Thursday, March 10, 2011

இருப்பு அது ஒன்றே

இருப்பு அது ஒன்றே....
வாழ்க வளமுடன்


குருவே சரணம்.

அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா தொழில்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக.

குருவின் ஆற்றல் எல்லையற்று விரிந்து பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த உடல் கொண்டு நாம் தியானத்திலே அமர்ந்திருக்கிற போது, மனம் என்ற ஒன்றின் இயக்கம் என்பது பழக்கத்தின் மூலம் என்ன செய்துவந்திருக்கிறோமோ அதனை கண் மூடிய பிறகும் எடுத்துக்காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

தியானத்திலே அமர்வது என்பது மனதில் இருப்பது செயலாக மலர சிறிது காலம் தள்ளிப்போனாலும், தியானத்திலே மனமானதை நாம் எப்படிப் பழக்கி வைத்து எதிலே நாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்பதை காட்டி விடுகிறது. கண்ணை மூடிவிட்டால், நம் உள்ளொளி திறந்து காட்சியை நமக்குள் எடுத்துத் தந்து விடுகிறது.

எப்போதும், குரு என்பவர் நமக்குள்ளே உள்ள தியான உணர்வாக இருந்துகொண்டு அனைத்தையும் புரிந்து கொண்டு இருக்கிறார். எப்போது மனம் என்ற இயக்கத்திலே குரு நிறைய ஆரம்பிக்கிறாரோ அப்போதே, மனதின் இயக்கம் தன் மூலத்தினை நோக்கி விரைகிறது. எப்போது இருள் இருக்கிறதோ அங்கே ஒரு சிறு விளக்கு வந்தவுடன் இருள் விலகுவது போல, மனம் என்ற இயக்கமானது குரு என்ற வெளிச்சத்தால் தன் மூல நிலையை நோக்கி சென்றுவிடுகிறது.

எது நிரந்தரமோ அதுவொன்றே தான் நிலைத்திருக்கும். மனம் என்றின் இயக்கமாம் எண்ணத்திலே குருவுடைய அருள் நிறைய நிறைய, எண்ணமானது தனக்கென்று ஒரு தனி இயக்கம் இல்லாததால் தன் மூல நிலையாம் மௌனத்தோடு ஒன்ற ஆரம்பிக்கிறது. ஒவ்வோர் முறையும் குருவின் மீதான எந்த ஒரு எண்ணமும், ஒரு கரும்பலகையிலே நிறைந்த எழுத்துக்களை துடைப்பது போல ஆகிவிடுகிறது.

எப்போது குருவின் மீதான ஒரு எண்ணம் நீடிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே, அதன் தன்மையை ஒவ்வொன்றாக உணரவைத்து எண்ணத்தின் மூல நிலையாம் பேதமில்லாத சுத்தவெளியுடன் தியானிப்பவரை நிலைக்கவைக்கிறது.

அவ்வையாரின் வினாயகர் அகவலைக் கேட்கும் போது, முதலில் வினாயகரின் தோற்றத்தை விரிவாகச்சொல்லும் அவ்வை,


தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கமறுத்து
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே எந்தன் உளந்தனில் புகுந்து

குருவடிவாகி குவலயந்தன்னில்
திருவடி வைத்துத் திறம் அது பொருள் என
வாடா வகைத் தான் மகிழ்ந்தெனக்கருளி
கோடாயுதத்தால் கொடுவினைக்களைந்தே


உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத்தெளிவையும் காட்டி
ஐம்புலந்தன்னை அடக்குமோர் உபாயம்
இன்புருகருணை இனிதெனக்கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்தே
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து...


என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தந்து
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டில் ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்தை அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி


அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்...
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி...

என்று தமது இறை அனுபவத்தை விளக்கிக்கொண்டே செல்வார்..


குருவின் சிந்தனை என்பது மேலோங்க மேலோங்க, இந்த மேற்கோள் காட்டிய அனைத்து வரிகளைத் தாண்டியும் நமக்கு குருவே அருள்வார்.

இந்த வரிகள் எல்லாம் குருவிற்கும் பொருந்தி வரும்.

சீடன் தியானத்தின் முன்பு வரை அவனுக்கு எண்ணங்களில் குரு இருப்பார். உடல் என்ற ஒன்று லேசாகி விடும். கண் மூடினால் சுத்தவெளியில் மனம் அடங்கி இருந்து வந்திருப்பதும், தவத்தின் நிலையிலே தொடர்ந்து இருந்து வந்திருப்பதன் உணர்வும் மேலோங்கும். தவத்திலே அமர்பவன் என்ற முனைப்பிற்க்கு மூத்த நிலையாம் அசைவற்ற பேராதார நிலையுடன் அடங்கி இருக்கும்.

நான் என்ற முனைப்பு உண்மையிலே உள்ளதென்றால் அது நீடித்து நிலைத்திருக்கவேண்டும். சுத்தவெளியிலே மனம் நிலைத்தால், முனைப்பு அடங்கி விடும். அங்கே தன் மூல நிலையாம் மௌனத்தோடு நிலைத்து நிற்கும். அந்த தவத்தில், இந்தப்பிறவியிலே அடையவேண்டிய பிறவிப்பயனை நல்கும். இதுவே குருவருள் உட்புகுந்தால் வரும் இயல்பூக்க நிலை.


எது அங்கே தோன்றினாலும் முனைப்பே என்றாலும் முனைப்புங்கூட இருப்பின் மூலம் தோன்றுவதே... அத்வைத தத்துவம் என்பது முனைப்புக்கு என்று தனி இருப்பு இல்லை என்றும், இருப்பு ஒன்றே நீடித்து நிற்கிறது என்பதைத்தான் அருட்பெருஞ்சோதி என்று வள்ளலாரும் நமது குருவும் தெரிவித்தார்கள்.


எப்போது மௌனத்திலே அசைந்தோமோ அங்கே முனைப்பு ஏற்பட்டிருப்பதும், அந்த முனைப்பு தரும் பல தோற்றங்களும் கூட அருள்வெளி தன்னின் அசைந்த நிலையின் விளக்கங்களாய் தெய்வங்களைக்காட்டினர் த்வைத தத்துவ நிலையில் நின்றோர்.

முனைப்பு என்ற நிலையிலே அசைவு + இருப்பு என்று இருக்கிறது.

மௌனம் என்பது இருப்பு என்ற ஒன்றில் பேதமின்றி அடங்குகிறது. அங்கே இருப்பது இருப்பு அது ஒன்றே என்று ஆன்மஞானம் ஒளிர்கின்றது. அதுவே அருட்பெரும்சோதி... அதன் தன்மை தனிப்பெருங்கருணை.

குருவே சரணம்.

நன்றி : சுந்தரராஜன்

No comments: