Thursday, March 10, 2011

முனைப்பற்ற நிலை

முனைப்பற்ற நிலை...
வாழ்க வளமுடன்


குருவே சரணம்.


அத்வைதம் நமது தத்துவம் என்றால், த்வைதத்தை நாம் மறுப்பதாக அர்த்தமல்ல... அத்வைதம் தான் என்று சொல்வதற்க்குக் கூட எந்த முனைப்பும் இங்கே எஞ்சி இருக்கவில்லை. ஏனெனிலே மௌனமே இருக்கிறது அங்கே...

ரமணர் சொல்வார் : ஆன்ம நிலையை உணரச்செல்லும் வழியில் த்வைதமும், ஆன்ம நிலையை அடையும் போது அத்வைதமும் என்று சொல்லுவதும் ஒருவிதத்திலே பொருத்தமல்ல ஏனெனில், ஒருவர் த்வைத நிலையிலே இருந்து முயற்சிக்கும் போது கூட, ஆன்ம நிலைஅப்படியே தான் இருந்திருக்கிறது.

எப்போதாவது, மௌன நிலையானது இயங்காமல் இருக்கிறது என்று எடுத்துக்காட்ட எவராலும் முடியுமா?

மனதைக்கொண்டு எவராலும் இதை செய்யமுடியாத காரியமாகவே இருக்கிறது.


எது நிலையானது என்று நோக்கிப்பார்க்கும் போது, இறையும் அதைப்பார்ப்போனும் பிரிந்து நிற்பதாகப் படுகிறது.. த்வைதம் என்பது தியானிக்காத போது பணிவு நிலைக்காக, அத்தத்துவத்தை சொன்னாலும், தியானத்திலே அனுபவிப்பவனைக்கடந்தே தான் ஆகவேண்டிய உந்துதல் இருக்கிறது. ஏனெனில், ஆன்ம நிலையின்(இறை நிலையின்) முன் அகந்தை என்பதை விடவே தான் அங்கே சூழல் இருக்கிறது.

த்வைதம் என்று சொல்வது பணிதலுக்குப்பயன்பட்டாலும் கூட, தியானத்திலே அது ஒரு விதத்திலே இறையிடம் இருந்து விலகி நிற்பதன் அடையாளமாகவே இருக்கிறது. எப்போது அகந்தையினை அங்கே விட்டு ஆன்ம நிலை என்ற வாகனத்தினைப்பற்றுகிறோமோ அப்போதே, சாட்சியான அகந்தை ஒடுங்க ஆரம்பிக்கிறது. நிலையானது சுத்தவெளியாகிய பேரறிவே என்று அதனோடு கலந்து ஒன்றி ஒன்றாகி விடுகிறது.

இந்த நிலையிலே, தன்னுடைய இருப்பு இறை நிலையே என்றானபிறகு, தன்னை அன்றி, இறை நிலை அன்றி ஒரு பொருளும் இல்லை என்று அறிவிலே தெளிவு பெறும் போது, தியானித்தாரே அவருக்கு தன் உடல், உலகம், சொந்தம் என்ற எல்லாம் எண்ணமே என்று தெளிகிறது. அதுவே தான் முனைப்பற்ற நிலை....

இறைவெளியோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.

என்கிற குருவின் வரிகள் இங்கே பொருந்திவரும்.


கேள்விகள் படிப்பறிவினால் கேட்கப்பட்டாலும் ஆன்ம நிலையிலே பதில் சொல்லப்படும் போது, கேட்டவர் தன் நிலையிலே இருந்து இறங்கி, தான் ஆரம்ப நிலை சாதகர் என்று அப்போது ஒத்துக்கொள்வார். இருப்பினும், கேள்வி கேட்டபோது இருந்த முனைப்பு, பதில் கிடைத்த போது இல்லாது போவது, இறை விளக்கத்திலே சாதாரணமாக நிகழ்வதே...

No comments: