Tuesday, May 10, 2011

கணவன் மனைவிக்கு அறிவுரை

கணவன் மனைவிக்கு அறிவுரை
குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.
கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.

குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.

by Vethathiriyam for World Peace

1 comment:

Unknown said...

Sir you are doing a good job!
Sir I have a question :
I need to know what is manonmaniya thavam.
why it has been banned later?