், கல்லீரல் போல பல மாற்று அறுவை சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ள போதும், "கணைய மாற்று சிகிச்சை"...கைக்கு எட்டாத ஒரு மந்திரம் போல் உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கணைய மாற்று சிகிச்சை சுலபமாயின்...வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போடலாம். Interested People can Share.

...தொடர்வோம். வணக்கம் நட்புகளே.
By: Rama Subramaniam Nageswaran

Thursday, March 29, 2012

இன்வர்ட்டர் பற்றிய சில முக்கிய குறிப்புகள்:
1. கவனம்:

மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று 500க்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. பல இடங்களில் ஸ்டாக் இல்லை. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 200 வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.

இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் 5 விளக்குகள், 4 ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.

பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

2. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.
4 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்கும் மேல் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார் போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

3. பராமரிப்பது எப்படி:

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம் என்று சொல்கிரார்கள்.! அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.

பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.

இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!

நன்றி கோபால் கண்ணன்Gopal Kannan...ஷியாம் Shyam Kumar...

Wednesday, March 21, 2012

ஊனுடம்பே ஆலயம்

உடலும் உயிரும் இசைந்து வணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு, வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி, குறுகியும், விரிந்தும், நுணுகியும் இயங்கத் தக்க அறிவுத் திறன் இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கருமூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.




ஒரு உயர்ந்த குறிக்கோளோடு மனித உயிர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளன. மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்ளவும், அறிவில் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெறும் நிலையான அமைதியைப் பெறவும் உள் நோக்கமாக அமைந்துள்ளதே மனித உயிர்.


அறிவின் உயர்வு பெற்று உயிரின் மதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.




-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Monday, March 19, 2012

திருமூலர்

திருமூலர்
திருமூலரின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளவை சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துள் திருமூல நாயனார் புராணமும், நம்பியாண்டார் நம்பி திரு மூலரைப் பற்றிப் பாடிய பாடலும்34 ‘தமிழ் மூவாயிரம்’ என்னும் திரு மந்திரப் பாயிரத்தில் உள்ள ‘திருமூலர் வரலாறு’ என்னும் அதிகாரமு மாகும். இவற்றுள், பாயிரத்தில் உள்ள பல பாடல்கள் இடைச் செருகலாக உள்ளன.
திருமூலர் பொதிகை மலையில் அகத்தியரைக் காண்பதற்காகக் கயிலை மலையிலிருந்து தென் திசைக்கு வந்தார் என்ற பெரிய புராணச் செய்திக்குத் திருமந்திரப் பாயிரத்தில் ஆதாரம் யாதுமில்லை. மாறாக, ஆசிரியர் நூலினுள் அகத்தியரின் வரலாற்றைஅவர் பொதிய மலைக்கு வந்த காரணத்தை ஒரு புராணக்கதை போலக் கூறுகின்றார்35. அகத்தியர் பற்றிய வரலாறுகள் பல. அவற்றுள் எந்த அகத்தியர் திரு மூலருக்குச் சம காலத்தவர் எனத் தெரியவில்லை.
‘திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார், ஆண்டுக்கு ஒரு பாடலாகத் திருமந்திரப் பாடல்களை இயற்றினார்’ என்று சேக்கிழார் கூறும் செய்தி அவர் செவி வழிக் கேட்டதாதல் வேண்டும். திருமூலர் யோக ஆற்றலால் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால், யோகத்தில் 3000 ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொரு பாடலாகத் திருமந்திரத்தைப் பாடினார் எனக் கொள்ளுதற்குச் சான்றில்லை. மாறாக, திருமந்திரத்தின் பல பகுதிகளை நோக்கும் போது, அவை ஒருங்கே ஒரு காலத்தில் செய்யப்பட்டனவாகத் தோன்று கின்றனவே அன்றி, ஆண்டுக்கொரு பாடலாக வெளிப் போந்தவையாகத் தோன்ற வில்லை.
இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் திருமூலரின் காலத்தைக் கண்டறிவதில் இடர் பாடுகள் உள்ளமையைத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இங்கு ஒரு சில அகச் சான்றுகளைக் கொண்டு அவரது காலத்தை வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் திருத் தொண்டத் தொகையுள் ‘நம்பிரான் திருமூலர்’ எனக் குறிப்பிடுகின்றமையால், 8ஆம் நூற்றாண்டையே திருமூலரின் காலத்திற்குப் பின் எல்லையாகக் கொள்ளலாம். திரு மந்திரத்துள் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்னும் குறிப்பு வருகிறது36 சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுடன், கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் சேர்ந்து ஐந்து மண்டலங்களாக எண்ணப்படும் வழக்கு உண்டான பின்னரே திருமூலர் நூல் பாடியிருக்க வேண்டும். சங்க இலக்கியத் திலும், சிலம்பிலும் கொங்கரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன என்ற போதிலும் கொங்கு மண்டலம் என்ற குறியீடு இல்லை. தொண்டை மண்டலம் என்ற வழக்குப் பல்லவர் ஆட்சிக்குப் பின்னரே உண்டாயிற்று. பல்லவரின் ஆட்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம்நூற்றாண்டு வரை நிலவியது. திருமூலர் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார்37 சிற்றம்பலத்தில் முதன்முதலில் பொன்வேய்ந்தவன் 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னாகிய சிம்மவர்மன்1 ஆவான்.
தேவார காலத்திலும் அதற்குப் பின்னும் சமய, காப்பிய இலக்கியங்களைப் பல்வகை விருத்தயாப்புகளில் பாடும் வழக்கம் இருந்தது. திருமூலரோ கலிவிருத்த யாப்பையே மேற்கொண்டுள்ளார். இக்காரணத்தால் அவர் தேவார காலத்திற்கும் முன்பிருந்தவராதல் வேண்டும்.
வெள்ளை வாரணனார் திருமந்திரத்தின் சொற்கள், தொடர்கள் ஆகியவை மூவர் தேவாரத்திலும் ஆளப் பெற்றமையை எடுத்துக் காட்டுகின்றார்.
மேற்குறித்த காரணங்களைக் கொண்டு திருமூலர் நூல் பாடிய காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினை யொட்டிச் சற்று முன்பின்னாகக் கொள்ளப் படலாம்38.
நந்தியின் சீடர்கள்எண்மர். அவர்கள் ‘நாதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றவர். அவர்கள் நான்கு நந்திகள், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர், திருமூலர் என்போர்.39
திருமூலருக்குச் சிவன் ஏழுலட்சம் முறைகளைக் கூறினார். அவைகளைத் திருமூலர் செய்து பார்த்துத் தேர்ந்தார் அம்முறைகளைச் சுருக்கிச் கொங்கணர் பாடினார்.40
திருமூலர் அறிந்த முறைகளைக் கொங்கணர் பாடினார் என்றதனால் கொங்கணர் திருமூலரின் மாணவராதல் வேண்டும்.
திருமூலர் சோழனின் வேண்டுகோளுக்கிணங்க சிதம்பரத்தில் நடராசன் சிலையைத் தங்கத்தால் வார்த்துத் தந்தார் என்று அகத்தியர் குறிப்பிடுவதனால் திருமூலருக்கு அகத்தியர் சமகாலத்தவராகவோ அல்லது பிற்பட்டவராகவோ இருக்கலாம்.
“வெல்லுமே யினியென்ன இராசாளி முன்னே
மேவுமோ கொக்குகள் கொங்கணரே ஐயா
சொல்லுமே சட்டைமுனி சொன்ன வாரே
தூண்டினதை மூலரென் சிறிய தந்தை
பல்லுறவை படித்தாரே பிண்ணாக் கீசர்
பாடுமென்ற உரைப்படி பாடி னேனே”41
என்னும் மச்சமுனி உரையால், திருமூலர், கொங்கணர், சட்டைமுனி, பிண்ணாக்கீசர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவராவர்.
“செய்யவே திருநீல கண்டர் வைப்பு”
“நீலகண்டர் உரைத்திருத்த பாண்டம் கூட”
“உள்ளபடி திருநீல கண்டர் வித்தை
உற்றுப்பார் திருமூலர் உரைத்தா ரப்பா”42
என்பதனால், திருநீலகண்டரும் மச்சமுனியும் சமகாலத் தவராக கருதலாம்.
“பான்மையாம் கொங்கணரும் இந்த பாகம்
பாரினிலே களங்கமறச் சொல்ல வில்லை
மேன்மையுடன் அகஸ்தியரும் புலஸ்தி யருக்கு
மேதினியில் விளக்கமறச் சொல்ல வில்லை
வாண்மையுடன் புலிப்பாணி இந்த பாகம்
வசனித்தார் ஆயிரத்துவன் னூருக்குள்”43
“ஆமேதான் அகத்தியரும் முன்னே செல்ல
அன்பான தேரையரும் பின்னே செல்ல”44
எனவரும் போகரின் குறிப்புகளால் கொங்கணர், அகஸ்தியர், புலஸ்தியர், புலிப்பாணி, தேரையர் ஆகியோர் போகரின் காலத்தவர்களாகவோ முற்பட்டவர்களாகவே இருக்கலாம்.
“பொய்யுரையான் சத்தியங்கள் மெத்த வுண்டு
ஆகனவன் திண்டுடலன் குச்சிக் காலன்”45
போகர், பொய்யுரைக்காத வாய்மையாளர் என்றும் தடித்த உடலும் குச்சிக் காலும் கொண்டவர் என்றும் உரைப்பதனைக் கொண்டு, காகப்புசண்டரும் போகரும் சமகாலத்தவர் என்று கொள்ளல் தகும்.
“மெச்சுவேன் யாகோபு தேரை யாரை
வேணபொருள் வைத்திருக்கும் அகஸ்திய நாதன்
குச்சுப் போற் தானிருக்கும் கோரக்கன் தன்னை
குடுகுடுக்கைக் கஞ்சாவைக் கொட்டி மேய்ந்தான்”46
என்றதனால் யாகோபு, தேரையர், அகத்தியர், கோரக்கர் ஆகியோரின் காலமே காகப்புசண்டர் காலமும் ஆகலாம்.
“ஆளான ரோமரிஷி பாட்ட னுக்கு
அழகாக வந்துதித்த இராம தேவன்”47
ரோமரிஷி, இராமதேவர் ஆகியோரை போகரின் காலத்தொடு கூறலாம்.
“தெள்ளுதமிழ்க் கவிவாணர் இவர்க்கு ஈடுண்டோ?
செந்தமிழின் சுவையறிந்த சிவ வாக்கியர் தான்”48
என்றதனால் போகருடன் சிவ வாக்கியரை இணைத்துக் காணத் தோன்றும்.
நபிகள் நாயகத்தை யாகோபு கண்டு வந்ததாகப் போகர்49 குறிப்பிடுவதிலிருந்து நபிகள் காலமே சித்தர்களின் காலமும் ஆகலாம்.
சட்டமுனியின் உபதேசத்தால் ஞானம் பெற்ற பாம்பாட்டிச் சித்தர், வெகுகாலம் வாழ்ந்திருந்து, சமாதி அடைந்தார்50.
“சேக்கிழார் அறுபத்து மூவர் தானோ”51
என, காகப்புசண்டர் உரைப்பதனால் சேக்கிழார் காலத்திற்குப் பிற்பட்டவர் காகப்புசண்டர் எனலாம்.
“கோரக்கரும் போகரும் சம காலத்தவர் என்றும், இவர்கள் காலத்திலேயே பதினெண் சித்தர்களும் வாழ்ந்தனர் என்றும், அது கி.பி. மூன்றிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் பேராசிரியர். ந. சேதுரகுநாதன் கருதுகிறார்.”52
“போகர் சீன நாட்டைச் சேர்ந்த மண்பானை முதலியவற்றைச் செய்பவர் என்பர். இவரைப் பௌத்தத் துறவி என்றும் சீனப்பயணியாக 1600 ஆண்டுகளுக்கு முன் பாரத நாட்டுக்கு வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான சில இடங்களைக் தரிசித்துவிட்டு தமிழ் நாட்டுக்கு வந்தவ ரென்றும் கூறுவர்”53
“கேளேநீ கலியுகத்தில் இருநூற் றைந்தில்
கேசரிபோல் புலிப்பாணி பேரும் பெற்றேன்”54
என்பதிலிருந்து கலி205இல் புலிப்பாணி என்னும் பெயரைப் பெற்றதாக உரைப்பதிலிருந்து இவரின் காலம் (கிறித்து ஆண்டு, கலியாண்டு 3101லிருந்து துவங்குகிறது) 3101205 = 2896, கி.மு. 2896 என்றாகிறது. புலிப்பாணி போகரின் மாணவராகக் கருதப் படுவதனால் அதுவே, போகரின் காலமாகலாம்.
“சோழ நாட்டில் காவிரி நதியின் பாங்குற்ற கொள்ளிட நதி தீரத்தில் அமைந்துள்ள பரூர்ப்பட்டி என்னுஞ் சிற்வுரில் உள்ள, சடையப்ப கவுண்டன் என்பவர் என்னை அனுசரித்து வாழ்த்தி நின்றார். ஆங்கே, பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில், சமாதி நிலையுடைந்தேன். சித்தனாகிய எனக்கு மரணம் என்பதோ இல்லை. அதே போன்று, பரிவிருத்தி ஆயிரத்து நூற்றியிருப்பதாறாவது ஆண்டில் சமாதி அடைந்த சித்தர்களுடன் வெளியே வந்து, கருணையுடன் மக்களை ஆள்வோம்.”55 என்பதால் கோரக்கர் காலம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 என்றாகும்.
“உத்தமஞ்சி வாடுசுமி நீ வெனவே
மனர் வடுகி லுரைத்தல் போல்”56
என்று தெலுங்கு வேமன்னரைக் குறிப்பிடுவதனால், வேமன்னர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர்57 என்பதால் தேரையரையும் 15ஆம் நூற்றாண் டெனலாம். மேலும் “உருளைக் கிழங்கு கற்பம்” பற்றி கரிசலில் குறிப்பிடுவதனால், உருளைக் கிழங்கு தென்னிந்தியாவுக்கு வந்தது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு என்று அறிவதனாலும் தேரையர் சற்றேறக் குறைய 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு58 என்பர்.
உருளைக் கிழங்கு, தேரையர் காலத்தை அறியப் பயன்படுமா என்பதில் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் விளை பொருளாக ஆனது 16 ஆம் நூற்றாண்டு அவ்வளவே, பொருளாகவோ, மருந்தாகவோ அதற்கு முன்பிருந்தும் வந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் வேமன்னர் பற்றிய குறிப்பு காணப்படுவதிலிருந்து ஓரளவுக்கு வேமன்னர் காலத்தொடு தொடர்பு இருப்பதாகக் கருதலாம். என்றாலும், பதிகப்பாடல்கள் மூலநூலாசிரியர் தான் இயற்றினார் என்பதிலும் ஐயம் தோன்றுகிறது.
தமிழில் உள்ள மருத்துவ நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிவதில் பெருத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளைக் கூறுமிடத்து ஒன்றுக் கொன்று மாறுபட்ட தகவல்களாகவே இருக்கின்றன.
அகத்தியர் என்னும் சித்தர்காலத்தைக் கண்டறிந்த அறிஞர்கள், அகத்தியர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியம் போன்றவற்றில் 37 பேர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்களில் மருத்துவம் போன்ற முறைகளைச் செய்த அகத்தியர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகவும் கருதுகின்றனர்.
மருத்துவ நூலுள் காணப்படும் செய்திகளைக் கொண்டு பார்த்தால், திரு மூலருக்கும் அகத்தியருக்கும் தொடர்பிருந்தது தெரிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகத்தியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரோடு எப்படித் தொடர்பு கொண்டிருக்க முடியும்?
கோரக்கர் நூல், கோரக்கர் கி.பி. 1233இல் சமாதி அடைந்தாகக் கூறுகிறது. ஆனால், அந்நூல் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
போகர், 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பர். புலிப்பாணி, தன்நூலில் போகருக்குப் பின் தான் பழனி கோயில் முறையைச் செய்யத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிடும் போது, அது கி.மு. 2896 எனத் தெரிகிறது. அப்படியானால் புலிப்பாணி போகரின் மாணவர் என்பது பொருந்தாது. அதே போல் தேரையர் கி.பி. 16ஆம் நூற்றாண்டு என்பர். இவரும் போகரின் மாணவர் என்பர் இதுவும் பொருந்தவில்லை.
திருமூலரும் போகரும் சமகாலத்தவராக மருத்துவ நூல் கூறுகிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் திருமூலரும், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போகரும் எப்படிச் சமகாலத்தவராகக் கருத முடியும்? என்றாலும், ஒரு சில ஆண்டுகள் முன் பின்னாக இருந்து, இவ்விருவரும் சமகாலம் என்பது ஓரளவுக்கு ஒத்துப் போகலாம். மற்ற சித்தர்கள் காலம் ஒத்துக் காணப்படவில்லை.
எனவே, தற்போது வழங்கி வரும் நூல்களைக் கொண்டு சித்தர்களின் காலத்தைக் கண்டறிய முயல்வது முறையாகத் தோன்றவில்லை. அவை அனைத்தும் பிற்காலத்தில் பலரால் இயற்றப் பெற்றவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்பைத் தங்கள் மனம் போனவாறு இணைத்துக் கூறியுள்ளனர்.

Sunday, February 12, 2012

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள்!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி


பிளஸ் டூ படிக்கும் என் மகள் தினமும் இரவு 9.30 மணிக்கு மேல் படிக்க முடியாமல் தூங்கிவிடுகிறாள். காலையில் 4.30 - 5.00 மணிக்கு எழுந்தாலும், 6.00 மணி வரை தூங்கித் தூங்கி விழுகிறாள். அவளுடைய தூக்கத்தைக் கட்டுப்படுத்தினால் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெறலாம். அதற்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் எவை?மகாதேவன், ஓசூர். மனிதன் என்ற சொல்லே மனத்தின் வசப்பட்டு இயங்குபவன் என்பதால் ஏற்பட்டது. மனிதனின் வாழ்க்கையில் மனமும் புத்தியும் பெரும் பங்கு கொள்கின்றன. உடலை வளர்க்கும் உணவு மனத்தையும் புத்தியையும் வளர்க்கப் பயன்பட வேண்டும். மனமும் புத்தியும் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் ஆளுகைக்குட்பட்டவை. ஸத்துவம் என்பது அறிவையும், ரஜஸ் என்பது முயற்சியையும், தமஸ் என்பது இவ்விரண்டையும் கட்டுப்படுத்துவதையும் குறிக்கும். உலகம் தோன்றிய பொழுதே உறக்கமும் தோன்றியுள்ளது. உறக்கத்துக்குக் காரணம் தமோ குணம். அதன் மாற்றுருவம் உறக்கம் எனப்படும். தமோ குணத்தின் மிகுதியால் தோன்றும் உறக்கம் பெரும்பாலும் இரவிலேயே ஏற்படுகிறது. உறக்கத்துக்குக் காரணம் கபதோஷத்தின் மூலம் துவாரங்கள் அடைபடுவதாலும், களைப்பினால் பலன்கள் தத்தம் பொருட்களுடன் தொடர்பிலிருந்து விலகிக் கொள்வதாலும் மனிதனை உறக்கம் தழுவிக் கொள்கிறது. புலன்கள் பொருட் தொடர்பிலிருந்து விலகினாலும், மனது இதன் புலப் பொருட்களுடன் தொடர்புவிடாமல் இருந்து கொள்வதால் மனிதன் பல வகையான கனவுகளைக் காண்கிறான் என்கிறது ஆயுர்வேதம். தமோ குணம் அதிகமாகக் காணும்போது ஸôத்வீக ராஜஸ குணங்கள் அடக்கப்பட்டு அறிவு மந்தப்படுதல், சோம்பல், அசதி, தூங்கித் தூங்கி வழிதல், ஒரு வேலையிலும் ஈடுபடாதிருத்தல், ஏக்கம், புத்தி மயக்கம், மெத்தனமாயிருத்தல், ஒருவன் தூண்டினாலன்றி வேலையில் ஈடுபாடற்றிருத்தல், தூண்டப்பட்டாலும் தூண்டப் பெற்ற அளவிற்கு மேல் வேலை செய்யாதிருத்தல், தூண்டப்பட்ட அளவிற்கும் மேலாக அடிக்கடி தூண்டுதல் தேவைப்படுதல், இவற்றால் சுகமா? துக்கமா? என்ற பகுத்தறிவற்றிருத்தல் இவை எல்லாம் காணப்படும். கபதோஷம் பொதுவாக நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை ஆகியவை படைத்தது. தமோகுண கபதோஷத்தின் ஆதிக்கத்தைக் குறைத்தால் உங்களுடைய மகள் தூங்கி வழியும் பழக்கதிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. லேபனம் - நஸ்யம் - தூபனம் போன்ற சில எளிய சிகிச்சை முறைகளால் தூங்கி வழியும் பழக்கத்திலிருந்து விடுபடலாம். லேபனம் - 5 கிராம் ராஸ்னாதி எனும் சூரண மருந்துடன் 2 கிராம் ஏலாதி சூரணத்தைத் கலந்து, 10 மி.லி. இஞ்சிச்சாறு குழைத்து லேசாகச் சூடாக்கி, தினமும் இரவு 7 -9 வரை நெற்றியில் பற்று இடவும். காய்ந்து போகும் இந்த லேபனத்தைத் தட்டி உதிர்த்துவிடவும். நஸ்யம் - அணு தைலம் எனும் மூலிகைத் தைலத்தை, காலை இரவு பல் தேய்த்த பிறகு மூக்கினுள் விட்டுக் காறித் துப்பி விடவும். தூபனம் - ஓர் ஆட்காட்டி விரல் நீளத்திலுள்ள வசம்புக் கட்டையை, மஞ்சளைத் தடவி, முனையில் நெய் புரட்டி விளக்கில் காண்பித்து வரும் புகையை மூக்கினுள் விட்டு, வாய் வழியாக வெளியே விடவும், நஸ்ய சிகிச்சை செய்து கொண்ட பிறகு. கண்டூஷம் - மகாலேபனம் - அஞ்ஜனம் போன்ற முறைகளாலும் பயன்பெறலாம். கண்டூஷம் - ஒரு ஸ்பூன் (5 மி.லி.) அளவு சுத்தமான தேனை வாயிலிட்டுக் குலுக்க, எச்சிலுடன் கலந்து வாய் நிறைய ஆனதும் துப்பிவிடவும், இரவில் படுக்கும் முன். முகாலேபனம் - ஏலாதி எனும் சூரண மருந்தை, பன்னீருடன் குழைத்துக் காலையில் முகம் கழுவிய பிறகு, முகத்தில் பூசி 1/4 - 1/ 2 மணி நேரம் ஊறிய பிறகு, பன்னீரால் நனைத்துக் கழுவிவிடவும். அஞ்ஜனம் - இளநீர்க் குழம்பு 2 சொட்டு கண்களில் விட்டுக் கொள்ளவும். காலை, மாலை உணவுக்கு முன்பாக. சாரஸ்வத சூரண மருந்தைச் சுமார் 5 -6 கிராம் எடுத்து 7.5 மி.லி. (1 1/2 ஸ்பூன்) சுத்தமான பசு நெய் குழைத்து இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிடும் பிளஸ் டூ மாணவ, மாணவியர் படிப்பில் படுசுட்டியாக இருப்பார்கள். தூங்கித் தூங்கி வழிய மாட்டார்கள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

Sunday, January 29, 2012

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

சுயநலமற்ற தன்னார்வத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

தன்னார்வத் தொண்டு செய்வது என்பதே ஒரு பொதுச்சேவைதானே, இதில் சுயநலமென்ன? பொதுநலமென்ன? என்று கேட்கத்தோன்றலாம். ஆனால் சுயநலமாக இல்லாமல் பொதுநல எண்ணத்துடன் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதே உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்த கருத்தைத்தான் ஆரோக்கியத்துடன்கூடிய நீண்டகால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துகிறது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக `பொதுநல' நோக்குடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறது அமெரிக்க உளவியலாளர் சாரா கோன்ராத் தலைமையிலான ஆய்வு.

அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரின் சுமார் 10,317 உயர்கல்வி மாணவர்களை கடந்த 1957-ம்ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற (Wisconsin Longitudinal Study நஞ்ஞிக்ஷட் என்னும்) ஆய்வின் தகவல்களை பரிசோதித்தனர். இதில் கலந்துகொண்ட மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், அவர் களுக்கு கடந்த 2008-ம் ஆண்டில் வயது சராசரியாக 69.12 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், `பொதுநல' நோக்குடன் அல்லது இரக்க குணத்துடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்றும், மாறாக சுயநல காரணங்களுக்காக அல்லது சுய திருப்திக்காக ஈடுபடுவோரும், தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களும் ஒரே ஆயுட்காலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கடந்த 2004-ம் ஆண்டில், இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டோமா இல்லையா, தொடர்ந்து ஈடுபட்டோமா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும்,தன் னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டதற்கு காரணங்களாக சுமார் 10 கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரியப்படுத்த சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் மேற்குறிப்பிட்ட 10 கேள்விகளை கேட்பதற்கு, சுமார் 12 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டிலேயே, அவர்களுடைய உடல் ஆரோக்கியம், சமுதாய அந்தஸ்து (பொருளாதார நிலை), திருமண நிலை மற்றும் புகைப்பிடித்தல், உடல் எடை அளவீடு, மதுப்பழக்கம் போன்ற ஆரோக்கிய கேட்டுக்கான காரணிகள் என பல்வேறு விவரங்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே, இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள் எத்தனை பேர் கடந்த 2008-ம் ஆண்டில் உயிரோடு இருந்தார்கள் என்று நிர்ணயித்தார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 2,384 தன்னார்வலர்கள் அல்லாதவர்களில் 4.3 விழுக்காட்டினரும், சுயநல காரணங்களுக்காக தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர்களில் 4 விழுக்காட்டினரும், 10 கேள்விகளுக்கு பதிலலளித்த பின்னர் 4 ஆண்டுகளில் (2008ல்) நோய்வாய்ப்பட்டு இறந்துபோயினர். மாறாக, பொதுநல நோக்குடன் தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர் களில் வெறும் 1.6 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த 2008ல் இறந்து போயினர்என்கிறது இந்த ஆய்வு!

அட, ஆச்சரியமாக இருக்கிறதே! ஆமாம், இவர்களுக்குள் இருக்கும் இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

பிறரின் நலத்தை முன்னிலைப்படுத்தி தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோருக்கு தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளைச்சல்கள் அல்லது பிரச்சினைகளான `நேரவிரயம்' மற்றும் `சம்பளமின்மை' போன்றவை குறித்த பாதிப்போ, கவலையோ முற்றிலும் போவதுகூட இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சாரா கோன்ராத்!

ஆக, `சுயநலத்துடன் மேற்கொள்ளப்படும் தன்னார்வத் தொண்டுகளால் நமக்கு பயனிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிதர்சனம் முற்றிலும் நேர் மறையானது' என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இந்த ஆய்வு!

ஒரு வேளை இப்படியெல்லாம் நடக்கும் என்பது நன்றாக தெரிந்ததால்தான் `முல்லைக்குக் கூட தன் தேரைக் கொடுத்திருப்பாரோ' மன்னன் பாரி?
thanks vayal