Wednesday, September 21, 2011

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: காரத்தினால் ஏற்படும் அவஸ்தைகள்!

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: காரத்தினால் ஏற்படும் அவஸ்தைகள்!

எனக்கு வயது 67. நீண்டகாலமாக மூலம் தொந்தரவு. காரம் சேர்க்காமல் இருந்தால் அதிகமான தொந்தரவு இல்லை. ஆனால் சிறிய அளவு காரம் சேர்த்துவிட்டால் கூட ஆசனவாய் வீக்கம், ஊறல், ஈரம் படுதல் அதிகமாக ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதம் கூறும் வழிகள் எவை?
ராமசாமி, ராஜபாளையம்.
வாயு மற்றும் நெருப்பை ஆதிக்க பூதங்களாக்கி, காரம் எனும் சுவை பொருட்களில் ஏற்படுகிறது. இதன் சேர்க்கையானது, உணவின் மூலமாக உள்ளே குடலில் சேரும்போது, தோஷ தாதுக்களைச் சுரண்டிக் கரைக்கும் தன்மையுடையதாக இருக்கிறது. ஆசனவாயில் ஏற்பட்டுள்ள முடிச்சு போன்ற மூல முளைகளினுள்ளே இருக்கக் கூடிய கட்டுகளை விடுவிக்கிறது. ஆசன வாயின் துவாரத்தை விரித்து விடுகிறது. இவை அனைத்தும் நடப்பதற்கு அதன் உஷ்ணமான வீர்யம் உதவுகிறது. இப்படியெல்லாம் செய்து, மூல முளைகளை அழிப்பதற்கான ஒரு முயற்சியை அது செய்கிறது என்றும் நாம் ஏன் நினைக்கக் கூடாது? ஆனாலும் வீக்கமும், ஊறலும் உறுத்தலாக இருப்பது மிகவும் கஷ்டமே. ஈரம்படுவதன் அதன் (மூல) முளைகள் உடைவதற்கான ஒரு நல்ல லட்சணமாகக் கொண்டு , அதைப் பெரும் பிரச்னையாகக் கொள்ள முடியாது. ஏனெனில் காரம் எனும் சுவைக்குப் புண்களை ஆற்றக் கூடிய திறனும் இருக்கிறது.
காரத்துக்கு நேர் எதிரான குணாதிசயங்களைக் கொண்டது இனிப்புச் சுவையாகும். நிலம் மற்றும் நீரின் ஆதிக்கப் பூதங்களால் உருவான இனிப்பு, வாயு மற்றும் நெருப்புக்கு நேர் எதிராக இருப்பது இயற்கைதான். ஆனால் உங்களுக்கு எந்த அளவு இந்த இனிப்புச் சுவை சேர்ந்த மருந்துகள் பயன்படும் எனத் தெரியவில்லை. காரணம், இனிப்புச் சுவையை மருந்தாகச் சாப்பிடுபவருக்கு, வயிற்றிலுள்ள பசித்தீயின் தன்மை, அதை செரிக்கக் கூடிய கால அளவு, குடலின் தன்மை போன்றவை நன்றாக ஊகித்து அறிந்த பிறகே, கொடுக்க முடியும். மேலும் மூல முளைகளுக்கு இனிப்புச் சுவையான மருந்துகள் பொதுவாக அனுகூலமானவகையாக இருப்பதில்லை. அதனால் உங்களுடைய விஷயத்தில் அறிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன.
பெüத்திரம் எனும் துளை ஏற்படுத்திச் செல்லும் உபாதை உங்களுக்கு மூல முளைகள் வழியாக ஏற்பட்டுள்ளதோ என்ற ஒரு சந்தேகம் தோன்றுகிறது. அதற்குக் காரணம், ஆசன வாய் வீக்கம், ஊறல், ஈரம்படுதல் போன்றவை, காரத்தின் வழியாக ஏற்படுகிறது என்றால், அந்தச் சுவை எந்த இடத்தில் தோஷத்தை நீர்க்கச் செய்கிறது? என்று யோசிக்கத் தோன்றுகிறது. காரத்தினுள்ளே அடங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை உருக்கினால், அவை அதன் வழியாக ஆசன வாயைச் சென்றடைந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைத் தோற்றுவிக்கலாம்.
அதனால் நீங்கள் உடனடியாக மூலமுளைகள் எந்தப் பகுதியில் உள்ளன. அவற்றின் வேர்கள் எங்கெல்லாம் செல்கின்றன. பெüத்திரம் வந்துள்ளதா? போன்றவற்றை அறியும் நவீன கருவிகளின் வழியாகத் தெரிந்து கொண்டு, அதன்பிறகு சிகிச்சை மேற்கொள்வதே நலம் என்பதால், நோயின் தன்மையை நன்றாக அறிந்து கொண்டு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். அதுவரை ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அபயாரிஷ்டம், சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி.) காலை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும். திரிபலா எனும் சூரணத்தைச் சுமார் 15 கிராம் அளவில் எடுத்து, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, குளிர்ந்த பிறகு, வடிகட்டி, ஆசன வாயை, மலம் கழித்த பிறகு கழுவுவதற்காகப் பயன்படுத்தி வரவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி
ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771

No comments: