Thursday, September 22, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எண்ணெய்ப் பலகாரங்கள் செரிமானம் ஆவதில்லையே ஏன்?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எண்ணெய்ப் பலகாரங்கள் செரிமானம் ஆவதில்லையே ஏன்?

எனக்கு பித்தப்பையில் கல் இருந்ததால் அதை ஒரு வருடத்துக்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துவிட்டார்கள். தற்சமயம் எனக்கு எண்ணெய் சேர்த்த பட்சண வகையறாக்கள், நெய், வெண்ணெய் போன்றவை சரி வர செரிப்பதில்லை. ஏப்பம் விடும்போது அதில் அந்த மணம் வருகிறது. இதைக் குணப்படுத்த எளிய கை வைத்தியம் ஏதேனும் ஆயுர்வேதத்தில் உள்ளதா?
நளினி பாஸ்கரன், திருநெல்வேலி.

இந்தப் பிரச்னைக்கு ஓர் எளிய கை வைத்தியமுறை இருக்கிறது. திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலரிசி 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம், கொத்துமல்லிவிதை 25 கிராம், ஜாதிக்காய், ஏலரிசியைத் தவிர்த்து மற்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். வெல்லம் 300 கிராம் அளவு எடுத்துத் தண்ணீரில் கரைத்துப் பாகாக்கி, அதில் 50 கிராம் நெய் விட்டு இந்த சூரணத்தைப் போட்டுக் கிளறிக் கொள்ளவும். வயிற்றில் மப்புத் தட்டாமல் பசி, ருசி ஏற்பட, இந்த லேகியத்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் 5 - 10 கிராம் சாப்பிடலாம். இந்த லேகியத்துக்கு நீங்கள் ஏதேனும் பெயர் வைக்க வேண்டுமே என்று கவலையேபட வேண்டாம். ஏனென்றால் நம் முன்னோர் இதற்கு தீபாவளி லேகியம் என்று ஏற்கனவே பெயர் வைத்துவிட்டனர். தீபாவளி வேறு நெருங்கிவரும் இந்தச் சமயத்தில், இந்த மருந்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால், எண்ணெய் பட்சணங்கள் அனைத்தும் விரைவில் செரித்துவிடும். தீபாவளியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

முதல்நாள் இரவு கொத்துக் கடலையை ஒரு பிடியளவு எடுத்து, சிறிது தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை லேசாக வேக வைத்தோ, வேக வைக்காமலோ சர்க்கரை சேர்த்து நன்கு சுவைத்துச் சாப்பிடவும். கல்லீரல் வழியாக பித்தக் குழாய் மூலம் குடலுக்குள் பித்தத்தைக் கொண்டு வந்து, நன்றாகச் செரிமானத்தை ஏற்படுத்தி உடலுக்கு வலுவூட்டும் உணவு வகையாகும்.

துறிஞ்சி நார்த்தம் பழச்சாறு 200 மி.லி., இஞ்சிச் சாறு 100 மி.லி., திப்பிலித்தூள், மிளகுத்தூள் வகைக்கு 10 கிராம், தேன் 100 மி.லி., இவற்றைக் கலந்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 அவுன்ஸ் (சுமார் 15 மி.லி.) தினம் 3-4 வேளை சாப்பிடலாம்.

மாலை வேளையில் ஆடாதொடாயிலை, மூக்கரட்டை, மருதாணி இவற்றின் ஒன்றின் இலையை அரைத்துத் திப்பிலி சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.

அதுபோல காலை உணவாக, நன்கு கடைந்து வெண்ணெய் நீக்கிய எருமை மோருடன் பார்லி, பழைய அரிசி, புழுங்கலரிசி, கோதுமை இவற்றின் கஞ்சி சாப்பிட நல்லது.

பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறிகாய்களில் புடலை, இளம் பூசணிப் பிஞ்சு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு, கத்தரிப் பிஞ்சு, பொன்னாங்கண்ணிக் கீரை, புளியாரைக் கீரை, இஞ்சி, நெல்லிக்காய், காசினிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கலாம்.

அஷ்டசூரணம் என விற்கப்படும் மருந்தை 5 கிராம் அளவில் சூடான சாதத்துடன் கலந்து 4 - 5 துளிகள் நெய் சேர்த்துக் காலை, இரவு உணவின்போது முதல் உருண்டையாகச் சாப்பிட, உங்களுக்குப் பசித் தீ கெடாமல் பார்த்துக் கொள்ளும். எண்ணெய்ப் பட்சணங்கள் நன்றாகச் செரிக்கும்.

ஒவ்வொரு உணவுக்குப் பிறகும், 1- 2 வெற்றிலையுடன் சோம்பு,சீரகம், சிட்டிகை உப்பு, ஓமம் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக மென்று சாப்பிடவும். உண்ட உணவை நன்கு செரிக்கச் செய்து, அடுத்த வேளை உணவுக்கான பசியையும் தூண்டிவிடும். வாயில் அழுக்கு ஏதும்படியாமல் நாக்கிலுள்ள ருசி கோளங்களைத் தூண்டிவிடும்.

மாதுளம்பழம், வெள்ளரி, கக்கரி, தர்பூசணி இவற்றின் சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட மிகவும் நல்லது. அதுபோல சீமை இலந்தைப் பழம், திராட்சைப் பழம், ஆப்பிள் போன்றவையும் சாப்பிட்டால் நல்லது.

No comments: