Wednesday, February 16, 2011

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி..1

பாதுகாப்பு படைவீரர்களுக்கு மனவளக்கலை பயிற்சி..1
பொள்ளாச்சி:"வட மாநிலங்களில், மலை பிரதேசத்திலுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு வேதாத்திரியின் மனவளக்கலை யோகா குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது' என, ஆழியாறில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நான்காவது மருத்துவர் கருத்தரங்கு நேற்று துவங்கியது. உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தம் வரவேற்றார். கோவை மருத்துவ கல்லூரி டீன் விமலா தலைமை வகித்தார்.புதுடில்லி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் (டி.ஆர்.டி.ஓ.,) இணை இயக்குனர் ராமசந்திரன் பேசியதாவது:பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மூலம் மன வளக்கலை யோகா குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இந்த யோகா மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது, யோகாவின் பயன் ஆகியவை குறித்து ஆராயப்படுகிறது.மனவளக்கலை என்பது மனித உணர்வுகளை புரிந்து கொள்ளகூடிய ஒரு எளிய வழிமுறையாகும். நோயாளிகளின் பிரச்னைகளை மருந்துகளின் மூலம் நிவர்த்தி செய்வதைவிட, மனரீதியாக தீர்க்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சையளிக்க முடியும். உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் எளிதாக மருத்துவ சிகிச்சைகளை கொண்டு செல்லலாம்.மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை கொண்டு செல்வது கடினம். மனவளக்கலை மூலமாக நோயாளிகளுக்கு கட்டாயமாக மன அமைதியை ஏற்படுத்த முடியும்.போர் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தும் போது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, டி.ஆர்.டி.ஓ., மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மனவளக்கலை யோகா புகுத்தப்படுகிறது. வடப்பகுதியில், மலை சார்ந்த இடங்களில் அதிக பனி பொழிவுக்கு நடுவில், பாதுகாப்பு படையினர் பணியாற்றி வரும் சூழல் உள்ளது.மற்ற பகுதிகளை போன்று மலை பிரதேசங்களில், கால நிலை இருக்காது. இதனால், உடலில் வலிமை இழக்கும் வாய்ப்புள்ளது. மனவளக்கலை யோகா கற்று அதை பயன்படுத்துவதன் மூலம் மலை பிரதேசத்திலும், சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டாலும் இயல்பாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை, குண்டலினி யோகா ஆகியவற்றை விஞ்ஞான பூர்வமாக அனைத்து மருத்துவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். யோகா மூலமாக அனாவசியப் பிரச்னைகளை தவிர்ப்பதுடன் நோய்கள் உண்டாகாமலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும். இது குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.இவ்வாறு, இணை இயக்குனர் ராமசந்திரன் பேசினார்..

No comments: