Sunday, September 16, 2012

மனைவி நல வேட்பு நாள்

'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102வது ஜெயந்தி விழா' சிறப்பு கொண்டாட்டங்கள்
25 ஆகஸ்டு 2012
சிங்கப்பூரைச் சார்ந்த அனைத்து எளியமுறை குண்டலினி யோகா மன்றங்களும் இணைந்து 'மனைவி நல வேட்பு நாள்' மற்றும் 'வேதாத்திரி மகரிஷி 102-வது ஜெயந்தி விழா' சிறப்பு நிகழ்ச்சிகளை ஸ்ரீ ருத்தர காளியம்மன் கோவிலில், 25அம் ஆகஸ்டு 2012 அன்று சிறப்பாக நடத்தின. திரு பரமசிவம் அவர்கள் இறை வணக்கமும், குரு வணக்கமும் பாட விழா இனிதே தொடங்கியது. விழாவிற்கு வந்த அனைத்து பொது மக்களையும் திரு பிரபாகரன் அவர்கள் வரவேற்று 'உலக அமைதி வேள்வியின்' அவசியத்தை விளக்கினார். அனைத்து அறக்கட்டளைகளையும் பிரதிநிதிக்கும் வகையில் ஒன்பது உறுப்பினர்கள் மேடைக்கு வந்து 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று உலக அமைதி வேள்வியை சிறப்பாக நடத்தினர். விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அவற்றைத் தொடர்ந்து கூறி 'உலக அமைதி வேள்வியைச் சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து 'குடும்ப அமைதி' என்னும் நாடகத்தை எளிய முறைக் குண்டலினி யோகாவின் அடிப்படையில் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தொடர்ந்து, உலக சமுதாய சேவா சங்கத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசிய ஒருங்கிணைப்பாளர் திரு சேர்மா செல்வராஜ் அவர்கள், 'உலக அமைதி வேள்வி' மற்றும் 'மனைவி நல வேட்பு நாள் விழா' பற்றிய சிறப்பான தகவல்களை அளித்து சிறப்புரை ஆற்றினார். மனித உறவுகளிலேயே 'கணவன்-மனைவி' உறவு தான் மிகவும் புனிதமானது என்றும் ஆனால் தற்காலத்தில் ஒருவருக்கொருவர் மற்றவரை துன்புறுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட அனுமதிச்சீட்டாகவே திருமணத்தைக் கருதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நல்கிய 'உலக சமாதானம்' மலருவதற்கு தனி மனித அமைதியே அடிப்படை என்று அவர் கூறியதை திறம்பட விளக்கினார். தனி மனித அமைதியே, குடும்ப அமைதியாக மலர அடிப்படையாகும். குடும்ப அமைதியே, சமுதாய அமைதியாக மலர்ந்து பின்னர் உலக அமைதியும் ஏற்படும் என்பதையும் விளக்கினார். தனி மனித அமைதி ஏற்பட தன்னை அறிவது மிகவும் அவசியமாகும். தன்னை அறிந்தால் மட்டும் போதாது. அந்த அறிவினில் ஒருவர் மற்றவரை புரிந்து உணர்ந்து மதித்து திட்டமிட்டு வாழ்வது அதற்கு அவசியம். அந்த நிலையில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற பண்புகளை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்வதன் மூலம் குடும்ப அமைதியை எளிதில் அனைவரும் பெற்று மகிழலாம்.
ஒருவர் மற்றவரை துன்புறுத்தி வாழ்வதை விட, மற்றவரை மறந்தும் மன்னித்தும் வாழ்வதன் மூலம், வாழ்வில் தொடர்ந்து மகிழ்ச்சியைக் காணலாம். வாழ்க்கைத் துணைவரின் அன்பை இழந்து ஒரு நாள் கூட வாழ்க்கையில் வீணடிக்கக் கூடாது என்று வேதாத்திரி மகரிஷி அறிவுறுத்துகிறார் என்பதையும் விளக்கினார்.

அவருடைய சிறப்புரைக்குப் பின்னர், தம்பதியினர் அனைவரும் ஒருவருக் கொருவர் எதிரில் அமர்ந்து கொண்டு தத்தம் வாழ்க்கையில் குடும்ப அமைதியைப் பேண உறுதி பூண்டனர். ஒவ்வொரு கணவரும் தம் மனைவிக்கு மலரைக் கொடுத்து 'என்றென்றும் வாழ்நாளில், இந்த மலரைப் போல் வாழ்வில் மென்மையாக நடந்து கொள்வேன்' என்று உறுதி அளித்தனர். மனைவியர் தம் கணவருக்கு ஒரு கனியைக் கொடுத்து 'என்றென்றும் வாழ்நாளில், இந்தக் கனியைப் போல் இனிமையாக நடந்து கொள்வேன்' என்று உறுதி அளித்தனர்.
சில அன்பர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய தங்கள் இனிய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மனவளக்கலை மன்றங்களுக்கு இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக, திரு அதிகாரிப் பிள்ளை அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது மக்கள், சிறப்பு விருந்தினர், தன்னார்வத் தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி நவில, விழாவிற்கு வந்த அனைவரும் சிங்கப்புரிலுள்ள மனவளக்கலை மன்றங்களின் முகவரிகளையும் செயல்படும் நேரங்களையும் குறித்துக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினர்.

No comments: