Wednesday, May 9, 2012

கீரை

பொன்னாங்கன்னி கீரை !! வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து ஓரளவு உள்ளது. கால்சியம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் ரிபோ ப்ளோமின் நிறைந்துள்ளன. மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், கந்தகம் ஆகியவை ஓரளவுக்கு உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது. புரதம் ஓரளவுக்கு உள்ளது. வாரம் ஒரு முறை கூட்டு செய்து சாப்பிடலாம்.... வெந்தயக்கீரை !! உடலுக்கு குளிர்ச்சித் தரக்கூடியது வெந்தயக் கீரை. வெந்தயக்கீரையானது வெந்தயத்திற்கான அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது. சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடிய... நோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக் கீரை !! முருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி! மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும். கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது. - சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. - இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி - இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. - மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. - செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. - மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. - தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். - மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தோப்புக்கரணம்

நமது முன்னோர்கள் பிடித்த ""தோப்புக்கரணம்"" சர்வதேச்ப் புகழ் பெற்ற அமெரிக்காவின் "யேல்" மருத்துவப் பல்கலைக் கழகம் சொல்கிறது... தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்த இந்தப் பல்கலை., டாக்டர்கள் குழு, 'தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். காது மடல்களைப் பிடித்து நெற்றியில் குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். அதோடு, மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; உடல்நலனும் மேம்படும்' என்று அறிவித்துள்ளது. இதோடு, இதற்கு 'சூப்பர் பிரைன் யோகா' என்று ஒரு புதுப் பெயர் சூட்டி, மருத்துவப் பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். தோப்புக்கரணம் போடுவதால், மூளை சுறுசுறுப்படையும், மறதி நோயை விரட்டியடிக்கும் என்று இப்போது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூளைக்கும் காதுகளுக்கும் ஒருவகையில் நேரடி தொடர்பு உள்ளது. இதை சீனப்பாரம்பரிய மருத்துவர்களும், இந்திய முனிவர்களும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். அதனால், சீன மருத்துவர்கள் காதுப்பகுதியில் அக்குபஞ்சர் முறைகளைப் புகுத்தினர். முனிவர்களும் கடவுள் முன் தோப்புக்கரணம் போடுவதைக் கையாண்டனர். நவீன மருத்துவ உலகில், பிரான்சைச் சேர்ந்த ‘பால்நோஜியா’ என்ற நரம்பியல் நிபுணர் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், இதுபற்றி ஆராய்ந்தார். காதுகளுக்கும், மொத்த உடல் உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் அறிந்தார். இந்தத் தொடர்பு கருவிலேயே உருவாகிறது என்றும் கண்டறிந்தார். காது மடல்களைப் பிடித்துவிடுவதால் அதன் நரம்புகள் வழியாக மின்தூண்டல் ஏற்பட்டு, மூளையை சுறுசுறுப்படையச் செய்வதாக ‘யேல்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘யூஜிங் ஆங்’ என்பவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மறதியைத் தவிர்த்து, ஞாபகசக்தி பெருகும் என்றும், ‘அல்சைமீர்’ என்ற மறதி நோயைக் குணமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘எரிக் ராபின்சன்’ என்ற மருத்துவர் கூறுகையில் , ‘ஞாபக மறதி நோயைக் குணப்படுத்தும் மருந்து இல்லா வைத்தியம்தான் தோப்புக்கரணம்’ என்று தெரிவித்துள்ளார். ஒருவர் தினமும் தோப்புக்கரணம் போடுவதால், கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கின்றனவாம். * மூளையின் செயல்பாட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேகப்படுத்துகின்றது. * வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். * ஒரு நாளில் அதிக பணிகளைச் செய்ய முடியும். * மூளைக்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றது * பதற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றது. * எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வித்திறனை அதிகப்படுத்துகின்றது. இடது காதைப் பிடிக்கும் போது வலது பக்க மூளை தூண்டப்படுகின்றது. வலது காதைப் பிடிக்கும் போது இடதுபக்க மூளை தூண்டப்படுகின்றது. அதைமுறைப்படி செய்தால் நல்லது. வலது காதை இடது கையால் பிடிக்க வேண்டும். இடது காதை வலது கையால் பிடிக்க வேண்டும். காது மடலின் கீழ்ப்பகுதியை (கம்மல் போடும் பகுதியை) பிடித்து அழுத்தியபடி கையின் பெருவிரலை முன்பகுதியிலும், ஆட்காட்டி விரலை பின்பகுதியிலும் வைத்துப் பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு காதுகளையும் பிடிக்கும் போது இடதுகை உள்ளேயும், வலது கை வெளியேயும் இருக்க வேண்டும்.

Friday, April 27, 2012

உறவுகள் மேம்பட

வேதாத்திரிய சிந்தனைகள் : - ''உறவுகள் மேம்பட'' குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், மேலும் பெரிதாகாமல் இருக்கவும் பின் வரும் கருத்துக்களை பின்பற்றினால் போதும் : - (8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (9) எல்லோரிடத்திலும், எல்லா விசயங்களையும், அவர்களுக்கு -----சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள் (10) கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள் (11) அற்ப விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள் (12) உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், -----கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் (13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் -----தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (14) மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, -----இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை -----சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள் (16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லா வார்த்தைகளையும், -----தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, -----அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள் (17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள் (18) பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி -----வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் -----துவக்க முன்வாருங்கள். வாழ்க்கை இன்பமாக அமையும். வாழ்க வளமுடன்.

Thursday, April 19, 2012

சிறுநீரகத்தில் கற்களா? வாழைத்தண்டில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..

சிறுநீரகத்தில் கற்களா? வாழைத்தண்டில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..

விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதை யான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

சிறுநீரக பிரச்சினை
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சி னைகளைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்ற வற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்று கிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ள வர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்
தென்னிந்தியாவில் பல விதங்களில் வாழைத்தண்டு சமைக்கப்படுகிறது. வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர் கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் கோளாறுகள்
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.
By: Udhai Kumar

Sunday, April 15, 2012

பூச்சிகள் ஜாக்கிரதை!

பூச்சிகள் ஜாக்கிரதை!
by vayal

நமக்கு பாம்பு, தேள், பூரான் தவிர விஷ ஜந்துக்கள் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் பயமும் இல்லை. ஷாக்கடிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் மிகச்சிறிய ஒரு பூச்சிதான். ஸ்க்ரப் டைஃபஸ் என்ற அந்தப் பூச்சி படுத்தியப்பாடு இருக்கிறதே!
ஒரு மாதத்துக்கு முன் திடீரென்று என் மகள் ப்ரியா காய்ச்சலில் அவசியுற்றாள். 104 டிகிரி காய்ச்சல் இறங்கவேயில்லை. ஆன்டிபயாடிக் எதற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை சோர்வு, எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லா மருத்தவ பரிசோதனைகளிலும் “நெகடிவ்’ என்றே ரிசல்ட் வந்தது. ஏழு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கொஞ்சமும் இறங்காததால் பதறிப்போய் பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.
அப்போது ப்ரியாவின் காலில் பளபளவென ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் ஒன்று தோன்றியது. ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல அது இருந்தது.
அதைப்பார்த்த மருத்துவர்கள், இது ஸ்கரப் டைஃபஸ் தான் என்று உறுதியாகக்கூறி சிகிச்சை அளிக்க, காய்ச்சல் இறங்கியது.
எந்த இடத்தில் டைபஸ் பூச்சி கடித்ததோ அதே இடத்தில் எஸ்கார் என்கிற இத்தகைய அடையாளம் தோன்றுமாம்.
எறும்பு போன்ற மிகச்சிறய பூச்சியான இது, அதிகமாக செடி, புதர்களில் காணப்படும்.
முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
காய்ச்சல் கண்ட ஏழு நாட்களுக்கு பின்பும் இது கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோயாளிகளின் மூளை, இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுமாம். தசைகளைத் தாக்கி நோயாளிகளை மாதக்கணக்கில் பலவீனமாக்கும் தன்மை இதற்கு உண்டு.
இந்தப் பூச்சியின் பாதிப்பு மாவீரன் நெப்போலியன் காலத்திலேயே அதிகம் இருந்ததாம். 1812ஆம் ஆண்டு அவர் மாஸ்கோவில் இருந்து படையுடன் திரும்பும் போது, போரினால் இறந்த அவர் வீரர்களை விட இந்தப் பூச்சி கடியினால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதனாலேயே அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டதாம்.
சமீபத்தில் தமிழகத்தின் சில இடங்களில் டைஃபஸ் நோய் முன்பைவிட அதிகம் காணப்படுகிறதாம். உடலில் தோன்றும் எஸ்கார் என்ற இந்த அடையாளத்தை பார்த்தும் இதைத் தவற விடும் மருத்துவர்களும் உள்ளனராம்.
நன்றி-மங்கையர் மலர்

Wednesday, April 11, 2012

எலுமிச்சை சோடா

மறந்துபோன எலுமிச்சை சோடா

நாம் மறந்துவிட்ட எலுமிச்சை +உப்பு +சோடா இது ஒரு இயற்கையான வெயில் கால குளிர் பானம் ஆகும். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து விட்டு உடலுக்கு தீங்கு இளைக்ககூடிய கூல்ட்ரிங்க்ஸ் ( அதாவது வெளிநாட்டு குளிர் பானங்கள் ) சாப்பிடுகின்றனர்.

அதுவும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற பகட்டுக்காக தான். இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் பல தீங்கு உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக தேவையற்ற குளிர் பானம் அருந்துவர்.

ஆனால் நாம் மறந்து போன எலுமிச்சை சோடாவின் பயன்கள் தெரிந்தால் இதெயெல்லாம் அறவே வெறுத்து விடுவோம். எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது இந்தியா தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்ககூடியது. சரி இப்போது நாம் எலுமிச்சை சோடாவின் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

எலுமிச்சம் பழம்

உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும்.

வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

நரம்பு தளர்ச்சிக்கு

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

குழந்தைகளுக்கு

மற்ற எந்தப் பழத்தையும் விட எலுமிச்சம் பழம் தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

உணவுடன் சேர்த்து

எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். பித்தம் குறையும்.மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சை ஊறுகாய் உணவை ஜீரணிக்க உதவும்.

முக அழகிற்கு

எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.

வெயில் காலத்திற்கு

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாட்களில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சம் பழத்தை சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

தேநீரில் ஒரு அரைஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து குளித்தால் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்

முக்கிய குறிப்பு

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.