Sunday, March 20, 2011

உலக பொது சமயத்தின் உண்மை உணர்வு

உலக பொது சமயத்தின் உண்மை உணர்வு



1. எனது பிறப்பு, வளர்ப்பு, காப்பு இவற்றிற்கு கருணையுள்ள, கண்கண்ட கடவுளாகவும், காப்பாளராகவும், துணைவர்களாகவும் உள்ள எனது அன்னை, தந்தை, குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் என்ற ஐந்து பெரியவர்களையும் நன்றி மறவாமல் மதித்து வாழ்வேன்.


2. பேரியக்க மண்டலம் முழுமையும் நீக்கமற நிறைந்து எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் முற்றறிவாக இயங்கி அருளாட்சி புரியும் மெய்ப்பொருள் எல்லாம் வல்லது, எங்கும் உள்ளது, எல்லாம் அறியும் ஆற்றலுடையது. என்னுள்ளும் எனதறிவின் உட்பொருளாய் உள்ளது என்பதை நம்புகிறேன், உணர்கிறேன். ஒத்துக்கொள்கிறேன்.


3. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நான் செய்யும் தொழில்களில் எனது நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருட்கள் அல்லது மக்கள். இவற்றிற்கு ஏற்ப இன்பமோ, துன்பமோ விளையும் உண்மையை, எல்லாம் வல்ல தெய்வமே அதன் பேரருள் நிலையிலிருந்து நீதியோடு வழங்குகிறது என்ற உண்மையை மதிக்கிறேன். எச்செயலையும் எனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும், துன்பம் விளையாத முறையில் விழிப்போடு செயலாற்ற என்னால் இயன்றவரை அக்கறையோடு முயற்சிப்பேன். இதனையே இறைவழிபாடாகக் கொள்வேன்.


4. உணவு, உழைப்பு, ஓய்வு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்து தொழில்களையும் அலட்சியம் செய்யாமல், மிகையாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் அளவோடு, முறையோடு செய்து உடல் நலம், மனநலம், பொருள் வளம், சமுதாய நலம் காப்பேன்.


5. அறிவின் நலம் காத்து அதனை மேன்மை நிலைக்குக் கொண்டுவர தெய்வ வழிபாடும், சமுதாய மக்களிடம் நட்புறவை இனிமையாக அமைத்துக் கொள்ள ஒழுக்கம், கடமை, ஈகை, என்ற மூன்றிணைப்பு அறநெறியும் மையக் கருத்துகளாகக் கொண்டவையே எல்லா மதங்களும் என்பதை உணர்ந்தேன். எல்லா மதங்களுக்கும் மதிப்பளித்து வாழ்வேன். எந்த உருவில், எந்த குணத்தில் தெய்வத்திற்கு உருகொடுத்து வணங்கினாலும் அவரவர் அவரறிவால் எடுக்கும் உருவம், குணம் என்பதையறிந்து எவ்வகை வழிபாடும் அறிவை வழிபடும்கருத்தே என்பதை உணர்ந்து கொண்டேன். எந்தவகை இறைவணக்கத்தையும் அலட்சியப்படுத்தாமல் மதித்து போற்றுவேன்.


6. நான், குடும்பம், சுற்றம், சமுதாயம், உலகம் என்ற ஐந்து பிரிவிற்கும் ஒன்றால் ஒன்று கெடாமல் எனது கடமைகளை வழுவாமற் செய்வேன்.


7. குடும்பத்தில், சமுதாயத்தில், ஆட்சிமுறையில், உலக அரங்கில் நடைபெறும் குற்றங்கள், தவறுகள், பழிச்செயல்கள் இவற்றிற்கு எந்த ஒரு தனி மனிதனையும் பொறுப்பாக்கி அவர் மீது வெறுப்போ, பகையோ, அலட்சியமோ கொள்ளமாட்டேன். எனெனில் எந்தக் குற்றத்திற்கும், தவறுக்கும் நீண்டகால சமுதாயத்தில் நிலவி வந்த கருத்துக்கள் செயல்கள், சூழ்நிலைகளால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் இவற்றால் ஏற்பட்ட பதிவுகளும், கருத்தொடராக தொடர்ந்து வருவதும் இன்றுள்ள சமுதாய சூழ்நிலைகளும்தான் எல்லா பழிச்செயல்களுக்கும் காரணம் என்பதை அறிவேன். இன்றுள்ள மக்கள் மனம்தெளிந்து திருந்துவதற்கு உதவி செய்ய ஆன்மிக அறிவை வளர்ப்பதும், துன்பப்படும் மக்களுக்கு உதவி செய்வதும், வருங்கால சமுதாய அறிவுத் தெளிவோடு அறநெறி பின்பற்றி வாழவும், உலக நாடுகளுக்கிடையே அமைதி நிலவவும் என்னால் இயன்ற தொண்டுகளைச் செய்வேன்.


8. பரிணாம சிறப்புப்படி எல்லா அண்டங்களையும் உருவாக்கிக் காக்கும் இயற்கை உலகில் உயிர்களை உற்பத்தி செய்து வளர்க்கும் பொறுப்பினை பெண்ணினத்திடமே ஒப்புவித்துள்ள கருணை நிறைந்த அருட்பொறுப்பை உணர்ந்து பெண் குலத்திடம் எப்பொழுதும் உரிய மதிப்புடைய வனாக இருப்பேன்.


9. எனது வருமானத்தில் நூற்றுக்கு ஒன்று வீதம் ஒதுக்கி பிறர் நலத்திற்காகச் செலவிட்டு வருவேன்.


10. எனது ஆன்மா தூய்மைபெற, மேன்மை பெற அகத்தவம் எனும் அகநோக்குப் பயிற்சியைப் பின்பற்றி சிறப்படைவேன்.
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No comments: