Wednesday, September 28, 2011

கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?

கர்ப்பிணிகளின் கவனத்துக்கு...
காலை...
கர்ப்பிணிகள் காலையில் எழுந்த பத்தாவது நிமிடத்திற்குள் ஏதாவது ஒரு பழம் மற்றும் கை அளவு உலர்ந்த பழங்கள் சாப்பிட வேண்டும். பழம் சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் தயார் செய்த காலை உணவை உண்ண வேண்டும். பிரெட், பிஸ்கட், ஊறுகாய், சாஸ் போன்றவற்றை காலை உணவில் தவிர்ப்பது நலம்.
மதியம்...
மதிய உணவை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், பருப்பு ஆகியவற்றுடன் அரிசி, கோதுமை, சோளம், கம்பு போன்ற தானிய வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாலை...
மதிய உணவு முடித்த 2 மணி நேரம் கழித்து தயிர் அல்லது மோர் பருகவும். சர்க்கரை, உப்பு சேர்க்காமல், மிளகு அல்லது சீரகம் சேர்த்துப் பருகுவது சிறப்பு. காபி, டீ தவிர்ப்பது நல்லது.
சீஸ், பன்னீர், வேர்க்கடலை, வெண்ணெய் ஆகியவற்றை மாலை நேர சிற்றுண்டியில் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு...
இரவில் சிறிய கிண்ணம் கிச்சடியுடன், அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு தயார் செய்த கூட்டுகள் அல்லது வேக வைத்த காய்கறிகளைச் சாப்பிடலாம். இரவு 9 மணிக்குச் சாப்பாட்டை முடிக்க வேண்டும்.
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். முடிந்த அளவு நடை அவசியம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வேர்க்கடலை பயம்...
குறை தைராய்டு (ஹைபோ தைராய்டு) உள்ளவர்கள் வேர்க்கடலை, காளிஃப்ளவர், சோயா ஆகியவற்றை தொடவே கூடாது என யாராவது பயமுறுத்தியிருப்பார்கள். அது ஏன் என்று கேட்டால் அதற்கென்று ஒரு குருட்டுக் காரணமும் சொல்வார்கள். இதனைச் சாப்பிட்டால் உடல் தனக்குத் தேவையான ஐயோடின் சக்தியை உறிஞ்சுக்கொள்வதை குறைத்துவிடும் என்று சொல்வார்கள். அப்படிப்பார்த்தால் வடஇந்தியா முழுவதும் ஹைபோ தைராய்டு நோயாளிகளாகத்தான் இருக்க வேண்டும். வட இந்தியர்கள் இவற்றை உணவில் எப்போதும் சேர்த்துக்கொள்பவர்கள். அவ்வாறிருக்க இவர்கள் தப்பிப்பது எவ்வாறு?
உண்மையில் வேர்கடலை, சோயா, காலிஃப்ளவர் ஆகிவயற்றைக்காட்டிலும் பிஸ்கட், கேக், சாக்லெட், மது இவையனைத்தும் தைராய்டு நோயாளிகளுக்கு எதிரி. இவற்றை யாராவது விலக்குகிறார்களா? எனவே, புரதச்சத்து அதிகமாக உள்ள வேர்க்கடலை, சோயா, வைட்டமின் "பி', நார்ச்சத்து அதிகமாக உள்ள காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒதுக்க வேண்டாம்.

-ருஜுதா திவாகர் எழுதிய "விமன் அன் த வெயிட் லாஸ் தமாஷா' என்ற புத்தகத்திலிருந்து ஃப்ரீடா ஃப்ராங்ளின்.

No comments: