Monday, September 19, 2011

அற்புதங்கள்-சித்துகள்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

அற்புதங்கள்-சித்துகள்

சன்மார்க்கம் என்றாலே சிலர் வள்ளலார் போல் அற்புதங்கள் செய்ய முடியுமா என்றும் சன்மார்க்கம் மற்ற மார்க்கங்களை விட எவ்வாறு சிறந்தது என்றும் கேள்வி கணைகளை தொடுக்கின்றனர்.

வாழையடி வாழை என்ற திருக்கூட்டத்தால் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும் என்றும் நாமெல்லாம் அற்ப மானிடர்கள் என்று கூறுவோரும் உண்டு. மானிட பிறவியால் மட்டுமே பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்து இறையை அடைய முடியும். அதற்கு இப்பிறவி தேவை. எனவே நாமெல்லாம் மனித பிறவி அந்த தனிப்பெருங்கருணையால் எடுத்துள்ளோம். இதற்கு காரணம் பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்வதே.

வாழையடி வாழை திருக்கூட்டத்தில் நாமும் பங்கு பெற விரும்பினால் அதற்கான தக்க முயற்சியில் இறங்க வேண்டும்.அதற்கு நெற்றிக் கண் திறக்கப் பட வேண்டும்.

நெற்றிக்கண் கருணை குணத்தால்-தயவால் –அன்பால் திறப்பதாம். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் கருணை அதிகமாக, அதிகமாக இறைவன் வேறு நாம் வேறல்ல என்ற நிலை உண்டாகி அதில் இறையனுபவம் உண்டாகும். அதில் சாதி சமய மார்க்க வேறுபாடு இருக்காது. அதுவே உயர்ந்த நிலை- இறையை காணும் நிலை. இதனை வள்ளலார்:


ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே

ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!


மேலும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனை பார்க்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே கருணை-தயவு-அன்பு என்ற மகா மந்திரத்தை குரு மூலம் உணர்த்தப் பட வேண்டும் என்றார். ஆனால் பலர் அதுவே தங்களுக்கு சாதகமாக்கி வியாபாரமாக்கி நெற்றிக்கண்ணை தீட்சை மூலம் மட்டுமே திறக்க முடியும் என்று பறைசாற்றுகின்றனர்.


தீட்சை பெற்று தனியாக ஒரு அறையில் உட்காருந்து தியானம் செய்து யாருக்கும் தன்னை பயனளிக்காமல் இறையை உணர செய்வதை விட சகஜ மார்க்கம் எளிய வழி என்று வள்ளலார் கூறுகிறார். அதனால் தான் வள்ளலார்;



கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே!


இறைவனின் பெருமையை உணர்ந்து உயிர்க்குலத்துக்குப் பணி செய்து வருவதன்( ஜீவ காருண்யம் ) மூலமாகத்தான் இறைவனின் அருளைப் பெற முடியும்.

மற்ற எல்லா வழியை விட இதுவே உயர்ந்த மார்க்கம் –சகஜ மார்க்கம் என்று வள்ளலார் கூறுவதால் எவ்வுயிரையும் தன்னுயிராக பார்க்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எவ்வுயிரையும் தன்னுயிராக பார்க்கும் பக்குவமே சிறந்த பக்குவம் அவர்களே பக்குவிகள் அவர்களே நெற்றிக் கண் திறக்கப்பெற்றவர்கள் என்பதை சத்தியமாக உணர்ந்து பிற உயிர்களை துன்புறுத்தாமல் காத்தல் வேண்டும்.

பிற உயிர்களின் துன்பங்களை உணராதவன் இறையை உணர முடியாது.

எனவே திருவருட்பாவை படித்தால் போதும், வள்ளலாரை வணங்கினால் போதும் என்று நினைக்காமல் வள்ளலார் கூறிய கருத்துகளை பின்பற்ற அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அவர் கூறிய கருத்துகளை கடைப்பிடித்தால் பரம்பொருளை இப்பிறவியில் நிச்சயம் உணர முடியும்.



வள்ளலார் வழியை பின்பற்றினால் ஏதாவது அற்புதம் நிகழுமா? என்று பலர் கேள்வி கேட்கிறார்கள்.

அற்புதங்களை சித்துகள் செய்து மட்டுமே காண்பிக்க வேண்டாம், கீழ் வருவன கூட ஒரு சித்துகளே- அற்புதங்களே!

1. சாதி மத வேறுபாடு இல்லாமை
2. ஏழை எளியவருக்கு தன்னால் முடிந்த உதவி செய்தல்

3. எல்லா உயிர்களையும் துன்புறும் காலத்தில் எந்த ஒரு உபாயத்திலாவது காத்தல்,
4. ஜோதி ரூபமாக இறைவனை வணங்குதல்
5. பசிப் பிணி நீக்குதல்
6. சிறு தெய்வ வழிபாட்டில் உயிர் பலி நீக்குதல்
7. புலால் உண்ணாமை
8. எதிலும் பொது நோக்கம்
9. இறந்தவர்களை அடக்கம் செய்வித்தல்

இதெல்லாம் வள்ளலார் கூறிய கொள்கைகள்போல் அல்லவா இருக்கிறது என்று எண்ணத்தூண்டுகிறது தானே! ஆம் இதெல்லாம் கொள்கைகள் மட்டும் இல்லை அற்புதங்களேயாகும்*.

*உங்களால் செய்ய முடிந்தால்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

1 comment:

Sivamjothi said...

http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English