Tuesday, April 5, 2011

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

மனதின் இயல்பும் கையாளும் நுட்பமும்

வழி தெரியாத ஊருக்கு பயணம் போகும் போது ஒரு வழிப்போக்கனிடம் வழி கேட்டால், இணக்கமான அன்போடு வழி காட்டுபவர்களும் உள்ளார்கள், சிலருக்கு நாம் கேட்கிற ஊர் தெரிந்திருந்தாலும் எமக்கு தெரியாது என்று கூறுபவர்களும் உள்ளார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதர்கள் வாழ்க்கைத் தரம் அமைவதற்கு என்ன காரணம் என்பதை அறிவது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.


சிலருடைய வீடுகளில் சமையல் பாத்திரம் முதல் சாம்பிராணி பாட்டில் ஈறாக, படிக்கிற நூல்கள் முதல் துடைக்கிற துடைப்பம் வரை ஒரே இடத்தை குப்பையாக்கி வைத்தது போல வாழ்வார்கள். சிலபேர்கள் மட்டும், படிக்கிற நூல்கள் ஒருபுறம், பழமைவாய்ந்த பொருள்கள் ஒருபுறம் என அடுக்கி வைத்து வீட்டை அழகுபடுத்துவார்கள். இதே போன்று தான் நமது மனது என்கிற வீட்டை சுத்தமாக வைப்பதும், கண்ட கண்ட பொருட்களைச் சேர்த்து குப்பையாக்குவது அவரவது இயல்பாக இருப்பதால் உலகத்தில் பாவங்கள் அதிகரித்து பரிதாப மரணம் அடைகிற நோயாளிகளாக பலர் வாழ்கிறார்கள். பீரோவில் எதை வைக்க வேண்டும், அலமாரியில் எதை அடுக்க வேண்டும் என்கிற அனுபவம் இல்லாதவன் வாழ்வு குப்பையாவது போல, மேல் மனதில் எதை அடுக்க வேண்டும், நடுமனதில் எது வைப்பதை தடுக்க வேண்டும், ஆழ் மனதில் எதையெல்லாம் வைக்க வேண்டும் என்பதை போதிப்பது தான் ஆன்மீகத்தின் போதனையாகும்.


வள்ளுவர் கடவுள் வாழ்த்து வைக்கவே இல்லை என வாய் வக்கணையாக பேசும் வையகம் இது. வள்ளுவர் குறளை எந்த மனதில் வைப்பது எனத் தெரியாத மூடர்கள். வெளி மனதில் திருக்குறளைப் பதிய வைத்து தெருப் பொறுக்கிகளாக வாழ்நாள் முழுவதும் வடிகட்டிய பதராக வாழ்வியல் நடத்துவதை அன்றாடம் காண்கிறோம். நெறிப்படுத்தாத குறை வள்ளுவத்திடம் இல்லை, தறிகெட்ட மனிதனிடம் மனதில் அமைந்த சூது தான் காரணம். வள்ளுவம் வகைப்படுத்தி மானுட நெறியை வழங்கி இருக்கிறது.


கடவுள் வாழ்த்து முதலாக அறத்துப்பாலை மனிதன் தனது ஆழ்னிலை அடிமனதில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக பொருட்பாலை மனிதன் தனது நடு மனதில் பதிவு செய்ய வேண்டும், காமத்துபாலை மனிதன் தனது மேல் மனதில் பதிவு செய்ய வேண்டும். இதுதான் முறையான ஆன்மீகப் பாடமாகும். காசு, பணம் வைக்க வேண்டிய பெட்டியில் காலணியை வைத்தவன் கதி போல, ஆழ்மனதில் காமத்தை வைத்துவிட்டு அறத்துப்பாலை மேல் மனதில் வைத்தால், அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதற்கு மட்டும் தான் திருக்குறள் பயன்படும். எமக்குத் தெரிந்த ஒருவருக்கு திருக்குறள் அத்தனையும் அத்துபடியாகத் தெரியும், தலைகீழாக கேட்டாலும் நிலைமாறாமல் ஒப்பிப்பார், ஆனால் தனிமனித ஒழுக்கம், அறவே இல்லாத, திருக்குறள் போதனைக்கு எதிர்மாறாக வாழும் சமுதாய உத்தமர். காரணம் என்ன? ஆழ்ந்து யோசித்தால் அவரது ஆழ்மனதில் காமமே ஆட்சி செய்கிறது. வெளிமனதில் திருக்குறள் மணம் வீசுகிறது. என்ன புண்ணியம்? காசு பணம் திரட்டவும், கடைத்தேறா வழிகாட்டவும், அக்கரை பச்சைதேடும் ஆவலான மாடுகளைப் போன்ற மடையர்கள் கூட்டத்தை சேர்க்கவும் திருக்குறள் பேராயுதமாக அன்னவருக்குப் பயன்படுகிறது. அது போகட்டும்.


மனம் என்பது மின்சாரம் மாதிரி, பயன்படுத்தும் விதத்தில் பலன்களை அள்ளிக் கொடுக்கும். மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நமது உயிரையே குடித்துவிடும். அது போல ஆழ் மனதில் தவறான பதிவுகளை உண்டாக்கி விட்டால் நமது அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். மனிதனை அழிப்பது வெளிப்புற காரணியே அல்ல, உள்ளே தவறாக பதிவு செய்யப்பட்ட, அதே சமயம் வைக்கக்கூடாத ஆழ்மன பதிவே தவறாளியாக தடம்புரண்டு விடுகிறது மனிதத் தன்மை.


ஆழ்மனம் என்பது ஆபத்து நிறைந்த களம் என்பதும் உண்மைதான். அங்கே ஆன்ம வாழ்வு தரும் அருளரசு செலுத்தும் ஆண்டவன் உறைவிடமும் அதுதான். காமவேட்கை வெகுவாக ஈர்க்கப்படும் இடமும் ஆழ்மனம் தான். தெரிந்தோ, தெரியாமலோ ஆழ்மனதில் படிந்த கறைகளைத் துடைப்பது தான் தியானமும் தவமும் ஆகும். ஆழ்மனதை ஆலயமாக வைத்திருப்பவர்களை அண்டி வாழும் போது ஆழ்மன கசடுகள் அப்புறப்படுத்தப்படும். திருக்குறளைப் படித்துவிட்டு அனைவருமே அறிவாளிகளாக வர முடியாததற்குக் காரணமே! ஆழ்மனதை துப்புறவு செய்யாமல் ஆழ்மனதின் களிம்புகள் அகற்றப்படாமல் எவ்வளவு தூரம் படித்து நிரப்பினாலும் பயன் விளையாது. திருக்குறளார் என்கிற சமுதாய உத்தமர் பட்டம் வாங்கலாமே தவிர, ஆன்மீக சம்மேளனப்பதவி அமையாது. அடிமாடுகளைத் திரட்டியது போல பல ஆன்மீகப் பயிலரங்குகள் ஆங்காங்கே அரங்கேறுகிறது. ஆனாலும், மனிதம் புனிதமாக பயனிப்பதாக புலப்படவில்லை. ஆழ்மனதை துப்புறவு செய்யத் தெரியாத தொழிலாளியால் ஆன்மீக முன்னேற்றம் கொடுக்கவே முடியாது. துப்புறவுக்கு உடன்படாதவன் துப்பு கெட்டவன் என்பதில் ஐயமே இல்லை.


ஒவ்வொரு மனதிற்கும் ஒரு வீரியசக்தி உள்ளது. ஆழ் மனதின் வீரிய சக்தி, மிகமிக அதிகமாகும். உதாரணமாக புலால் சாப்பிடுவது தவறு என்கிற பதிவை மேல் மனதிலும் பதிவு செய்யலாம். நடுமனதிலும் பதிவு செய்யலாம், ஆழ்மனதிலும் பதிவு செய்யலாம். ஆழ்மனதில் பதிவு செய்தால் புலால் வாடை உண்டாக்கும் கசாப்புக் கடையைப் பார்த்தாலும் உடம்பு நடுக்கம் உண்டாகும், அருவருப்பு உண்டாகும். நடுமனதில் பதிவு செய்தால், புலால் சுவையானது தான் என்றாலும் மருத்துவர்களே சாப்பிடக்கூடாது என்கிறார்கள் வள்ளுவரும், திருமூலரும் கூட வெறுக்கிறார்கள் எனவே சாப்பிடக்கூடாது என ஒரு பாதுகாப்பு அணையை எழுப்பி உள்விவாதம் நடத்தி புலால் சாப்பிடுவதை வெறுப்பார்கள். மேல் மனதில் பதிவாகி இருந்தால், புலால் சப்பிடுவது தவறு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உடம்பில் பலம் குறைவாகத் தெரிகிறது, உடலுழைப்பு செய்ய முடியவில்லை. எனவே சிறிது சிறிதாக விடுவதற்கு முயற்சி செய்கிறேன் என்பார்கள். இது தான் வாழ்வியல் நெறியாகும். சிலர் ஆடம்பரமாக வாழ்வதை ஆழ்மனப் பதிவாக்கி விடுவார்கள். இவர்களுக்கு வறுமை வந்தால் கூட கடன்வாங்கியாவது வாழ்ந்து விடத்துடித்து கெட்டுப்போவார்கள்.


ஒரு ஞானி நடந்து போகும் போது ஒரு வழிப்போக்கன் காலை மிதித்துவிடுகிறார், வழிப்போக்கன் தாறுமாறாக அடித்து மயக்கம் வந்து வீழ்ந்து கிடப்பது போல ஞானியை துன்பப்படுத்தி விட்டு செல்கிறான். அந்த வழியாக வந்த சீடர்க ஞானியின் நிலை தெரிந்து தண்ணீர் தெளித்து சுய நினைவுக்கு வர வைத்தார்கள். சுயநினைவு உள்ளதா? என சோதித்துப்பார்க்க குருவே உங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் யார் என்பது தெரிகிறதா? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி என்னை அடித்துத் துன்புறுத்திய அதே கைகள்தான் பணிவிடை செய்கிறது என்றார். எதனால் இந்த பக்குவம் வந்தது என்றால் கொடியவனின் கொடுமைத்தனமும் தனது ஆழ்மனதில் புகாத வண்ணம் மேல்மனதிலேயே அந்த ஞானி வைத்துப் பழகி விட்டார். மறப்பது மன்னிப்பது மேல்மனதின் சிறப்பான குணமாகும், அழிப்பதும், ஆக்குவதும், ஆழ்மனதின் சிறப்பான குணமாகும்.


ஞானிகளின் ஆழ்மனதில் சாபங்கள் தங்கி இருக்கும். ஞானிகள் ஆழ்மனதை இரண்டு சந்தர்பத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒன்று கடவுள் அருளை நிரப்பும் கூடமாக ஆழ்ந்து தவம் செய்யும் போது ஆழ்மனப்பதிவுகள் அதிகமாகும். இதுவே அருள் என்பதாகும். அடுத்து தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்திற்கும் இடையூறாக உள்ள கொடியவர்கள் அழிந்துபோக சாபமிட்டு அழிக்க ஆழ்மனதை பயன்படுத்துவார்கள்.


இறைவன் பலபேரை பரதேசி ஆக்கும் போது ஆழ்மனப்பதிவை அழித்துவிட்ட பிறகே ஆட்கொள்வார். பட்டினத்தாரின் ஆழ்மனதில் பணம் சம்பாதிக்கும் வெறி இருந்தது. அந்த வெறியை இறைவன் துடைத்தார். லீலாசுகரின் அடிமனதில் காமவெறி இருந்தது. இறைவன் துடைத்து ஞானியாக்கினார். கடவுள் தானே காமத்தைப் படைத்தார். பிறகு எதற்காக கடவுள் நெறிக்கு காமம் தடையாக உள்ளது? என்கிற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள், ஆன்மீக வாழ்விற்கு காமம் எந்த வகையிலும் தடையாக இருக்காது. ஆனாலும், காமத்தை கையாளும் போது, ஆழ்மனதில் உள்ள நல்ல பதிவுகளை விரட்டி விட்டு காமம் தஞ்சம் புகுந்துவிடும். அதன்பிறகு வெறிச்செயலாக மனிதன் மாறிவிடுவான். இது தான் தடையாக போய்விடுகிறது. மாறாக கயிற்றில் நடக்கிற சாகசவீரனைப் போல மனதை சாகசமாக்கி விளையாடத் தெரிந்து விட்டால் காமம் மனிதனை கட்டழிக்க முடியாது.


பல முன் கோபக்காரர்களைப் பார்த்திருக்கலாம். ஏன் அவர்கள் அருவருப்பாக நடந்து கொள்கிறார்கள் என்றால் அனைத்து எளிதான சம்பவங்களையும் அடிமனதில் பதிவு செய்து பழகிவிட்டார்கள். அதன்விளைவு அடிமனம் கொந்தளிப்பாகவே மாறிவிட்டது. நகைச்சுவையாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள். கேள்விப்பட்ட செய்தியைக் கூறுகிறோம். புலால் சாப்பிடுகிற ஒரு முன்கோபக்காரர் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். ஒரு சமயம் மெய்வழிச்சாலை ஆசிரமத்தில் கணக்கு தணிக்கை செய்ய வந்துள்ளார். அங்குள்ள ஆசிரமத்தார் இவர் புலால் சாப்பிடுபவர் என கருதி புலால் உணவு சமைத்து போட்டார்களாம். முங்கோபக்காரர் புரட்டாசி மாதத்தில் புலால் சாப்பிட மாட்டாராம். இதன் விளைவு ஆசிரமத்தில் புலால் உணவா! என எரிமலையாக வெடித்தாராம். உடனே ஆசிரமவாசிகள் இது சாதாரண உணவு அல்ல, மெய்வழி ஆண்டவர் இஸ்லாம் முறைப்படி ஓதி சமைத்த புலால் என்றார்களாம். உடனே இன்னும் கோபம் அதிகமாகி அசைவம் சமைத்ததே குற்றம். அதிலும் எச்சிலைத் துப்பி ஓதிய சமையலா? என கடிந்து கொண்டாராம். முன்கோபக்காரர்களுக்கு எதார்த்தமே வினையாக விபரீதமாகப் புலப்படும்.


பலரது வாழ்வு நிம்மதியாக வாழ முடியாததற்கு காரணம், ஆழ்மனதை பயன்படுத்த தெரியாமை தான் காரணம். அந்த அபாயகரமான ஆழ்மனதை பக்குவப்படுத்த ஆன்மீகம் மட்டுமே சிறந்த பாடமாக அமையும். வீட்டில் எந்த எந்த இடத்தில் எந்த எந்த பொருளை அடுக்குவது என்பது மட்டும் புரிந்து வைத்திருந்தால் போதாது. மேல் மனதில் வைக்க வேண்டிய பொருள்கள் எவை எவை! நடுமனதில் இருப்பது எவை எவை!, ஆழ்மனதில் இருக்க வேண்டியவை எவை என்பது அறிந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இருக்கும். ரசத்தில் உப்பு போடவில்லை என்பதற்காக ராஜாத்தி போன்ற மனைவியை விரட்டிவிட்டு வீதியில் கிடப்பவர்கள் எராளம். வாழ்வியல் கெட்டு போவதற்கு உமது மனமே பிரதானக் காரணம், தொடர்ந்து படியுங்கள் வாழ்வியல் புனிதமாகும், நெறியான ஆன்மீகம் முறையாக வழிநடத்தும். தொடர்ந்து உங்கள் உணர்வில் மணம் பரப்புவோம். -


--------- தொடரும்..............

No comments: