Sunday, March 13, 2011

கிருஷ்ணம்

கிருஷ்ணம் என்பது வியாசரின் பார்வையில் அறிவு. நாம் ஒரு வெளி நாட்டில்
கார் ஓட்டுகின்றோம். ஒரு இடம் சென்று சரியான நேரத்தில் சேர 'மேப்' என்ற
ஒன்றை பயன் படுத்துகின்றோம். அதைப் பயன் படுத்தி சரியான நேரத்தில் நம்மை
சேர்க்க வல்ல ஒரு நபரை திறமைசாலி என்று இறங்கும் போது புகழ்கின்றோம்.
சீவ வித்துக் குழம்பில் விந்து என்னும் தலை - வால் கொண்ட ஒரு நபர்
இருக்கின்றார். அவர் இனப் பெருக்கம் என்னும் இயற்கை நிகழ்வில், எந்த வித
'மேப்' இல்லாது சரியாய் நீந்திச் சென்று, முட்டை என்னும் வீட்டை அடைந்து,
அதைத் திறந்து, நமது பண்புகள் அனைத்தையும் மரபணு என்னும் வடிவில் அங்கே
வைத்து விடுகின்றார். அவர் திறமைசாலி தானே? அவர் திறமைக்குப் பெயர்
'பேரறிவு', நமக்கு கார் ஓட்டியவர் காட்டுவது 'சிற்றறிவு'.

அந்தப் பேரறிவே கிருஷ்ணம். அந்தப் பேரறிவின் வெளிப்பாடுகளே மனம், உடல்,
உயிர் எல்லாம். விதையின் வெளிப்பாடே தண்டு, பூ, காய் எல்லாம். ஒரு தாவரம்
நான் என் விதை மட்டுமே, என் காய், கனி எல்லாம் நான் இல்லை, என்று
சொன்னால் எப்படி இருக்குமோ, அது போன்றே ஒரு மனிதன் என் ஆன்மா (அறிவு)
மட்டுமே நான், என் மனம், உடல், உயிர் எல்லாம் நான் இல்லை என்று
சொல்வதுவும். ஆன்மாவும் நீயே, அதன் வெளிப்பாடுகளான உடல் - உயிர் - மனம்,
இவையனைத்தும் நீயே.

ஆனால் கிருஷ்ணம், என்பது, சுத்த வெளி என்ற ஒன்றை மட்டுமே குறிப்பதனால்,
அது அறிவு என்ற ஒன்றை மட்டுமே ஆன்மீகத்தில் குறிக்கின்றது. அதனால் தான்
நம் மனத்தில் எழும் அலையாகிய புலன் உணர்வு கிருஷ்ணம் இல்லை, என்று
வியாசர் சொல்ல முனைகின்றார். அவ்வளவே.

No comments: