Thursday, March 10, 2011

தியானம் சில அணுகு முறைகள்

குரு அருளால் அனைவரும் வாழ்க.

தியானம் என்பது முயன்று சாதிப்பதிலே இருக்கிறது.

வைராக்கியம் என்பது மனதிலே வளர்த்துக்கொள்ளவேண்டும். தியானத்திலே அமர்வேன் என்ற மேல்பதிவும், குருவின் பாடல்களை அவ்வப்போது சொல்வதும் மன ஓர்மை நிலைக்கு உதவும்.

மன ஓர்மை என்பது தவத்திற்கு உதவும். தியானத்திலே கூட்டுத்தவமானது நாம் உற்சாகமாக தியானிக்க மனதுக்கு வழி செய்யும். மேலும் பலரின் தியான நிலைகள் நமக்கும் உதவும். தியானமும் சீக்கிரம் கை கூடும்.

வாழ்க்கையிலே தியானம் எடுத்த வரை செய்த பலவித பழக்கங்கள் நம்மை அதே வழியில் செல்வதைத் தடுப்பதால், தியானம் என்பது ஆரம்பத்திலே கடினமாகவே தோன்றும். ஆனால், முயற்சி, குருவிடம் பணிவு, மன அலைத்தொடர்பு குருவோடு ஏற்படுத்திக்கொள்ளுதல் என்ற பயிற்சிகள் தியானத்திலே உயர்வுக்கு வழி தரும்.. எதிலும் எதிர்பார்த்தலை விட, முயற்சித்துக்கொண்டே இருத்தல் சீக்கிரம் பலனைத்தரும்.

ஒவ்வோர் மகானும் ஒரு வித மனோ நிலையிலே இருந்து சமாதி நிலையிலே லயித்தாலும், குரு என்பவரின் ஆற்றலானது வான் காந்த அலையிலே பரவி இருக்கிறது. அணுகும் சீடனின் மனோ அலையானது குருவின் ஆற்றல் அலையுடன் ஒன்றி உயிர்கலப்பு ஏற்பட்ட பிறகு, வான் காந்தத்தின் மூலம் குருவிடம் சீடன் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே உயர்ந்து கொண்டே செல்வார். அதற்கு சீடனின் தியானம் நாளுக்கு நாள் உயர்வதை உதாரணமாகக்கொள்ளலாம்.

எம்மைப்பொருத்தவரை, நமது குருவானவரோடு இணைந்த பல மகான்களின் ஆற்றல்களின் வழி நடத்துதலிலே வாழ்ந்து வந்தார். உள்ளுணர்வுகள் ஒவ்வொன்றும் வழி காட்டிய படியே ஒவ்வோர் செயலும் செய்தார். இதனால் அவரது நடவடிக்கைகளில், நம்மோடு அவர் கூடவே இருப்பவர் என்பது போலவே எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் இருந்தார்.

குருவானவர் எப்போதும் அணுகும் சீடனுக்குப் பதில் சொல்லாமலே இருந்ததில்லை... ஆனால் என்ன தான் நமது குருவிடம் நமது கஷ்டங்களை மனதால் பகிர்ந்தாலும் கூட, கவனித்து அவர் என்னசொல்கிறார் என்றால், புன்னகை முதலில் இருக்கும்... திரும்பக்கேட்டால் செயல் விளைவு என்பது ஞாபகத்திலே உதிக்கும்படி செய்வார். அதுவும் நாமே அதுவும் சொல்லிக்கொண்டு ஏற்றுக்கொண்டு வாழ்வது என்று நாம் உணர்ந்து பேசும்படி செய்வார்.
இது ஒரு உதாரணம்... குரு என்பவர் தாம் செயல்பட்ட விதத்தின் ஊடாகவே நம்மை அவர் வழியிலே அழைத்துச்செல்வதைப் பார்க்கலாம். அறிவு என்ற இடத்திலே இருந்து சற்றும் விலகாது அசையாது அறிவை கூராக்குவார்.

நாம் செல்லும் வழியிலே சில இடத்திலே, நாம் நமது தேடலிற்கேற்ப சில மகான்களின் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் தருவதாக இருக்கும். அப்போது குருவைப்பார்த்தால், அதே புன்னகை இருக்கும்... அவரே இதைத் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாதவர் அவர். ஆனாலும் குருவைப்பார்த்தால், அந்த புன்னகையிலே, அறிவு என்ன சொல்கிறது என்று கேட்பார்... குரு இரண்டா என்று கேட்பார்? சரி நீ எங்கே இருக்கிறாய் இதிலே என்று சொல்லும் ஒரு புது எண்ணம் குருவினால்...

குருவின் கருணை என்பது அணுகும் சீடனை, அந்த தூய இடத்திலே வரும் வரை விடாது பிடித்துக்கொண்டே இருக்கும்... இதன் நடுவிலே, சீடன் வாழ்விலே பல ஆண்டுகள் கழிந்து இருக்கலாம்... குருவென்பவர் உடலோடு இல்லாமல் இருக்கலாம்... ஆனால் குரு சீடர் என்ற பந்தம் என்பது மட்டும் எப்போதும் துண்டிக்கவே செய்யாது பார்த்துக்கொள்கிற சீடனை விடாது இருப்பது குருவின் இயக்கத்திலே ஒன்று.

எத்தனையோ கோடி எண்ணங்களே தான் பிறப்புகள்... அதிலே குருவிடம் செல்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைப்பதை விடாது குருவோடு தொடர்ந்து கலந்து தமது இருப்பான இறையோடு கலக்க ஆரம்பிக்கவேண்டும்.

குரு மீதான எண்ணங்களானது சீடனை சுத்திகரிப்பு செய்யும். உடலை என்ன செய்தால், தியானத்திலே அமர்த்த ஆகுமோ அதற்கேற்ப அனைத்தையும் நிகழ்ந்து விடும்... உணவு, உழைப்பு, உலகாய நிகழ்வுகள் என்று எதுவும் தியானத்திற்கேற்றார்போல நமக்கு அமையும்.

தியானம் குருவோடு இணைந்த இடத்திலே நமக்குள் கிடைக்கிற தன்னம்பிக்கையிலே, இது வரை கொண்டிருக்கிற அனைத்து தேவையில்லாத பலவற்றையும், சீர் தட்டி, எப்போதும் தியானத்திலே அமர்த்தும் படி செய்யும்.

தியானத்திலே, நேரம் காலம் என்று ஆரம்பத்திலே கடைபிடிப்பது ஒரே வழக்கமாக ஆக்கிக்கொள்ள உதவும் என்றாலும். அப்படி குறிப்பிட்ட நேரத்திலே தியானம் செய்ய அமராதவர்களுக்குக் கூட தியானம் கை கூடவே செய்யும் அந்த தன்னம்பிக்கை. நம்மால் முடியும்.

குருவும் சீடனும் இறையிலே ஒன்றாக இருப்பதை உள்ளுக்குள் உணரும் வரை குருவின் கையை விடக்கூடாது.... உணர்ந்த பிறகு குருவின் கால்களை விடக்கூடாது...

வாழ்க வளமுடன்.
நன்றி : சுந்தரராஜன்

No comments: