Thursday, March 10, 2011

மௌனம் ஒன்றே நிலைக்கும்

மௌனம் ஒன்றே நிலைக்கும்
வாழ்க வளமுடன்


குருவே சரணம்.


எல்லாம் வல்ல குருவருளின் திருவருளால் வாழ்க வளமுடன்.


தந்தை தாய் ஈருயிர் ஒன்று சேர்ந்து உடலாகி வந்திருக்கும் நாம் பிறவிப்பயனை அடைவதற்கு இருக்கும் ஒரே உதவியாம் குருவின் காலடியிலே மனதை கரைத்து கரைத்து மெய்ஞ்ஞானத்திலே ஆழ்ந்து விடவேண்டும்.

பிறந்து சில மாதம் வரை குழந்தை தவழ்வது, நடப்பது, மழலை மொழியில் சிறிது மொழிப்பிழையுடன் பேசுவது என்று இருக்கிற போது பெற்றோர்கள் குழந்தையை கடிந்து கொள்வது இல்லை. மாறாக மழலையின் நடவடிக்கையிலே மகிழ்கின்றனர்.

எப்போது குழந்தை வளர்ந்து சரியாக நடக்க ஆரம்பிக்க இருக்கிறதோ அப்போதிலிருந்து, குழந்தை வளர்ந்து அதன் தன்மையாக நாம் பழக்கிய விசயங்களே செயல்களாக வெளிவரும் போது, நல்ல விசயங்களாக இருப்பின் மகிழ்வதும், நல்ல விசயங்கள் இல்லாதவைகளை, அந்த குழந்தையின் தவறாகவும் நாம் ஒதுக்கி விடுகிறோம். இப்படித்தான் ஒவ்வோர் மனிதனும் இப்போது இருக்கிறோம்.

நமது நிலையினை ஏற்று நம்மை வழி நடத்த ஒருவர் தேவைப்படுகிறார். அவர் நமது முன் வினை, பின் வினைகளில் இருந்து நம்மை மீட்டு, மெய்ப்பொருளை நோக்கி நம்மை கொண்டு செல்கிறார்.

புராணத்திலே, வினாயகர் யானை முகத்துடனும் (ஞானக் கடவுளாகவும்) பரிணாமத்திலே மூத்தவனாகவும், ஆறறிவாய் படைக்கப்பட்ட முருகனுக்கு மூத்தவனாகவும்(அண்ணனாக, முன் பிறந்தவனாய்) இருக்கிறார்.

ஞானப்பழம் யாருக்கு என்ற போட்டி வந்த உடன்,யார் இந்த உலகத்தை மூன்று முறை வலம் வருகிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்ற விதியை கேட்டவுடன், முருகனானவன் தன் மனம் என்கிற மயில்வாகனத்திலே ஏறி உலகைச்சுற்றி வரக்கிளம்புகிறார். மனம் செயல்படாத, யானைமுகத்தோனோ, தாய் தந்தையாம் சிவசக்தியே என்று சரணாகதி அடைந்து மூன்று முறை தந்தை தாயை சுற்றி வந்து ஞானக்கனியை வெல்கிறார்.

எண்ணம் செயல்படாத ஒரு இடம் இருப்பின் அங்கே ஞானம் கிட்டும் என்ற அடையாளம் தான் யானைமுகத்தோனுக்கு ஞானம் என்கிற பழம் கிட்டுகிறது.

தன்னை அன்றி ஒரு பொருள் இருப்பின் அது தன் மனமே என்கிற தன்மை உணராது, மீண்டும் மனதை பயன்படுத்தி மயில் மீது ஏறி உலகையே சுற்றிய முருகனுக்கு வெற்றி கிட்டவில்லை.

எப்போது நமது மனதால் வெற்றிகிட்டவில்லையோ அந்த இடத்திலே உள்ள ஒரே வாய்ப்பாக, தந்தையும் தாயாகவும் இருக்கிற குருவிடம் சரணடைந்தால், அங்கே மனதை கரைத்து தன்னை நோக்கி முயலும் பிள்ளையை அள்ளி தன் தோளில் ஏற்றி, ஞானம் என்கிற இறை உணர்வைத் தர குருவானவர் இருக்கிறார். அவரிடம் எண்ணத்தை விட்டு விட்டு, விழிப்புடன் நிற்கப்பழகினால் குருவே சீடனுக்குத் தேவையான இறையருளை நிறைத்து விடுகிறார்.

முனைப்பு என்ற ஒன்று நமக்கு நிரந்தரமாக நிறைவைத் தராத போது, உடன் அதை விட்டுவிடுவது தான் நன்முனைப்பு. அதற்கு குரு அடி தொடர்வோம்.

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்... ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை என்ற வரியை, குருவின் மேல் பொருத்திப்பார்த்தால்..... அந்த கருணை நிலையாம் குருவின் முன் நமது முனைப்பு கசிந்து உருகிவிடும்.

முனைப்பு என்ற ஒன்று உண்மையில் நிரந்தரமாய் இருக்கிற ஒன்றா என்று கேள்வி கேட்டால் , தியானத்திலே முனைப்பு அறுந்து விழும். அங்கே மௌனம் நிலைக்கும். அந்த மௌனத்திலே பேதம் இல்லாது, குருவே சரணம் என்று சொல்லி அதனோடு ஒன்றாகும்.

மரணத்தை எதிர்பார்த்து பிறந்திருக்கும் நாம் தூக்கத்திலே இருந்து எழுந்தபிறகு தான் உடலுக்குள் இன்னமும் உயிர் இருக்கிறது என்ற அடக்கத்தை, இறையின் கருணையை எண்ணி மகிழவேண்டும்.

குருவின் நல்ல சீடன் என்பவன், குருவின் கருணையால், மரணத்தை மறக்காது எப்போதும் வரக்கோடியதே என்று அடக்கத்துடன் அடிக்கடி எதிர்பார்த்து இயல்பு.

தன்னை அறியச்சென்றால், மிஞ்சுவது மௌனம் ஒன்றே... அதுவே நிலைக்கும் என்ற அடக்க பேறு கிட்டிவிட்டால் இந்தப் பிறப்பிலே சாதிக்கவேண்டியது என்று சீடனுக்கு எதுவுமிருக்காது.


-மனம் என்ற ஒன்றைக்கடந்து நிற்கும் ஒரு மூத்த பிள்ளையாய், அப்பனிடம் நிற்போம்.... ஞானக்கனி நமக்குத் தருவது குருவின் கடமை.

வினாயகனுக்கு உள்ள முக்கியத்துவத்திற்க்குக் காரணம்... வினாயகனின் அடையாளமாம், மனத்தினைக் கடந்த நிலையே.. குருவிடம் தன் மனதை ஒன்றியவருக்கே தான் இறை அறம் பெறும் பாக்கியம்.

நன்றி : சுந்தரராஜன்

No comments: