Wednesday, March 9, 2011

கண்ணாடி பயிற்சி

கண்ணாடி பயிற்சி
அறிவியல் இல்லாது வேதாத்திரியம் இல்லை. இவ்விளக்கங்களிலும் இவ்வுண்மையே
வெளிப்படுகின்றது.

எந்த ஒரு பொருளிலே நாம் காந்தத்தைக் குவிக்க வேண்டியிருப்பினும்,
அப்பொருள் அங்கே எந்திரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகின்றது.
எந்திரம் என்பதைக் உன்னித்துக் காணும் போது நிகழும் காந்தச் சேகரிப்பு
மிகுதியால், மனம் நடு மன நிலைக்கு [உயிர் மீது நிலைத்தல்] தானாகவே
நகரவல்லது. நடு மனத்துக்கு நகர்த்த வல்ல, காந்தச் சேகரிப்புக்கு
உறுதுணையாய் அமைய வல்ல ஒரு ஊடகத்தை கவனமாக பராமரித்தல் அவசியம்.

நமது முறையிலே கண்ணாடித்தவம் என்பது இராமலிங்கர், நமது மஹானுக்கு
சூக்குமமாக உணர்த்திய தந்திரங்களில் ஒன்றாகும். இராமலிங்கர் தான்
சிறுவனாக இருந்த போது படிப்பிலே கவனம் செலுத்தாமையால், தம் மூத்த
அண்ணணுடன் பிணக்குற்று, வீட்டின் ஒரு அறையில் மட்டுமே தங்கி, அண்ணன்
வரும் போது அவர் எதிரே வராத வண்ணம் இருந்து வந்தார். அந்த அறையிலே
தனியாய் அமர்ந்து அண்ணனிடம் தன்னை நிரூபித்துக்கொள்வதற்காக பாடங்களில்
கவனத்தை ஊன்றிக்கொண்டிருந்தார் என்று அவரது குடும்பமே நம்பிக்கொண்டிருந்த
போது, அவரோ, அங்கு ஒரு கண்ணாடியை நிறுவி, அதற்கு சாம்பிராணியிட்டு, அதை
பலமணி நேரம் உன்னிப்பாகப் பார்த்துகொண்டிருந்தார். அவ்வாறு பார்த்துக்
கொண்டே முருகக்கடவுளை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், அவரது
மனமே முருகனாய் நின்று பின் அவரதுமனவுருவமே அக்கண்ணாடியில் அவருக்கு
பிரசன்னமானது. மேலும் இவ்வாறு பல மணி நேரம் கண்ணாடிப் பயிற்சியில்
ஈடுபட்டதும், அவரது சீவகாந்தம் காலத்தால் திணிவில் மிகுந்து, ஒளி எனும்
காந்தத் தன்மாத்திரையாக மாற்றமடைந்து, 'ஒளியுடலார்' எனும் பெயரை அவர்
பெறக்காரணமாயிற்று.

1. காந்தகச் சேகரிப்பு எந்திரத்தின் உதவியால் மிகுந்து சீவகாந்தப்
பெருக்கம் ஏற்படும். பெருக்க மிகுதியால் காந்தம் தன்னுடைய
தன்மாத்திரையில் உயர்ந்து ஒளியாகக் கூடத் தோற்றமளிக்கலாம், அதுவும்
சாத்தியமே நமக்கு.

2. காந்தச் சேகரிப்பு, உயிர் உணர்தலை, உயிர் அறிதலாக, உயிர்கலத்தலாக
மாற்ற வல்லது. இந்த நிலையிலே மனம் 14-40 அலை நிலையிலிருந்து 7-14 அலை
நிலைக்குள் தானாகவே வழுக்கி உட்புகுந்து விடும். இந்த நிலையில் மனம் எதை
நினைக்கின்றதோ அதுவாகவே மாற்றமடையும், நாம் கண்ணாடியில் நமது பிம்பத்தை
நம் மனம் முழுக்க நிறைந்த மகானது வடிவமாகவே காணலாம், இதுவும் நிகழும்.
1. எந்திரத்தின் பயன்: ஒரு பொருள் இருக்கின்றதென்றால், அதைப் பார்க்கும்
போது அதன் பயன்பாடுதான் நம் மனதில் ஓடவேண்டும். ஒரு ஆடை இருக்கின்றது,
அதைக் காணும் போது அதன் பயன் உடலை காப்பதே எனும் எண்ணம் தான்
எழவேண்டுமேயன்றி, என்ன அழகாக பளபளப்பாக இருக்கின்றது இந்தச் சேலை, எனும்
எண்ணம் நம் மனதில் ஓடினால் அது சரியா? அது போலத்தான்,
கண்ணாடித்தவத்துக்கு வைக்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது அதன் பயன்பாடு
மட்டுமே நம் மனதில் எழவேண்டும். அதற்கு கலர் கலராக ஃபிரேம் செய்து
வைத்தால், அதைப் பார்க்கும் போது அந்தக் கலர்தான் மனதில் ஓடுமேயன்றி
கண்ணாடியின் பயன் பற்றிய எண்ண அலை நம் மனதில் எழுமா? முதல் தேவை எளிமை
மற்றும் பயன்பாடு குறித்த சிந்தனையாலமைந்த அமைந்த தேர்வு.

2. சூக்கும சரீரத்தின் அளவு: உங்களது துவாதசாங்கம் என்பது ஒரு ஒன்றரை அடி
அளவுக்கு துரியத்திலிருந்து உயர்ந்து நிற்க வல்லது, துவாத சாங்கத்தில்
தங்கும் காந்தமும் கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்க வேண்டுமல்லவா, அதனாலே
வாங்கிய கண்ணாடி உடலையும், உடலினின்று ஒரு ஒன்றரை அடியளவையும்
காட்டவல்லதாய் இருப்பதே நலம். இல்லாவிடில் காந்த மிகுந்த நிலையில்
கண்ணாடியின் பயன் கேள்விக்குறியாகிவிட வல்லது.

3. எந்திரத் தூய்மை: உடற் தூய்மை, உள்ளத்துக்கு புத்துணர்வை
அளிக்கவல்லது. எந்த ஒரு எந்திரத்தின் தூய்மையும் அதை பயன்படுத்துவோருக்கு
பயிற்சியில் ஆழ ஊக்குவிப்பாய் அமைய வல்லது. ஆகவே, கண்ணாடியை தூய்மையாய்
வைத்திருத்தல் அவசியம்.

4. எந்திரக்குக் காப்பு: காந்தம் குவிக்கும் பொருள் எதுவாயினும், அதை
அவசியப்படாதோர் எண்ண அலைகளிலிருந்து புறமாக வைப்பதே நல்லது. அந்த
விதத்தில் இந்தக்கண்ணாடியை நடு வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டலாகாது. அதை
எடுக்கும் போதும் அருட்காப்பு அவசியம், வைக்கும் போதும் அருட்காப்பிடுதல்
நலம்.
5. எந்திரத்தில் குவிப்பு: காந்தம் கையில் மிகுதியாக சேகரிப்படைந்த
நிலையில், அது தானாய் வெளியேறி ஓடாத வண்ணம், மஹான் கையுறை அணியும்
பழக்கத்தைக் கொண்டிருந்தது போன்று, காந்தம் மிகுதியாக உங்கள் கண்ணாடியில்
சேகரிப்படைந்த நிலையில், அதற்கு உறையிடுதலே நலம். அது குவிந்த காந்தத்தை
இழப்பின்றி தேக்கி வைக்க வல்லது.

6. குறித்த காலம்: நமது காந்தக் களம் எல்லா நேரங்களிலும் தூய்மையாக அமைய
வல்லது. எனினும் கண்ணாடி எனும் எந்திரம் நமது காந்தக் களத்தை மட்டுமே
பிரதிபலிப்பதில்லை. அது நம்மைச் சுற்றியுள்ள வான் காந்தக் களத்தையும்
[புவியை ஒட்டிய பகுதி] பிரதிபலிப்பதால், அந்தக் களம் எந்த நேரத்தில்
தூய்மையாக இருக்கின்றதோ, அந்த நேரத்திலேதான் கண்ணாடியை இட்ட உறையினின்று
வெளியே எடுத்து நம் பயிற்சியைத் துவக்க வேண்டும். அதாவது கண்ணாடிப்
பயிற்சி எனும் தந்திரம், பிரும்ம முகூர்த்தில் மட்டுமே செய்யப் பட
வேண்டியது. மற்ற நேரங்களில் அந்த எந்திரத்தை எதையும் பிரதிபலிக்கா வண்ணம்
சுவரை நோக்கியதாய் உறையிட்டு வைத்தலே நலம்.

கடைசியாக,

7. கண்ணாடி வாங்கியது எதற்கு? புதுசா நிறைய காசுகுடுத்து செருப்பு
வாங்கிருக்கேன் சார், அதனால தான் சார், நான் அதை காலிலே அணியாது கையிலே
வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றேன் என்பது போன்று சில பேர்,
கண்ணாடி தவம் செய்ய கண்ணாடி வாங்கிருக்கேன் சார், பரணிலேயே வைத்துப்
பூட்டியிருக்கின்றேன், எதோ அது பெரிய எந்திரமாம், பத்திரமாய்
வைக்கணுமாம், என்ற நினைப்பிலே அதைப் பயன்படுத்தாமலேயே வைத்திருப்பது,
விலையுயர்ந்த செருப்பு வாங்கி தலைல வச்சிகிட்டு நடந்த கதைதான்.

No comments: