Thursday, March 10, 2011

குரு சீடன் உறவு

குருவே சரணம்...


வாழ்விலே நமது சூழல் மற்றும் பழகும் இயல்புக்கு ஏற்றார் போலவே நம்மை சுற்றி உள்ளவர்கள் அமைவர்.

இதிலே, தியானத்திலே ஈடுபடுவோர்கள், பொது இடத்திலே தியானத்திலே ஈடுபடாதவர்களோடு இருக்கும் பட்சத்திலே, மிகவும் எச்சரிக்கையோடு சுற்றி உள்ளவர்கள் மன அலையை கணக்கிலே கொண்டு, அதற்கேற்றார் போலவே தியானம் சார்ந்த விசயங்கள் பேசுவதோ, கலந்துகொள்ளுவதோ வைத்துக்கொள்ளுவது நல்லது.

நாம் இந்த சமுதாயத்திலே எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்கிறோம்... எப்போதும் ஒரு விசயத்திற்க்கு, மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அருகிலேயே இருப்பார்கள்.

இதிலே குரு என்ற அருளுடன், மனோ அலைத்தொடர்பிலே இருக்க முயற்சித்தலும், அதை எப்படி முறைப்படுத்துகிற போது ஆழ்ந்த நிலையை வெளியிலே தெரியாதது போல வைத்துக்கொள்ளுதல் என்பது நீண்ட காலத்திற்கு தியானத்திலே சாதனை புரிய உதவும்.

குரு சீடர் என்ற பந்தம் ஏற்படும் அளவுக்கு, உலகாய விசயங்களிலே ஒரு தெளிவோடு சீடன் மாற ஆரம்பிப்பது இயல்பே. ஆனால் சுற்றி உள்ளவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். அப்போது வரும் விமர்சனங்களை, குருவைக்கொண்டு சமாளிக்க கற்க வேண்டும். குரு என்ற பற்று ஏற்பட்ட உடன், கொஞ்ச கொஞ்சம் நமது தியான வாழ்விற்குத் தேவைப்படாத, எந்த பதிவுகளும், தேவையில்லாத நட்புகள் வரை கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்... நட்பு விலகும் போது, நாம் மீண்டும் உடல் என்ற வட்டத்திலே நின்று விட்டால், அங்கே துயரம் ஏற்பட்டுவிடும்... அது சரியாக நீண்ட நாளாகலாம்.

குரு என்ற நட்பு மட்டும் தான் எப்போதும், பிறப்பின் பயனை அடைவதற்கு உதவும் என்பது நாம் அடிக்கடி மனதிலே சொல்லிக்கொள்ளவேண்டியது...

இரு மனிதர்கள், ஒத்த வயது என்றால், ஒரே மாதிரியான சட்டை போடுவது, ஒன்றாக வெளி உலகத்திலே இருப்பது என்று இருந்தாலும், அவரவர் அமைப்பிற்கு ஏற்ப, யாரோ ஒருவர் விட்டுக்கொடுப்பிலே இருப்பார். அவர் பொறுமை இழந்து விடும் அளவுக்கு மற்றவர் காரியம் செய்து விட்டால், சேர்த்து வைத்து மனதிலே வேற்றுமையும், வெளியிலே வெறுப்பும் வந்து நட்பு உடைந்து விடும்.

ஆனால், குரு சீடர் என்ற மனோ அலையிலே உருவான பந்தமானது, குரு நிரந்தரமாய் மாறாத ஆனந்தத்திலே, அமைதியிலே, எதையும் எதிர்பார்க்காத நிலையிலே இருப்பதால், சீடன் அமைதியை விட்டு விலகினாலும் திரும்ப நல்வழியிலே செல்ல குருவிடம் வந்தவுடன் முன்னேற்றமடைகிறார்.

குரு சீடர் என்ற உறவு என்பது மட்டுமே ஒருவருக்குப்போதுமானதாகவே இருக்கிறது..

ஏனெனில், நாம் நட்பு கொள்ளும் நபர் முதிர்ச்சிபெறாதவராக இருக்கும் போது, நட்பிலே விரிசலும், மன உளைச்சலும் நிச்சயமானதே..

சீடன் என்பவர், நிலையான ஒன்றை வேண்டியதால் தான் குரு என்ற ஒரு பந்தத்தினைப் பெறுகிறார். ஏனெனில், மனிதனின் மனம் என்பது ஒரே நிலையில் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.

வெளியிலே காட்டிக்கொள்ள வந்த எந்த ஒரு நட்பும் கூட ஒருவருக்கு உள்ளுக்குள் ஏமாற்றத்தோடு போடும் வேஷமாகவே இருக்கும்.

நிலையான குருவிடம் சீடன் சரணடைந்து விட்டால், மற்ற எதிலும் விழிப்புடன் கூடிய அணுகுமுறை ஏற்பட்டு விடும்... அதில் சில இடங்களில் தோல்வி கண்டாலும், எதிர்பார்ப்பு இல்லாத மனோ நிலையால் ஏமாற்றம் மிஞ்சாது இருக்கும். இந்த நட்பு கொள்ளும் போதே நண்பர் எப்படி நடந்து கொள்வார் என்கிற எச்சரிக்கை உணர்வு வந்துகொண்டே இருக்கும். அதைப்பிடித்துக்கொண்டு பழகினால், ஏமாற்றம் மிஞ்சாது இருக்கும்..


குருவிடம் உயர் நிலையிலே சரணடைந்தவர்கள், இறை என்ற அறத்திலே வாழும் கட்டாயம் இருக்கும். இதனால், சீடன் வாழும் போது, குருவை விட்டு எங்கே ஒரு அடி எடுத்து வைத்தாலும், உடனே குருவானவர் சீடனை ஒரு அடி அடித்து, தன்னிடம் வரவழைப்பார்.. மீறி துணிந்து அந்த நட்போடு செல்லும் போது, சென்ற வழி சிறிது தூரம் வரை, சீடன் ஏமாற்றத்தோடு ஏற்றுக்கொண்டு போனாலும், அந்த பிரிவு என்று நிலையை ஏற்படும் போது, பழக்க அறிவால் சீடன் குருவிடம் உடனே வந்து விடுவார்... ஆனாலும், எவ்வளவு தூரம் விலகினோமோ அவ்வளவு தூரம் விளைவை குரு எடுத்துக் காண்பித்து, செயல் விளைவை புரிய வைப்பார். வலிக்கும்.. ஆனால் குருவோடு இருப்பதால் மனவலிமை இருக்கும்.

இப்போது மீண்டும் குருவோடு சேர்ந்து விடுவார்.. குருவானவர் சீடனின் தன்மை தெரிந்தும் எதற்காக துன்பப்பட விடுகிறார் எனில், தன் பிள்ளைக்கு அனுபவம் என்பது ஏற்படுத்தவே தான். இதிலே எமக்கு அறிவில்லை என்று சீடர் சொல்லக்கூடாது என்று குருவே அனுமதிப்பார். அனைத்தும் நல்லதற்கே.

இதற்குத் தான் ரமணர் சொல்வாரே..

நீர்க்குடத்தை தலையில் சுமக்கும் பெண்கள், ஊர்க்கதையை அளவளாவினாலும், பகுதி கவனமானது குடத்திருந்து நீர் சிந்தவே கூடாது என்று இருப்பதைப்போல,

குருவிடம் தொடர்ந்து அணுகும் சீடனை, குருவும் விட்டு விலகவே மாட்டார். நிலையான ஒன்று குருவே. மற்ற எதுவும் இல்லை என்று ஒடுங்க வேண்டும்.

நாம் வாழ்விலே என்னவாகவும் இருக்கலாம். ஆனால் உள்ளே இருப்பது குரு என்ற ஒன்றே என்று இருந்தால், வாழ்வே சிவமயம்.

குரு என்ற பற்றின் ஆழம் அதிகரிக்கும் போது, தனியாக ஆக்கப்பட்டதாக ஒரு சூழல் வரும். அப்போது எளிதாக, குருவைப் பிடிக்க முடியும். ஏனெனில், வேறு எந்த புறப்பொருளும்(பட்டம் பதவி, கௌரவம் என) அப்போது தேவை இல்லை என்றாகி இருக்கும்.

எந்த ஒரு நிலையானதோ, அதை நோக்கிச் செல்வதே புத்திசாலித்தனம். செல்லும் வழி சீடனுக்கு கடினமாகத்தோன்றலாம். ஆனால் அந்த வலிகள் தாங்கிக் கொள்ளக்கூடியவைகளாகவும், முடிவிலே ஆனந்த நிலையாகவும் ஆகி விடும்.

குருவே சரணம்.
நன்றி : சுந்தரராஜன்

No comments: