Thursday, March 10, 2011

தொடக்கமும் முடிவும் குருவே

தொடக்கமும் முடிவும் குருவே...
குருவே சரணம்.


தான் தனது என்ற எண்ண எழுச்சி ஊக்கும்
தன்முனைப்பை மாற்ற தவம் பல நாள் செய்தேன்.
நான் அவனாய் அறிவினது முடிவில் கண்டேன்
ஊன் உடலே நான் என்று குறுகி நிற்போர்
உரைக்கும் வசைமாரி எல்லாம் உயர்வாழ்த்தாச்சு...

என்றார் நமது குருபிரான்.

ஒருவருடைய தேவை என்று பல இருக்கலாம். சீடன் என்பவனுடைய நிலை என்பது தவ நிலையிலே முன் பின் குருவருளை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கலாம்.


அகண்ட பேரண்டமும் அணுவுமான
ஆண்டவனோடெனை இணைத்த அடக்கப்பேற்றால்
அகண்ட பேராதாரத் திருப்பியக்கம்
அனைத்து விளைவும் எனது அறிவுக்கெட்ட
அகண்ட நிலையிலே தானாய் அறிவாய் ஆற்றி
ஆங்காங்கே அதுவதுவாய் விளைவு வேறாய்
அகண்டத்தும் கண்டத்தும் அடங்கியுள்ள
அத்தனை மறை பொருளும் விளங்கக்கண்டேன்

உடலினில் உள்ள ஒளி ஒலியைக்காண
உனக்கு இன்பமிகுமெனினும் அதற்கு மேலாய்த்
தொடர்புகொண்டு பல பொருளில் கண்டுவிட்டோம்
சுகம் என்றதனைத்தும் சலிப்புங்கொண்டோம்

கடவுள் நீ. இவையனைத்தும அறிந்து தாண்டி
கருத்தொடுங்கிக்காண்பவனே தனிக்கு மட்டும்
திடமடைந்து அறிவு லயமாகி நிற்கத்
தெளிவடையாய் கற்பனை போம் தேவை முற்றும்.

உள் முனைப்பை உள்ளடக்கி உயிரில் பாய்ச்சி
உட்பொருளே அறிவென்று அது நீயென்று
சின்மயமாய் அமைதி பெற சிறந்த ஆற்றல்
சிந்தனையை ஊக்குவிக்கும் இறை உணர்வாய்

தன்முனைப்பு கரைந்து விடும்
அறுகுணங்கள் தனிந்து நற்குணங்களாய் மாறும்
முன்செய்த வினை அகலும் பின்செயல்கள்
பிழையின்றி அறமாம் பேரின்பம் கிட்டும்.


குருவின் வரிகள்... அப்பப்பா... கண் என்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் குருவென்ற அருளிடம் தன்முனைப்பினைக் கரைத்து நிற்பதும்...

அகண்ட பேரண்டமும் அணுவுமான ஆண்டவனோடெனை
இணைத்த அடக்கப்பேற்றால்...

என்ற இந்த வரியில், அடக்கப்பேற்றால் என்று சொல்வதை கவனித்து பணிய வேண்டும். தன்னைக் கரைத்து இறையோடு கலப்பது "அடக்கப்பேறு" என்கிறார். அந்த பேறு பெற்றவனாய் சீடன் இருத்தல் மட்டுமே தான் சிறப்பு.

இந்த முன்னேற்றத்திலே, கடவுள் நீ இவை அனைத்தும் அறிந்து தாண்டி, கருத்தொடுங்கி காண்பவன் தனிக்கும் அளவிலே, திடமடைந்து அறிவு லயமாகி இறையோடு கலந்து நிற்க முடிந்த அளவிலே தான் தெளிவடைவாய் கற்பனை போகும்... தேவை முற்றும் என்றும் சொல்கிறார்.

அதுவரை, கற்பனையும், தேவையும் இருக்கவே செய்யும். இது தன்முனைப்பின் அடையாளங்கள்.

தான் தனது என்ற எண்ண எழுச்சி ஊக்கும் தன்முனைப்பை மாற்ற தவம் பலநாள் செய்தேன்...

என்கிறவரியில், தவம் பல நாள் செய்தேன் என்று சொல்லும் போது முனைப்பை ஒடுக்கிச்சொல்கிறார் பாருங்கள்..

இதே வரியை, பலநாள் தவம் செய்தேன் என்று சொன்னால் அதுவே முனைப்பு முந்தி நிற்பதை புரிந்துகொள்ளலாம்.


முனைப்பு இருக்குமானால், குரு அங்கே இருக்கமாட்டார்.
குரு உள்ளே இருப்பாரானால், முனைப்பு அங்கே இருக்கமாட்டாது.

குருவே அமர்ந்தார்.
குருவே இருப்பை நினைந்தார்...
குருவே உணர்ந்தார்...
குருவே கலந்தார்...
குருவே இறையோடு ஒன்றானார்...
இருப்('பு')பது குருவே...

வேறு எதுவும் இல்லை. வேறு நிகழ்ந்ததன் சுவடும் இல்லை..
தொடக்கமும் முடிவும் குருவே. ஆதியும் அனாதியும் குருவே.
குருவன்றி எதுவுமில்லை.. குருவுக்கப்பாலும் எதுவுமில்லை.


நன்றி : சுந்தரராஜன்

No comments: