Thursday, March 10, 2011

விருப்பும் வெறுப்பும்

விருப்பும் வெறுப்பும்...

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


விருப்பும் வெறுப்பும் எவரெனக்கண்டு
அறிவே இவையாய்த் தோன்றி இயங்கி
இவை தாம் மாறிடும் தன்மையும் கண்டு
அத்தகைய அறிவின் தத்துவம் அறிய

அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி
அறிவையே அறிய ஆழ்ந்து ஆழ்ந்து
பொறிபுலன் அடக்கிப்பொறுமை அடைந்து
ஒன்றி ஒன்றி ஒருவனாய் நின்று
உட்புறம் உணர்ந்து முடிவினில்....


மனிதனின் சிறப்பு என்ற கவியிலே குருனாதர் பாடிய கவியில் சில வரிகள் இது.

புலன் அறிவு காண்பதும், கற்பதும் உணர்வதும் என்று பல கட்டங்களிலே அனுபவங்களை ஒருவருக்குத் தருகிறது. சீடன் என்பவன் தான் காணும் பல அனுபவங்களை ஒரு பக்கம் அணுகினாலும், தொடர்ந்து அந்த அனுபவங்களின் ஒவ்வோர் அணுவின் இடையிலும் குருவை நுழைத்து, அந்த அனுபவங்களை எல்லாம் குருவை அடையும் வழியாக ஆக்கிக்கொள்கிறான்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ? என்றார் பாரதி...

மகான்கள் எண்ணங்களை பிறப்புகள் என்றார்கள்... எத்தனை கோடி எண்ணமோ அத்தனை கோடி பிறப்புகள். இதனால் தான் மௌன நிலையிலே லயித்து நின்றார்கள். எண்ணங்களைக்கடந்து அறிவு தனித்து சுயம் பிரகாசமாய் நிலைக்க வைத்துக்கொண்டார்கள்.

சீடன் என்பவன் உண்மையான சுகம் பெற வேண்டியே தான் தெரிந்தோ உணராமலோ, செயல்கள் புரிகிறான். ஆனால் விழிப்பு நிலையிலே இல்லாத்தால் அங்கே எண்ணங்கள் செயல்களாக மலர்ந்து அங்கே பயனாய் இன்ப துன்பம் துய்க்கிறான்..

அறிவு என்பது பரந்து விரிந்த நிலையிலே இருக்கிறது... அதுவே மூலமாகக்கொண்டு சீடனும், மக்களும் இருக்கிறார்கள். இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிற சுத்தவெளி அறிவும், இயங்குகிற அறிவாக மாறி இன்ப துன்பம் அனுபவித்து அதிலே இருந்து மீண்டு, மீண்டும் சுத்தவெளி அறிவாம் குருவோடு இணைகிறான் சீடன்.

அறிவில் இருந்து அசைந்த உடன், எண்ணம் உண்டாகிறது. அது விருப்பாகவும், வெறுப்பாகவும் தான் மையத்திலே தன்மைகொண்டு நமக்குள் இயங்குகிறது. இந்த இரண்டு குதிரைகளுக்கு மூலம் சுத்தவெளி அறிவு, குரு. விருப்பும், வெறுப்பும் தோன்றுவது அறிவில் ஒரு புள்ளியாய். அதன் பயனாய் இன்ப துன்பம் அனுபவமோ, நம்மை விழிப்பு நிலையிலே இருந்து வெகு தூரம் பயணம் செய்யவைத்து விடுகிறது. மீண்டும் நாம் சுத்தவெளியோடு அறிவை இணைத்துப்பழகும் போது, சீடனே விரிவாகிறான். விரிந்து நின்று அறிவை அதிலே நிறுத்தி பழகும் போது, அகண்டாகாரம் அளவிற்கு பார்த்து பிறகு ஒடுங்கி நிற்கிறான் அறிவிலே.

இப்படிப்பார்க்கும் போது எண்ணம் தோன்றிய போது சிறு அசைவாக இருந்த நமது அனுபவம் மீண்டும் சுத்தவெளியோடு இணைய முயலும் போது அகண்டாகாரமாகி பிறகு ஒன்றாகிறது. இதைத்தான் நமது குரு சொல்வாரே... எண்ணம் தொடங்கியதோ சிறு புள்ளி, இயங்கி முடியும் நிலையோ அகண்டாகாரம்.

விருப்பும், வெறுப்பும் நமக்குள் ஏதோ ஒருவரால்/ ஒரு நிலையால் வந்தாலும், எண்ணத்தால் அந்த நிலைவரக்காரணம் நாமே தான் அன்றி வெளிப்புறத்திலே இருந்து வருவதல்ல. அறிவே தான் இவையாய் தோன்றி இயங்கி, அதுவாக மாறிடும் தன்மையை உணர தவமும் குருவென்ற அருளே வழி.

எந்த ஒன்றைப்பற்றிக்கொண்டால், விருப்பும் வெறுப்பும் கடந்த நிலையிலே நிலைக்க முடியுமோ அந்த நிலையே குரு. எங்கெங்கு சீடன் ஓடினாலும், குருவைப்பற்றிக்கொண்ட அளவுக்கு அறிவில் தெளிவும், அறிவிலே நிறைவும் எய்தி விடுவான்...

அறிவை ஒன்றை அறிவில் நிறுத்தி
அறிவையே அறிய ஆழ்ந்து ஆய்ந்து
பொறிபுலன்கள் அடக்கிப்பொறுமை அடைந்து
ஒன்றி ஒன்றி ஒருவனாய் நின்று...


என்று குரு சொல்வது அப்படியே நிகழ்வதைக்காணும் போது, குருவே சரணம் என்று கண்ணிலே நீராய் ஆனந்தம் வெளிப்படும்.

எத்தனைத் தான் இன்பம் துன்பம் எனினும் அத்தனையும் நமது எண்ணமே.. அது எவர் மூலம் வருவது எனினும் கூட நமது எண்ணமே...

ஒருவருக்கு எதிரி உண்டென்றால் அது ஒழுங்கற்ற எண்ணமே.. என்பார்கள். அது போல, அனைத்து எண்ணங்களும் குருவை நோக்கியே செல்லட்டும்.

மிஞ்சி நிற்பதும், வெகுவாய் மீதம் இருப்பதும் குரு என்ற அருளே. வேறு எந்த அனுபவமும் நிலைக்கப்போவதில்லை. குருவே சரணம்.


வாழ்க வளமுடன்
நன்றி : சுந்தரராஜன்

No comments: