Monday, September 19, 2011

பற்று

பற்று என்பது சாதி, மத, சமய, இனப்பற்றை மட்டும் குறிக்காது. அகப்பற்றும் நீங்க வேண்டும், அகப்பற்று நீங்கினாலொழிய அருள்ஜோதியை க்காணமுடியாது.
சுத்த சன்மார்க்கி என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமே தவிர அகங்காரத்தின் வெளிப்பாடாக அமையக் கூடாது.
பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
-அகவல்
எல்லாம் வல்ல ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் பாதம் சரணம். ஐயா! நீங்கள் நிறுவிய சுத்த சன்மார்க்க சங்கத்தின் அருமையையும், அதனால் ஏற்படும் பலன்களையும் இப்பிறப்பில் தெரிந்துக்கொண்டோம். சுத்த சன்மார்க்கம் எல்லா மதங்களுக்கும், சமயங்களுக்கும் பொது என்பதையும் உங்களுடைய பாடல்கள் மூலமும், உங்கள் வழிகாட்டுதலின் மூலமும் அறிந்துக்கொண்டோம்.
பற்று அனைத்தையும் தவிர்த்தால் அருட்பெருஞ்ஜோதியை உணர முடியும், இங்கு பற்று என்பது சாதி, மத, சமய, இனப்பற்று மற்றும் அகப்பற்றையும் குறிக்கும் என்பதையும், இத்தகையப் பற்றை முற்றிலுமாக நீக்கினால் மட்டுமே ஆன்ம நேய ஒருமைப்பாட்டை முழுவதுமாக உணர முடியும் என்பதையும் உங்கள் மூலம் அறியப்பெற்றோம். எனவே அகப்பற்றை முற்றிலுமாக நீக்கி புறப்பற்றாக எல்லா உயிரிடத்தும் அன்புச் செய்வதையே இறை வழிபாடு என்பதையும் தெரிந்துக்கொண்டோம்.
எல்லா உயிர்களும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டும், எல்லா உயிர்களும் சுத்த சன்மார்க்கத்தை நாட வேண்டும், சுத்த சன்மார்க்கம் ஒன்றே நன்மார்க்கம், மற்ற மார்க்கங்கள் எல்லாம் புன்மார்க்கமாகி எல்லாம் வல்ல பரம்பொருளைக் காணாது திகைக்க, சுத்த சிவத்தை சன்மார்க்கம் ஒன்றே விளங்கச் செய்கிறது என்பதையும் இதுவரை சுத்த சன்மார்க்கத்தை அறியாது செத்தவர்கள் எல்லாம் இப்பொழுது அதனை அறிந்து உலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள் என்பதையும் உணருகிறோம்.

சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே.
நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் என்ற வாக்கிற்கிணங்க சமயாதீதம் மூலம் அனைத்து மக்களும் சன்மார்க்கத்தை நோக்கி வருவதையும் பார்க்கிறோம். இன்று பல மதங்களை சார்ந்தவர்கள், பல மார்க்கங்களை சார்ந்தவர்கள் எல்லாம் சன்மார்க்க வழியே சிறந்த வழி என்று உணர்ந்து அவர்களும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை –ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
சுவாமி, நீங்கள் எல்லாவற்றையும் செய்து வருகிற நேரத்தில் எங்களுடைய ஆணவம், கன்மம், மாயை, திரோதனம், மாயையேம் போன்ற மல குணங்கள் உங்களை அறிய விடாது மறைத்துவிடுமோ என்ற பயமும் வருகிறது.
சும்மாயிருக்கும் சுகத்தை தவிர வேறு எதை செய்தாலும் ஆணவம் மேலிடும் என்பதை எங்களால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு
•வள்ளலார் பற்றிய கட்டுரை எழுதுகிறேன், வள்ளல் பெருமானை என்னைப்போல் வேறு யாவரும் எடுத்து வியம்ப முடியாது என்று கூறினால் அதுவும் ஒர் ஆணவச் செயல்.

•வள்ளலாரை நான் மட்டுமே சரியாக புரிந்துக்கொண்டுள்ளேன் என்று வெளியில் கூறினாலும் அதிலும் ஒர் ஆணவம் இருக்கின்றது.

•வள்ளலார் எழுதிய திருவருட்பாவிற்கு இதுவே சரியான விளக்கம் என்று கூறினாலும் ஆணவம் தென்படுகிறது.

•வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை வேறு எவரும் இது வரை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, யாமே மிக சரியாக புரிந்துள்ளோம் என்று கூறும் போது புகழ் ஆசை வருகிறது.

•திருவருட்பாவை படி, படிக்காதே என்று கூறினாலும் ஆணவம் வருகிறது.

•திருவருட்பாவை உலக அளவில் எடுத்து வியம்பி வள்ளலாருக்கு பெருமைச் சேர்க்கப்போகிறேன் என்று கூறினாலும் ஆணவம் வருகிறது.

•நான் ஒரு சுத்த சன்மார்க்கி என்று வெளியில் பிரகனப்படுத்தினாலும் அதுவும் ஒர் ஆணவச் செயலே.

வெட்ட வெளிதனை மெய்யென்றிருப்போர்க்கு
பட்டயமெதுக்கெடி குதம்பாய்- பட்டயமெதுக்கடி
- என்று குதம்பை சித்தர் கூறுவது போல் எவ்வித பட்டயமும் இல்லாமல் சுத்த சன்மார்க்கி என்பதை அன்பின் வெளிப்பாடாகக் கொண்டு உலகியியல் வாழ்வைத் தொடர்ந்தால் ஞானம் கிட்டும்.
ஆனால் இன்று சுத்த சன்மார்க்கி என்று கூறுபவர்கள் கூட அகங்காரத்தின் பிடியில் இருக்கின்றனர். அவர்களால் ஆணவ மாயையிலிருந்து தப்பிக்க முடிவதில்லை. பெரும்பாலான அன்பர்கள் தாங்கள் தான் திருவருட்பாவை –வள்ளல் பெருமானை உலகிற்கு விஞ்ஞானரீதியில் தெரியப்படுத்துகிறோம் என்று தற்பெருமை கொள்கிறார்கள். இதுவும் ஒரு மாயையே.
எனவே இவர்கள் இத்தகைய மாயையின் பிடியில் இருந்து தப்பிக்க அவர்களால் எதுவும் நடக்கவில்லை, எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்கத்தின் ஞானதேக வெளிப்பாட்டின் மூலமே அனைத்தும் நடைபெறுகிறது என்பதை சத்தியமாக உணர வேண்டுமாம். மேலும் மண்ணுலகத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடாகக்கொண்டு வேறு எதனையும் நினைக்காமல் வாழும் பொழுது ஒருமை தானாக உணர்த்தப்படுகிறதாம். ஒருமையை உணராமல், வேறு எந்தவிதமான நடவடிக்கையின் மூலமும் ஆன்ம லாபத்தை அடைய முடியாதாம்.
ஆன்மலாபத்தை கட்டுரை எழுதுவதன் மூலம் பெற முடியாது. திருவருட்பாவை உலக அரங்கில் விளம்பரம் செய்வதன் மூலமும் கிடைக்காது. வள்ளல் பெருமானை உயர்த்தி மற்ற மார்க்கங்களை தாழ்த்தி பேசுவதன் மூலமும் கிடைக்காது. உயிர் இரக்கம் மூலமே ஆன்ம லாபத்தைப் பெற முடியுமாம்.
உயிர் இரக்கம்- கருணை இயற்கையில் எங்கே உள்ளதோ, அங்கே வள்ளல் பெருமானின் ஞானதேக வெளிப்பாட்டை உணர முடியுமாம். எனவே அகப்பற்றை நீக்கி, உயிர் இரக்கம் என்ற புறப்பற்றுக்கொண்டு எல்லாம் உயிர்களும் இன்புற்றிருக்கச் செய்வோமாக! இந்த பற்று மட்டுமே அருட்பெருஞ்ஜோதி இறைவனை- ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமியை உணர்வு ரீதியாக தொடர்புக்கொள்ள உதவும்.
பற்று என்பது சாதி, மத, சமய மற்றும் இனப்பற்றை மட்டும் குறிக்காது. அகப்பற்றும் நீங்க வேண்டும், அகப்பற்று நீங்கினாலொழிய அருள்ஜோதியை காணமுடியாது.

No comments: