Friday, April 8, 2011

இறைவனோடு உரையாடினோம் !

இறைவனோடு உரையாடினோம் !

வள்ளல் பெருமான், அப்பரடிகள், மணிவாசகர் இவர்கள் எல்லாம் உலகத்தை விட்டுப் போன பிறகுதான் மனிதகுலம் கடவுளைக் கண்டவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்கள் போலும். ஏனெனில் உலகில் யார் கடவுளைக் கண்டாலும் அவர்களை மனநோயாளி பட்டியலில் வைத்துப் பார்க்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கனவில் கடவுளைக் கண்டேன், பேசினேன், என்று பலரும் பிதற்றித் திரியும் நிலையும் ஒருபுறம் இருக்க, கண்டவர் விண்டிலர்( மயங்கிலர்) என்பது போல கடவுளைக் கண்டாலும் காணாதது போல மௌனமாகிவிட்டவர்கள் பலர். என்றாலும், இறைவனோடு பேசியதால் ஏற்பட்ட பலன்களைச் சொல்லும்போது அனைவருக்கும் இறைலயம் ஏற்பட ஏதுவாகும் என்ற நோக்கில் இக்கட்டுரையை எழுதுகிறோம்.


நாம் 2007 பிப்ரவரி 23 அன்று இறைதரிசனம் பெற்றபோது இறைவன் கூறிய வார்த்தைகளை இங்கு மெய்ப்பிக்கவே விரும்புகிறோம். "1992 முதல் இதுவரை நடந்து வந்த உள்போராட்டம் இனி முடிவுக்கு வந்துவிட்டது. இனி தவத்தில் சலிப்பு இல்லாமல் தொடரலாம்" என்றார் இறைவன். அதாவது இறைவனைக் காண்பதற்கு முன் தவம் தொடங்கிய சில நாளிலேயே சலிப்பு வந்துவிடும், அப்புறம் தவத்தை நினைத்தாலே பயம் வந்துவிடும். பிறகு ஆறு மாதம் போராடிவிட்டு மீண்டும் தவம் தொடர்வோம். மீண்டும் மீண்டும் தோல்வி! எவ்வளவுதான் மனதிற்கு தைரியம் கூறினாலும் தவம் கலைவதைத் தடுக்க முடியாது. 2003 ல் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் முடித்து விட்டுதான் வெளியே வருவோம் எனக் கூறிவிட்டுத் தவம் செய்தால் இரண்டரை வருடத்திலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 1992 முதல் 2006 வரை ஒரு வருடத் தவம் என்றால் மூன்று மாதத்தில் முடியும். மூன்று வருட தவம் என்றால் ஒருவருடத்தில் முடியும். ஆனாலும் விடுவதில்லை! அடைந்தே தீருவது! எத்தனை தோல்விகள் வந்தாலும் பரவாயில்லை என மேலும் மேலும் முயன்றவண்ணம் இருந்தோம். சாதாரண பாமர மக்கள் கூட, "சாமி அப்படிதான் ஐந்துவருடம் என்பார், ஐந்து மாதத்தில் வந்துவிடுவார்" எனக் கேலி பேசும் அளவுக்கு எமது நிலைமை இருந்தது.


கதவு அடைத்து வைத்த இரண்டு நாள் ஆனதுமே மனம் பேசும். கதவைத் திறந்து வை! நாம் முடியாது என்போம். உடனே மனம் நீ முடியாது என்றால் சிறிது நேரத்தில் பைத்தியம் ஆகிவிடுவாய் என மிரட்டும். வேறு வழியில்லாமல் கதவைத் திறந்து வைத்து விட்டு மௌனமாகக் கண்களை மூடி தவம் செய்வோம். பிறகு ஒரு மாதத்தில் அந்த அறையிலும் தங்கவிடாது. அப்புறம் மேலே மொட்டைமாடியிலும் தவம் செய்தோம். இந்த மனதோடு நான் பட்ட சித்ரவதையை எழுத்தில் கூட வடிக்க முடியாது. அறைகளின் சன்னல்களை மூடினால் கூட காற்றே வராமல் மூச்சு முட்டுவது போன்ற ஒரு பிரமையை உண்டாக்கும். பிறகு தவம் கலைந்து மொட்டைமாடிக்கு ஓடுவது போலச் செய்யும். இதை விவரித்து வெளியே சொல்லவும் முடியாது, சொன்னால் பைத்தியம் என்பார்கள். தவம் செய்ய சூழ்நிலை வாய்க்கவில்லை அதனால் கலைத்துவிட்டோம் என்போம்.


இதெல்லாம் ஏன் நடந்தது? என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. ஒளவை அகவலில் ஒரு செய்தி வரும்,

"மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால்
எழுப்பும் கருத்தை அறிவித்து "


என்ற வரியில் யோக ரகசியத்தை இறைவன் அறிவித்த பிறகுதான் அதைச் செய்ய முடியும். மாறாக நாம் ஆசைப்படுவதால் அது நடக்காது. வள்ளலார் கூறுவாரே,
"துன்றுமல வெம்மாயை அற்ற வெளிக்குள்
வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்"


" இன்று வருமோ! நாளைக்கு வருமோ!
மற்று என்று வருமோ அறியேன் "


என்றாரே! சும்மா இருக்க நினைத்தால் உட்கார வேண்டியதுதானே ! முடியாது. சும்மா இருக்கிற சுகம் இறைவன் அறிவித்தால் மட்டுமே கைகூடும். புத்தர் செய்த தியானம் என்பது உள்ளேயே கவனம் வைத்தல், இதை எல்லோரும் செய்யலாம். அதனால்தான் புத்தருக்குக் கடவுள் தரிசனம் தரவில்லை. சும்மா இருப்பது என்பது மனத்தைக் கொல்லும் வித்தையாகும். இந்த விபரம் தெரியாமல் மனதோடு போராடி போராடி களைத்து ஓய்ந்து 14 வருடத்திற்குப் பின் இறைதரிசனம் கிடைத்தப் பிறகு, இப்போது இரண்டு ஆண்டுகளாகக் அதவை அடைக்கிறோம், சன்னலை அடைத்துவிட்டோம். கண்களை 20 மணி நேரத்திற்கு மேல் மூடியே இருந்தாலும் தவத்தில் சலிப்பு இல்லை. நூறாண்டுகள் கண்களை மூடியே நீடிப்பதுதான் ஆச்சரியம். இந்தப் பேற்றுக்கு இணையாக இந்திரப் பதவியே இணையாகாது.


திருமூலர் கூறுவார்,

"ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதும் உண்ண வல்லீரேல்
நீராயித்தாண்டு நிலம் ஆயிரத்தாண்டு
பேராது காயம்பிரான் நந்தி ஆணையே "


இதன் மூலம் நீருக்குள் ஆயிரம் ஆண்டுகள் மூழ்கியும், நிலத்தில் ஆயிரம் ஆண்டுகள்புதைந்தும் இருக்கலாம் என்றால் எப்படி சலிப்பு இல்லாமல் இருக்க முடியும்? இன்றைக்கும் பல சித்தர்கள் புதைந்து தவம் செய்கிறார்கள். இதுதான் இறையருள் ரகசியம் என்பது.


உலகம் இதுவரை அறிந்திராத பல ஆன்மீக ரகசியங்களில் இதுவும் ஓன்று. பல மேதாவிகளுக்கு ஒரு சவால், கடவுளின் துணையின்றி 48 நாட்கள் கண்களை மூடி ஒரு இருக்கை நிலையைக் கடைப்பிடித்து தவம் செய்ய முடியுமா? இறையருள் இருந்தால் மட்டுமே முடியும், இல்லைஎன்றால் மனம் புலம்பித் தவித்து விடும். பேசாமல், அசையாமல் நாள்கணக்கில் மனம் இருக்க விடாது. சித்தப் பிரமை உண்டாக்கிப் பயம்கொள்ள வைத்துவிடும். இது எமது 14 வருட கடும் முயற்சி அனுபவம். இன்று எத்தனை மாதங்கள் வருடங்கள் கூட கண்களை மூடியே தவம் செய்ய முடியும். இது அவசியமா? எனப் பலரும் கேட்கலாம். நிச்சயம் அவசியமே! ஏனென்றால்


"மூலநெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தே
பாலை இறக்கி உண்டு பசியாருவது எக்காலம்"


என்று பத்திரகிரியார் ஏங்கித் தவித்தார். பலநாட்கள் கண்களை மூடி மூலக்கனலை எரித்து உச்சந்தலை வழியாகப் பாலை(அமிர்தம்) சாப்பிட்டால்தான் மரணத்தை வெல்ல முடியும். உடம்பு காயசித்தி ஆகும். இதற்குப் பெரிய தடை மனம்தான்.


இப்படி 14 வருடம் செய்ய முடியாத தடையானது இப்போது எப்படி விலகியது? இறைவன் சொன்ன ஒரு வார்த்தை எமக்கு வாழ்வானது. நாம் இறைவனோடு பேசியதை உலகம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் மறுக்கலாம். அது எமக்கு முக்கியமல்ல. ஆனால் பல ஆண்டுகளாகச் செய்ய முடியாத சாதனை இப்போது செய்ய முடிகிறது. பல நாட்களாக சூரிய, சந்திர, நட்சத்திரங்களை பார்க்காமல் தவம் செய்ய முடிகிறது. அதோடு சலிப்பில்லாமல் கரும்பு தின்னக் கூலி எதற்கு? என்பது போல ஓராண்டு கண்களை மூடித் தவத்தில் இருந்தாலும் ஆனந்தமாக லயமாகி செய்ய முடிகிறது. இது ஒன்றே இப்பிறவிக்குப் போதுமானது.


" உறக்கம், உணர்வு, பசி கெடப்பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு"


என்பார் ஒளவை. கண்களை மூடி கனலை எழுப்பச் செய்யும், தவத்தினால் தூங்க முடியாது, உடல்வலி ஏற்படாது, பசி வராது. இதைவிட எண்ணப் பெரும்பேறு தேவை! எனவே கடவுளைக் கண்டேன் அவர் கோவிலை கட்டு, குளத்தை வெட்டு என்றார் என்று அற்பமாகப் புலம்பாமல், மனமே கனவில் கடவுளாகப் பேசி ஏமாற்றுவதையும் நம்பாமல், உண்மையாகவே கடவுள் உங்கள் ஆன்மாவில் வந்து பேசினால் அதன்பிறகு, வாழ்வில் வசந்தம், தெளிவான கோட்பாடு, தவம் பற்றி இறைவன் ரகசியங்கள் சொல்வார். மூப்பு, மரணத்தை வெல்லும் யுக்தியைக் கூறுவார்.


கட்டாயம் கடவுளை அனைவரும் காண முடியும், பேச முடியும். இதைவிடுத்து மனப்பிராந்தியாக உளறக் கூடாது. இப்படிதான் ஒரு அம்மையார் இரவில் கனவில் முருகன் வந்தார், உங்களுக்கு வெற்றிலை பாக்கு வாங்கி கொடுக்கச் சொன்னார், வாங்கி வந்துள்ளேன் என்றார்கள். உடனே முருகப் பெருமானுக்கு நாம் வெற்றிலைப் பாக்கு போடமாட்டேன் என்கிற ரகசியம் தெரியாமல் போய்விட்டது, எனவே, இன்று இரவு கனவில் வருவார், அவரிடமே இதனை ஒப்படைத்து விடவும் என்றோம். அந்த அம்மையாருக்கு ஒருமாதிரியாகி விட்டது. இப்படிப் பல பேர்கள் வாழ்வதினால்தான் உண்மையில் கடவுளைப் பார்ப்பவர்களையும் பகுத்தறிவு உலகம் மறுத்துப் பேசுகிறது.


கடவுள் அருள் பெறாதவர்கள் சர்வ நிச்சயமாக செய்ய முடியாத அமானுஷ்ய சாதனைகளை நிகழ்த்த முடிகிறது. இறைவன் என்னென்ன கூறினாரோ அது அப்படியே நிகழ்ந்தும் வருகிறது. இறைவனோடு உரையாடினோம் என்றால் அது அந்த நேரம் மட்டும் இன்பம் தந்துவிட்டு மறைந்துப் போகிற செயலாக இல்லை. ஒருபிறவி முழுவதும் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள், உலகியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நுட்பங்கள் எல்லாவற்றையும் போதனையாகப் பெற்றோம்.


"குருவே சிவமெனக் கூறினன் நந்தி " என்பார் திருமூலர். இவை அனைத்துமே சத்தியப்பூர்வ வசனங்கள். இறைவன் குருவாக வராதவரை தவத்தில் ஒருபடியைக் கூட கடக்க முடியாது. இறைவனை சிலர் மின்சாரத்தைப் போல இயக்கப் பொருளாகப் பார்க்கிறார்கள், மற்றும் சிலர் கோவிலில் சிலையாக மட்டுமே பார்க்கிறார்கள். என்றாலும் இறைவனே நம் நேரில் வரும்வரை நாம் ஏதாவது ஒருவகையில் முட்டாளாகவே பிணத்திக் கொண்டு திரிவோம். இறைவனே வந்து இதுதான் இறைத்தன்மை என உணர்த்தாதவரை சந்தேகம் தொடர்ந்து வாழும்.


நாங்கள் சொல்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம், தவறில்லை, தொடர்ந்து இறைலயம் பற்றிக் கேட்டுக் கொண்டே வாருங்கள், என்றாவது ஒருநாள் சிவலயம் உண்டாகும், பிறகு நீங்களே குருமார்கள் ஆவீர்கள்.
"கனலேறிக் கொண்டிருந்தால் எல்லாம் உண்டு
காற்றை வெளிவிட்டாக்கால் கர்மம் தீதாகும் "
என்று ரோமரிஷி கூறியதை 1992 லேயே படித்துள்ளோம். ஆனால் அனுபவத்திற்குக் கொண்டுவர 14 வருடங்கள் ஆகிவிட்டது. அதுவும் இறைதரிசனம் வந்த பிறகுதான் கைகூடியது. இதுதான் உண்மை எனத் தெரிந்தால் மட்டும் போதாது, அந்த உண்மையை எப்படி நிலைநாட்டுவது என்பதுதான் முக்கியம். கனலை தினசரி 16 மணிநேரம் உச்சந்த்தலையில் நிறுத்தினால் அமிர்தம் வரும். நாளைக்கே உங்களால் நடைமுறைப் படுத்த முடியுமா? முடியாது. இது உண்மைச் செய்தி அவ்வளவுதான். 16 மணிநேரம் கனலை நிறுத்த இறையருள் தேவை என்கிறார் மணிவாசகர்.
"அவன் அருளாலே அவன் தாள் பணிந்து" என்கிறார். இறைவன் பாதம் என்பதே கனல்தான். கனல் உச்சிக்கு வராமல் யாரும் யோகியாக முடியாது. கனலே! கனலே! எனக் கத்தினால்தான் வருமா என்ன? சாதனை வேண்டும்.
அதனால்தான் " தண்ணி தண்ணி எனக் கத்தினால் தாகம் தீருமா" என்றார் காகப்புசுண்டர். எனவே சாதிக்க வேண்டும். ஆர்வம் இருந்தால் அந்த நிலைமையை அடையப் பெரிதும் உதவியாக இருப்போம். நிச்சயம் அடைய முடியும்.


எனவே இறைவன் பேசியது ஓரிரு வரிச் செய்திதான் இனி சலிப்பு வராது என்றார். இதில் ஆயிரம் வருடத்திற்கு உள்ள அனுபவமுறை அடங்கி உள்ளது. இப்படி இறைவன் சொன்னதும், அது அனுபவம் ஆகும் விதமும், நடைமுறையாகும் பக்குவமும் அதிசயமானது. இறைலயம் தொடரும்...........




------ தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள்

No comments: