Wednesday, September 14, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - உடல் அரிப்பு

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 33. நான்கு ஆண்டுகளாக உடல் முழுவதும் அரிப்புடன் கூடிய சிவந்த தடிப்புகள் ஏற்படுகின்றன. மதியம் 3 மணிக்கு மேல் அரிப்பு அதிகமாகி, இரவு முழுவதும் தாங்க முடியாத அளவு இருக்கும். காலையில் குளித்தவுடன் படிப்படியாகக் குறைந்துவிடும். அரிப்பு வரும்போது முகம், உதடுகள் வீங்கி, மிகவும் அருவருப்பாக விகாரமாக மாறிவிடுகின்றன. உடல் கொதிக்கிறது. அதிகமாக வெள்ளைப்படுதலும் ஏற்படுகிறது. உடல் அபரிமிதமாகப் பெருத்துவிட்டது. இந்த உபாதை மாற வழி என்ன?
வாசகி, திண்டுக்கல்.
முருங்கை மரத்திலுள்ள கம்பளிப் பூச்சி உடலில் பட்டுவிட்டாலோ, அவரைச் செடியிலுள்ள பூச்சி, வீட்டிலுள்ள கரப்பான், பல்லி போன்றவை கழியும் மலம், சிறுநீர், எச்சில் சுவரில் இருக்கும் நிலையில் வெற்றுடம்புடன் அதில் சாய்ந்து அமர்ந்தாலோ, துவைத்துக் காயப் போட்ட ஆடைகளின் மேல் இப்பூச்சிகள் ஊர்ந்து, சுணையையோ, மலம் சிறுநீர் ஆகிவற்றைக் கழிந்த நிலையில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டாலோ உடலில் விஷம் தொற்றிக் கொண்டு, நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக் கூடும். இவை வெளிப்புறக் காரணங்களுக்கான பல வகைகளில் ஒரு சில காரணங்களாகக் கொள்ளலாம்.
வயிற்றில் பழைய மலத் தேக்கம், புளித்த கெட்டியான தயிரை வடையுடன் சாப்பிடுதல், சூடு ஆறிப்போன புளியோதரைச் சாதம், கெட்டுப் போன மாங்காய் ஊறுகாய், மீன், கருவாடு, சிக்கன், மட்டன் வகையறா அதிகம் சாப்பிடுதல், முன் உண்ட உணவு செரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த உணவை வயிற்றினுள்ளே தள்ளுவது போன்ற சில தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் கப, பித்த தோஷங்கள் சீற்றமுற்று, இரத்தத்தில் கலந்து அதனையும் கெடுத்து, தோலில் தடிப்பையும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அவற்றின் சீற்றத்திலிருந்து வெளிக் கிளம்பும் சில கழிவுப் பொருட்கள் சரிவர உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் உள்ளேயே தங்கும்போது, அரிப்பும் தடிப்பும் தாங்க முடியாத அளவில் ஏற்படும்.
தோலின் அடியில் தங்கும் இந்தக் கழிவுப் பொருட்கள், மதியம் 3 மணி அளவில் பித்தத்திற்கு அனுகூலமான காலத்தின் தன்மையால் எழுச்சியுற்று தம்முடைய வேலையைச் செய்கின்றன. ஆக, உங்களுடைய விஷயத்தில் அந்தக் கழிவுப் பொருட்களை வெளியேற்ற வேண்டும். அவை விட்டுச் சென்ற சருமத்தின் பலவீனத்தை மாற்றி சருமத்துக்கு வலுவூட்ட வேண்டும்.
"மாணிபத்ரம்' எனும் ஒரு லேகியமிருக்கிறது. உங்களுக்குப் பசி நன்றாக இருந்தால், இந்த லேகிய மருந்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 10 - 15 கிராம் அளவில் நக்கிச் சாப்பிடவும். குடல், ரத்தம், சருமம் ஆகிய பகுதிகளில் அடைந்து கிடக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறத் தொடங்கும். இந்த மருந்தைச் சாப்பிடும்போது நல்ல பத்தியம் இருக்க வேண்டும். காலையில் புழுங்கலரிசி வேக வைத்த கஞ்சித் தண்ணீருடன் மோர் கலந்து சாப்பிட வேண்டும். மதியம் மிளகு ரஸம் சாதம், பருப்புக் கூட்டு, மோர் சாதம், இரவில் 2 -3 சப்பாத்தி, சப்ஜி ஆகியவை மட்டுமே உணவு. சுமார் 15 - 21 நாட்கள் வரை இந்த லேகிய மருந்தைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
அதன் பிறகுதான் அரிப்பையும், தடிப்பையும் நீக்கக் கூடிய ஆரக்வதாதி கஷாயம், திக்தகம் அல்லது மஹாதிக்தகம் கஷாயம், படோலகடு ரோஹிண்யாதி கஷாயம், படோல மூலாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட வேண்டும். வெளிப்புறப் பூச்சாக பிண்டத் தைலத்தையோ, தூர்வாதி தைலத்தையோ நமச்சலும் தடிப்பும் உள்ள இடங்களில் சதும்பத் தடவி சுமார் 1/2 - 1 மணி நேரம் காலையில் ஊறிய பிறகு குளிக்கவும். ஒரு டம்ளர் பச்சைப் பயறு, அரை டம்ளர் எலுமிச்சம் பழத்தோல் (காய்ந்தது), கால் டம்ளர் வெந்தயம் ஆகியவற்றை நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் எடுத்து, அரிசி வடித்த கஞ்சியுடன் அல்லது தயிர்த் தெளிவுடன் குழைத்து மூலிகைத் தைலத்தின் பிசுக்கை அகற்றப் பயன்படுத்தவும்.
சரக்கொன்னப்பட்டை, வேப்பம்பட்டை, வெட்பாலைப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டிக் கொள்ளவும். சிறிது சிறிதாக ஒரு நாளில் பலதடவை பருகவும். அரிப்பையும் தடிப்பையும் நீக்கும் சிறந்த மூலிகைத் தண்ணீராகும்.
இப்படி உள்ளும் புறமும் சிகிச்சைகளைச் செய்து கொண்டே பத்திய உணவுடனும் நீங்கள் இருந்து வந்தால் உங்கள் உபாதை விரைவில் மாற வாய்ப்புண்டு.
(தொடரும்)

No comments: