Thursday, March 10, 2011

குருவிடம் அடைய ஓர் வழி

குருவிடம் அடைய ஓர் வழி... Part I
குருவே சரணம்


எல்லாம் வல்ல இறை அருளால் வாழ்க வளமுடன்


குருவானவரின் தத்துவம் என்னெவென்று புரிந்துகொள்ளும் முன், குரு நமக்குத்தந்திருக்கும் தவ முறையை தீவிரமாகப்பற்றிக்கொள்ளும் அளவுக்கு, தியானத்திலே உயர்வு கிட்டும். தியானத்துடன், குரு நமக்குத்தந்திருக்கிற பல கவிகளும் கூட, தியானத்திற்க்கும், இறை உணர்வுக்கும் பேருதவியாக இருக்கும்.

குரு தந்திருக்கும் கவியாகவும், குரு மீது கொண்டிருக்கும் மனோ அலைத்தொடர்பும், தியானத்திலே அமர்ந்த உடன் தானாகவே, குருவின் தன்மையாய் மெல்ல மெல்ல சீடனின் குணமும், உடலும் மாற்றங்காண ஆரம்பிக்கும்.

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்.

என்ற வரிகளாய் சீடனாவன் குருவை நினைக்க ஏற்படுத்திக் கொள்ளும் பலவித முயற்சிகளுக்கு ஏற்ப அதுவாகவே மாற்றங்காணுவார்.

தவத்திலே அமரும் சீடன் தன்னைச்சுற்றி இருக்கும் பலவித நிகழ்வுகள் பலவிதத்திலே பார்த்தாலும், அது எல்லாவற்றையும் விட குருவின் மீதான எண்ணமும், தொடர்ந்த மனோ அலைத் தொடர்பும் தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு தியான உயர்வு கை கூடும்.

பல விதத்திலே தொல்லைகள் ஏற்படும். இருப்பினும் இது எல்லாம் குரு நமக்குத் தரும் சோதனை என்று, அதாவது குருவிடம்... அப்பா... என்ன தான் நெருப்பின் அருகில் எம்மை வைத்தாலும் கூட நீங்களே அதைத் தருகிறீர்கள் என்று ஆழ்ந்து நின்று மனோ அலையை பரப்பவேண்டும். வரும் கடினங்கள் யாவும் நாம் முன்னர் செய்த வினைகளுக்கு ஏற்படும் விளைவு என்பது நமக்குப் புரியும். அப்போது வலிக்கும். வலித்தாலும் கூட தாங்கிக்கொள்ளும் தன்மை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு வினைப்பதிவுகள் கழிந்து முன்வினைப்பதிவுகள் தீரும்.


முன்வினை தீரும் அளவுக்கு தவத்தில் முன்னேற முடியும். இவ்வளவும் நிகழ்ந்தாலும் கூட குருவை விடாது தொடர்ந்து தொடர்பிலே மனோ நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
குரு என்ற ஒருவர் உடல் என்ற கட்டுப்பாட்டைத்தாண்டி இருப்பவர். குருவானவர் உடலுக்குள் இருப்பதோ அல்லது சமாதி ஆகி இருப்பதோ, சீடனுக்குத் தடையே இல்லை. தொடர்ந்து குருவோடு மன அலைத்தொடர்பு இருக்கவேண்டும். சீடனுக்கு நிகழும் எதுவும் முதலில் குருவுக்குத் தான் தெரியும். அது முன்னேற்றமாக இருப்பினும். அதே போல புற விசயங்களால் சீடன் பாதிக்கப்படும் போதும் கூட சீடன் குருவிடம் தான் மனோ அலையை செலுத்தவேண்டும். பக்கத்திலே நின்று கொண்டு ஒருவர் தூற்றுவார்... அது வலிக்கலாம். அதை குருவிடம் சொல்லிக்கொள்ளலாம்...தூற்றியவரை கண்டு கொள்வதை கூட குருவிடம் சொல்லிக்கொள்வதிலே கவனம் இருக்கவேண்டும். இப்படி வாழும் போது குருவுடனான வாழ்தல் போன்ற ஒரு நிலை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த வாழ்க்கை முறையிலே, குருவின் தொடர்பானது, சீடனின் தியான உயர்வுக்கு ஏற்றார் போல பழக்கங்கள் மாறும். சீடன் தியானிக்க எந்த முறையான உடல், உணவு மற்றும் பழக்கங்கள் வேண்டுமோ அது எல்லாம் முறையாக உடலிலே மாற்றத்தினை ஏற்படுத்தும். இந்த மாற்றங்களால் தியானத்திலே ஆழ்ந்த நிலை எய்த உதவி செய்யும். இது அவரவர் தன்மைக்கு ஏற்றார் போல மாறும்.

கவிதை, இசை, புத்தகத்தில் படிப்பது என்று எந்த நிலை சீடனுக்குள் பழக்கங்களாக இருக்கிறதோ. அதில் எல்லாம் தானாகவே குருவின் தகவல்களும் சீடன் குருவை நோக்கி இருக்கிற தன்மைகள் மென்மேலும் வலுப்பெறும் அளவுக்கு எல்லாம் அமையும்.

குருவானவர் ஒரு பக்கம் சீடனுக்கு சோதனை செய்தாலும், மறுபக்கம் புதுவினைகள் நுழையாத படி காத்துக்கொண்டே வருவார்.. இதை சோதிக்கவிரும்பினால், புதுவினைகளை எடுத்தும் காண்பிப்பார்.. அப்போது தான் தெரியும் எந்த அளவுக்கு அவர் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார் என்று. ஆகையால் எதிலும் குருவை சோதித்துப்பர்த்தல் என்பது தேவையற்ற ஒன்றாகவே இருக்கும்.
சீடன் பக்குவம் எய்தும் அளவு வந்தவுடன், தியானம் ஒழுங்காக நிகழ்வதற்கு ஏற்றார் போல, உணவு, உறக்கம், சீரான தேக ஆரோக்கியம், மற்றும் சுற்றுப்புறத்திலே எவரும் தொல்லை தராத, கொசுக்கடி , வியர்வை, கடுங்குளிர் இப்படி எந்த விதத்திலும் சீடனுக்கு பிரச்சினை வராதபடி அமைத்துத் தருவார்.

எப்படியும் தியானத்திலே மௌன நிலையிலே லயிக்கும் அளவுக்குத் தேவையான சீரான மூச்சு, இதயத்தின் ரத்தஓட்டம் என்று உடலானது தன்னைத் தானே தயார்படுத்தப்படும்.

தியானம் நிகழும். குருவே சீடனை ஒவ்வோர் நிலையாக சீடனுக்குள்ளே இருந்து வழி நடத்திச்செல்வார்.

குருவோடு ஒன்றி நின்று மனதைப்பழக்கும் அளவிற்கு குருவின் கவிகள் எல்லாம் அறிவிற்குள் எந்த வித தடங்கலும் இன்றி வைக்கப்பட்டுவிடும்.

குருவை நோக்கி மட்டுமே இருந்த சீடனுக்கு குருவின் தன்மை என்ன என்பதை தவத்திலே எடுத்துக்கட்டுவார்.


வாழ்க வளமுடன்.
thanks to sundararajan

No comments: