Thursday, March 10, 2011

இயற்கை விதி

இயற்கை விதியறிந்து ஏற்று மதித்து ஆற்றும் முயற்சி வெற்றி பெற
முழு அமைதி என்றும் இன்பம்

குரு வாழ்க! குருவே துணை!!

இயற்கை விதி என்பது குறித்த குறிப்பு நன்று, அதன் விளக்கம் இதோ:

இயற்கை விதி ஒழுகல் என்பது இரு நிலைகளில் ஆற்ற வல்லது.

1. இயற்கை விதி உணர்ந்து மதித்தல்: இந்த நிலையிலே, சனிக் கிரகமா, அதன் ஆற்றல் நம் சீவ காந்த ஆற்றலை விட பலமடங்கு பெரிதே, என்று எந்த ஓர் இயற்கைச் சக்தியையும் அதன் வலிவையும் உணர்தல்.

2. இயற்கையோடு இணக்கம்: சனிக்கிரகமானால் என்ன, வியாழக் கிரகமானால் என்ன நடப்பது தானே நடக்கும், என்றெண்ணி, அம்போ என்று தன்னையும், தன்னை நம்பியுள்ளோரையும் கைவிட்டுவிடாது, நம் பஞ்ச பூத நவக் கிரக உயிர்கலப்பு பயிற்சியில் விடா முயற்சி கொண்டு தேறி, பின் இயற்கையோடு இணங்கி, அதனால் வரும் நன்மைகள் கொண்டு, தனக்கும் தன்னை நம்பியுள்ளோருக்கும் நன்மையாய் விளைதல், ஆன்மீகத்தில் அடுத்த நிலை.

சிலர் புற மனம் கொண்டு, சனியின் வலிவைப் புறக்கணித்து பின் அதன் விளைவால் துன்புறுவார். சிலர் ஆன்மீகம் கொண்டு சனியின் வலிவுணர்ந்து, ஆனால், ஆன்மீகம் என்பது, நடப்பது தானே நடக்கும் என்றெண்ணும் ஒரு மனோ நிலை என்பது போல் பாவித்து, இயற்கை தரும் துன்பமனைத்தையும் ஏற்பதே நாம் ஆன்மீகக் கடமை என்பது போல் வாழ்வார்.

ஆன்மீகம், புற மனம் மட்டுமே தோற்றுவிக்கும் போலி வலிவும் இல்லை, இயற்கையின் துன்பமனைத்தையும் தனக்கே தந்ததாய் எண்ணி ஏற்கும் புறமன மனோநிலையும் இல்லை. ஆழ் மனத்தில் பெறும் வலிவு, தன்முனைப்பற்றதாய், இயற்கையின் தன்மையோடு இணங்கியதாய், அலைச் சுழல் மிகாததாய் புறமனத்தில் வெளிப்படுதலே, ஆன்ம பலம். மன அலைச் சுழல் குறைப்போர், மட்டுமே உணர்வார், மனமின்மை நாளும் நாடும் பயிற்சியதுவில், மனோ பலமும் கூடவே இலவசமாய்க் கிட்டுமென்பதை.

வாழ்க வளமுடன்.

No comments: