Saturday, March 5, 2011

ஆன்மீகச் சொற்களும், செம்மொழி மூலங்களும்

வாழ்க வளமுடன். சில ஆன்மீகச் சொற்களும், அவைகளின் செம்மொழி மூலங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

1. ஞானம் [செம்மொழி மூலம் - gnos, gnan]:

'gnos' எனும் கிரேக்க லட்டின் மொழிச் சொல்லும் 'gnan' எனும் தமிழ் மற்றும் சமசுகிருதச் சொல்லும் ஒரே மூல மொழியினின்று வந்தவை தாம் என்கின்றது மொழியியல். மூல மொழி தமிழ் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் கிரேக்க வணிகர்கள் இங்கு வந்து தங்கியிருந்ததற்கான ஆதாரங்களும், பதாஞ்சலி போன்ற சமசுகிருத சித்தர்கள், இராமேசுவரம் போன்ற இடங்களில் இருந்ததற்கான ஆதாரங்களும் தமிழ் வரலாற்றில் மட்டுமே உண்டு. வட நாட்டு தேவ நாகரி [தோராயமாக சமசுகிருதம்] இலக்கியங்களில் கிரேக்கர்களைப் பற்றிய செய்திகள் கிடையாது, என்கின்றார்கள் தமிழ் வல்லுனர்கள். பழங்கால உலகில் அரபிக்கடலே, வங்காள விரிகுடாவே கிடையாது [லெமூரியாக் கண்ட அமைப்பு], மேலும் ரோமப் பேரரசு இன்றைய துபாய் வரை கிருத்துவுக்கு முன்பான காலத்தில் விரிந்திருந்தது என்பன போன்ற சொற்ப ஆதாரங்களும் கிரேக்கர்கள் தென் கோடி இந்தியாவரை வந்திருக்க அதிகச் சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை எனும் எண்ணத்தை வலுப்படுத்துவதாகவே அமைகின்றது. (கிரேக்கப் பேரரசு கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரையிலான தொலைவில் தான் இருந்திருக்க வேண்டும் என்பன போன்ற கூற்றுகள்)

gnos என்ற கிரேக்கச்சொல் ஞானம் எனும் பொருளுடையது,பின்னாளில் இது knowledge, diagnosis போன்ற பல ஆங்கிலச் சொற்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. gnan எனும் தமிழ் மூலச்சொல்லும் ஞானம், ஞனோபதேசம், ஞானி எனும் பல சொற்களில் இன்றும் வழக்கில் உள்ளது.
அணு - atom: [செம்மொழி மூலமாக கருதப்படுவன: அ+நுண்; a+tomo]

tomo என்றால் கிரேக்கத்தில் பிளக்கப்படுதல் என்று பொருள். a எனும் எதிர்மறை எச்சம், பிளக்க இயலா எனும் பொருளை அச்சொல்லுக்குத் தருகின்றது. அ எனும் தமிழ் எதிர்மறை எச்சமும் இல்லா, இயலா எனும் பொருள் கொண்டதே. எடுத்துக்காட்டாக துவைதம் எனும் சொல்லுக்கு முன்பாக அ சேர்த்து அ(த்)+துவைதம் என்று மாற்றும் போது 'பலகடவுள் இல்லாமை' அதாவ்து "ஒருகடவுள்" எனும் பொருள் தர வல்லது.

அணு எனும் தமிழ்சொல் அ + நுண் என்று பார்க்கப்பட வல்லது. அதாவது அணுவை விட நுண்மையான ஒரு பொருள் இல்லாமை என்பதே அ + நுண் எனும் சொல்லின் பொருளாகும்.

a [இயலா]+tome[பிளக்க] = atom [பிளக்க இயலாத அடிப்படைத் துகள்]

அ [இல்லா]+ நுண் [நுண்ணிய] = anu [அதைவிட நுண்ணிய துகள் இல்லாமை]

சமசுகிருத மொழியில் அணு எனும் சொல்லுக்கு etymology [பிரித்துப் பொருளறிதல்] கிடையாது, என்கின்றார்கள். எனினும் தமிழில் அணுவை அ+நுண் என்று etymology வாயிலாக அணுக இயலுகின்றது.
கிரேக்கம்: ஈதர் - அடிப்படை பூதம்
தமிழ் மற்றும் தேவ நாகரி: விண் - அடிப்படைத்துகள் [நிலம் நீர் காற்று நெருப்பு இவையாவும் இதனின்று பிறந்தவை]
தமிழ் மற்றும் தேவ நாகரி: பரம அணு - பரம் [அப்பாற்பட்ட] + அணு, அதாவது, அணுவுக்கும் அப்பாற்பட்ட துகள்.

விண் --- ஈதர் .....பரலோகத்து காற்று பொருத்தமாக இருக்கிறது .முன்பொருமுறை நீங்கள் குறிப்பிட்ட காந்த கரைசல் வார்த்தையை போல் இவ்வார்த்தையும் ஆன்மீக உணர்வை மேலோங்க செய்கிறது..
கிரேக்கம்: Bio = Life [உயிர்]
தமிழ்: உயிர் = உ(ள்) + இரு (ப்பு) = உயிரு [திரிந்து பின்] உயிர்
சமசுகிருதம் மற்றும் தமிழ்: ஜீவ / சீவ = உயிர்

பரண் எனும் தமிழ்ச் சொல் உயரேயுள்ள பொருள்வைப்பிடம் என்று பொருள்படும். இச்சொல் 'பரம்' எனும் சொல் மூலத்திலிருந்து வந்தது என்று கருதப்படுகின்றது. ஆக பரம் என்றால் தொன்தமிழிலில் 'உயரே' என்று பொருள். கிரேக்கத்திலும் இந்த உயரம் தான் கடவுளைக் குறிக்கப் பயன்படுகின்றது. உயரே எனும் பொருளுடைய பகுப்புச்சொல் 'super(e)' - upper என்பதாகும். இறைவனைக் குறிக்க அவர்களும் 'supreme' [மேலானவன், உயரே உள்ளவன்] எனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றார்கள். நாமும் பரம் [மேலானது, உயரே இருப்பது] எனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றோம். தமிழில் இன்னோர் சொல்லும் உண்டு. அது பராபரம் என்பதே. பரம் + அ + பரம், அதாவது மேலானதற்கெல்லாம் மேலானது என்று பொருள் தரும் இச்சொல். சமசுகிருதமும் இந்த பரம், மற்றும் பராபரம் எனும் சொற்களைக் கொண்டிருப்பது இவ்விரு மொழிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதற்குண்டான சான்றாகும்.

அடுத்து நாம் ஆராயவிருக்கும் தமிழ்ச்சொல் நம் மஹானுக்கு மிகவும் பிடித்தது. 'நான்' எனும் பொருளுடைய சொல்லே பல மொழிகளிலும் கர்வம் எனும் குணத்தை வரையறுக்கப் பயன்பட்டிருக்கின்றது. தங்களுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடிய சில பகுப்புச்சொற்கள் [etymological roots] இங்கே.

தமிழ்:

1. தன்முனைப்பு = தன் + முனைப்பு
2. அகம்பாவம் = அகம் + பாவம் - தன்முனைப்புடையோனுக்கு அகமெல்லாம் பாவமாகும் என்று பொருள் படும்.
3. ஆணவம் - ஆள் + அவம் - அவம் என்பது எதிர்மறை விகுதி, ஆள்தல் எனும் பண்போடு எதிர்மறை விகுதி இணைக்கப்பட்டுள்ளது.

சமசுகிருதம்:
அஹம்காரா = அகம் + கண்மம் - தன்முனைப்புடையோனுக்கு அகமெல்லாம் பாவமாகும் என்று பொருள் படும்.

கிரேக்கம்:

egiocentric- ego + center + ism - ego என்றால் கிரேக்கத்தில் I [நான்] என்று பொருள் படும். centric என்றால் மையம் என்று பொருள் படும். தானே மையம் என்றெண்ணல் என்று தொகுக்கும் போது பொருள்படும்.
Space -விண்வெளி / பரவெளி:

வெளி என்று சொல்லப்படுவது ' (நிரப்பப்படாத) இடம்' எனும் பொருளைத்தான் இன்றைய நாள் வரை வழக்குத்தமிழில்கூடத் தந்துகொண்டிருக்கின்றது. Spatium எனும் கிரேக்கச்சொல்லும் ' காலி இடம்' எனும் பொருளுடையது தான். எப்படி சொல்லி வைத்தாற் போன்று இரு கலாச்சாரங்களுமே 'காலி இடம்' எனும் பொருளுடைய சொல்லையே வானத்துக்குச் சூட்டினார்கள், என்பது வியப்பே. எனினும் தமிழ்க்கலாச்சாரம், தன் அறிவை சற்றே இந்த வெளி எனும் சொல்லோடு இணைகின்றது. 'விண்' எனும் பூதம் தமிழிலக்கியங்களில் அறியப்பட்டிருந்தது என்று நாம் கண்டோம்.ஆகாயம் முழுவதுமே இந்த விண் எனும் பூதத்தால் ஆனது தான் என்று உணர்த்த தமிழர்கள் விண் + வெளி = விண்வெளி எனும் சொல்லையே ஆகாயத்தைக் குறிக்கப் பயன்படுத்தினர். மேலும் பரண் எனும் தமிழ் வழக்குச் சொல்லில் புதைந்துள்ள பரம் எனும் மூலச்சொல் 'மேலான [உயரமான] இடம்' எனும் பொருளுடையது என்று கண்டோம். பரவெளி என்று சொல்லும் போது 'உயரத்தில் உள்ள வெளி' எனும் பொருளும் 'மேலான - அப்பாற்பட்ட வெளி' எனும் பொருளும் தமிழில் உணர்த்தப்படுகின்றன. சமசுகிருதத்தில் வெளி எனும் சொல்லுக்கு இணையான சொல் இருப்பதாகத் தெரியவில்லை, எனினும் ஆகாயம் - ஆகாஷ் எனும் தமிழ்ச் சமசுகிருதச் சொற்கள் ஒன்றோடொன்று தொடர்புடையனவே, விண்வெளி எனும் பொருள் தருபவனவே.

'பரவெளி':

தமிழ் பண்பாடு, இலக்கணம் இவையிரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. எடுத்துக்காட்டாக ஒருவரை நோக்கி அவர் வருகின்றார் என்று தான் சொல்ல முடியுமேயன்றி அது வருகின்றது, என்று சொல்ல இயலாது. தமிழிலக்கணத்தில் உயர்திணையிலிருந்து அஃறிணைக்குத் தாவினால், பண்பாடும் மரியாதையின்மை நோக்கித் தாவி விடும். இப்படி இலக்கணமும் பண்பாடும் ஒருங்கே நிற்கும் நம் தொன்கலச்சாரத்திலே கடவுளையே அஃறிணைச் சொல் கொண்டு தான் குறித்தாக வேண்டும் எனும் நிலை வந்தால்? தயங்கவேயில்லை தமிழினம். He [அவன்], She [அவள்], It [அது] என்ற மூன்றிலே It [அது] என்பது பொருந்தினால் கடவுளையும் It கொண்டே தான் அழைத்தது நம் முன்னோர்களின் அறிவு. உள்ளுணர்ந்து உள்ளுணர்ந்து நின்ற நிலையில் இறை நிலை என்பது பரம், வெளி எனும் It நிலைப் பொருளாகவே தோன்றியது ஞானிகளுக்கு. விளைவாகத் தோன்றியதே இந்த அருமையான சொல்: 'பரம்பொருள்' - 'பரவவெளி'. அதாவது பரத்திலே [உயரத்திலே] உள்ள ஓர் பொருள், வெளி. இந்த குறியீட்டின் படி தமிழிலக்கணத்தில் கடவுள் அஃறிணை தான்.

இன்றைக்கும் கிருத்துவம் முதலான எந்த மத நூலை எடுத்துப்பார்த்தாலும் கடவுள் என்பவர் கர்த்தர், அல்லா, ஜெஹோவா எனும் He, She எனும் உயர்திணைச் சொல்களிலேதான் குறிக்கப்படுவார். கிரேக்கத்திலும் titan, apollo முதலான அனைத்துக் கடவுள் பெயர்களும் ஆண்பால், பெண்பால் குறியீடுகளைக் கொண்டவைகளே. கடவுளை அஃறிணையில் குறித்த முதல் கலாச்சாரம் தமிழ் தான். உண்மையை உள்ளுணர்வு உறுத்தியதால் அஃறிணையில் குறிக்கத் தயங்கவில்லை தமிழினம், என்பதே மெய். காலத்தால் இலக்கணத்துக்காக இந்த 'பரம்' எனும் சொல், பரம் + அன் எனும் ஒன்றாக மாற்றம் பெற்றது. அதாவது 'அன்' எனும் ஆண்பால் [உயர்திணை] விகுதி அங்கே இணக்கப்பட்டது. விளைவாக பரம் + அன் = பரமன் என்றானது. இந்தப் பரமன் தான் பாமரனுக்கும் தெரிந்த கடவுள் என்றானான்.

சுத்தவெளி - Chaos:

கிரேக்கத்திலே அரிஸ்டாட்டில் [350BC] காலத்துக்கு முன்பாகவே [pre-aristotle age] இந்த chaos எனும் கருத்து இருந்திருக்கின்றது. கேயோஸ் என்பது முதலில் விண்ணுகலமும் மண்ணுலகமும் ஒன்றாக இருந்ததாகவும் பின்னால், மண்ணுலகம் விண்ணுலகத்திலிருந்து பிரிந்து விட்டது என்றும் பொருள்படும். இன்றைய தத்துவ ஆசிரியர்கள் சிலர் இதை முதலில் பாழ்வெளி மட்டுமே இருந்தது, பின்னாளில் அதனின்று பிரபஞ்சம் உருவாயிற்று என்றும் பொருள்கொள்ளுகின்றார்கள். எனினும் பழங்கால கிரேக்க நூல்கள் இந்தத் தத்துவ இணைப்பிற்குண்டான ஆதாரங்களைச் சரிவர தரவில்லை என்பதே மெய். இந்தே கேயோஸ் தத்துவத்துக்குச் சொந்தக்காரராகக் கருதப்படுபவர் அரிஸ்டாட்டிலுக்கு சுமார் 250 வருடங்கள் முன்னால் வாழ்ந்த ஹேராக்லிட்டஸ் எனும் அறிஞர். இவர் தாம் 'logic' எனும் பழம்கிரேக்கச் சொல்லைத் தம் கருத்துக்களில் வெகுவாக வலியுறுத்தியவர். பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுக்கும் பின்னாலும் logic இருக்கவேண்டும் என்று கூறி அதைத்தேடியலைந்தவரும் இவரே. எனினும் இவரைப் பற்றி வெகுவாக அறியப்படவில்லை.

இந்த கேயோஸ் எனும் சொல்லோடு தொடர்புபடுத்தப்படும் 'சுத்தவெளி' எனும் சொல்லோ சுத்தம், வெளி எனும் இரு பகுப்புச் சொற்களை [etymological roots] உடையது. சுத்தம் எனும் பகுப்புச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது, வெளி என்பதோ இடம் [ஏதும் நிரப்பப்படாத] எனும் பொருளுடையது. அதாவது சுத்தவெளி என்று சொல்லும் போது அங்கே வெறும் பாழ் மட்டுமே இருந்தது, பொருளேதும் அங்கே அப்போது இல்லை என்று பொருள் படும். அங்கே பொருளில்லை, அது ஊமை போலிருந்தது, அதனின்று பொருள் பல வந்தன என்ற கருத்துகள் சமசுகிருதத்தில் ரிக் வேதம் 10:129 இலும் தமிழில் அகத்தியரது ஞானதீட்சை விதி 11:4 இலும் தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அகத்தியரது காலம், மற்றும் ரிக் வேதத்தின் காலம் இவ்விரண்டுமே ஹேராக்லிட்டஸ்ன் காலத்துக்கு முந்தயவை என்பது நாம் கற்றதே.
ப்ரம்மன்:

பரவுதல் எனும் தமிழ்ச் சொல்லை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இச்சொல்லில் வரும் 'பரவ' எனும் வினைச்சொல்மூலம் 'விரிதல்' 'படர்தல்' என்று பொருள்படும். உண்மையில் சமசுகிருதத்திலும் இதே வினைச்சொல் மூலம் தான் ப்ரஹ [brh] என்றால் 'விரிதல்' 'படர்தல்' என்று தான் பொருள்.'ஹ' எனும் வடமொழிச் சொல்லின் தமிழ் இணை சில நேரங்களில் 'வ' என்றும், மெய்யெழுத்தில் சொல் தொடங்க தமிழிலக்கணத்தில் இடமில்லாததால், 'ப்' எனும் மெய்யெழுத்து ஓர் உயிரோடு புணர்ந்து [எ.கா. 'அ', 'இ'] ப, பி என்றும் தமிழில் இருக்கும் என்றும் அறிவார் தமிழிலக்கண வல்லுனர்கள். இந்த 'பரவ' எனும் மூலச் சொல் தான் 'ப்ரம்மன்' என்பதின் மூலம்.

1. விரிதல், படர்தல் எனும் பொருளுடைய 'ப்ர' எனும் வினைச்சொல்மூலம் பெயர்ச்சொல்லாக மாற 'அம்' எனும் விகுதி இணைக்கப்பட்டு ப்ர + அம் = ப்ரம் என்றானது[எ.கா. பேரூந்து நிறுத்து + அம் = பேரூந்து நிறுத்தம்].

2. இந்த ப்ரம் எனும் பெயர்ச்சொல், மற்றோர் 'அன்' எனும் ஆண்பால் விகுதி இணைக்கப் பட்ட நிலையில் பிரம்மன் என்றானது [அன் எனும் உயர்திணை விகுதி பொருளின் மதிப்பு கருதி இலக்கணத்துக்காக இணைக்கப் படுவது].

ஆக தமிழ், சமசுகிருதம் எனும் இருமொழிகளிலுமே ப்ரம்மன் என்றால் விரிபவன், வளர்பவன் என்று பொருள். ஒன்றுமற்றதிலிருந்துதான் அனைத்துப் பொருளும் வந்தது என்றறிந்தோர் தானே ப்ரம்மன் என்று பெயர் வைக்கமுடியும்? அதையே தான் செய்தது தமிழ், தேவ நாகரிய கலாச்சாரங்கள்.

பரப்ப்ரம்மன்:

பரண் எனும் வழக்குச் சொல்லில் புதைந்துள்ள பரம் எனும் பகுப்புமூலம் [etymological root] உயரே, மேலே என்று பொருள்படும் என்றறிவோம். உயரே உள்ள ஒரு பொருள் பரவுகின்றது, விரிகின்றது என்று சொல்ல வேண்டுமாயின், அங்கே பரப்ப்ரம்மன் எனும் சொல்லை விடச் சிறந்த சொற்தேர்வு யாது? உயரே இருந்து விரிபவன் சுத்தவெளியே என்ற உண்மை அறியாது இத்தகைய பெயர்களை எப்படிச் சூட்ட இயலும்? தமிழ் சமசுகிருத ஞானிகளின் தெளிவு இனிதே விளங்குகின்றது நமக்கு இங்கே.

மேலும், கிரேக்கத்தில் இறை நிலை வளரும், விரியும் பொருளாகக் கருதப்படவில்லை. எனவே பிரமத்துக்கும், பரப்ப்ரமத்துக்கும் இணைச்சொல் அங்கு ஏதும் கிடையாது.

பேரண்டம், பேரியக்க மண்டலம், பிரம்மாண்டம் / Universe, Cosmos:

பேரண்டம்: அகன்ற [பொருள்: விரிவடைந்த] எனும் தமிழ்ச்சொல்லை ஆயும் போதும் அகன்றது + அம் = அகண்டம் என்று அறிந்து கொள்ள இயலுகின்றது. பெரும் + அகன்ற +அம் = பேரண்டம்.

பிரும்மாண்டம்: பிரும்மம் + அகண்டது + அம் = பிரும்மாண்டம்.
பிரும்மம் என்றால் வளரும், விரியும் ஓர் பொருள் என்று கண்டோம். '[ஒன்றுமற்ற ஒன்றிலிருந்து] வளர்ந்த விரிந்த ஓர் இடம்' என்பதே இதன் பொருள்.

பேரியக்க மண்டலம்: இதைப்பகுப்பது மிக எளிதானதே. பெரும் + இயக்கம் + [நிகழும்] + மண்டலம். அதாவது அளவில் எல்லை கட்டா இயக்கம் ஒழுங்கமைப்பாய் நிகழும் போது அது பேரியக்க மண்டலம்.

Cosmos: கிரேக்கம் தமிழினத்துக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை இச்சொல் மூலம் நாம் விளங்கிக்கொள்ளலாம். அகத்தியர் வாழ்ந்த காலத்திலேயே கிரேக்கமும் பேரியக்க மண்டலம் எனும் கருத்தை தனது சொற்களில் தருவித்திருந்தது. அரிஸ்டாட்டிலுக்கு 300 வருடங்கள் முன்னால் வாழ்ந்த பிதாகரஸ் எனும் கணிதவியல் அறிஞர் தான் இந்த cosmos எனும் சொல்லின் கிரேக்க கண்டுபிடிப்பாளர், இவர் தாம் ஒழுங்கமைப்பான இயக்கம் எனும் பொருளுடைய சொல்லான cos + mos ஐ கிரேக்கத்தில் வடிவமைத்தவர்.

Universe: இச்சொல் மிகப்பழமையான ஒன்றாய் கருதப்படுவது. கிரேக்கம் பழங்காலத்தில் geocentric அமைப்பு மீது நம்பிக்கை கொண்டிருந்தது [பூமியைச் சுற்றி பிரபஞ்சமனைத்தும் சுழன்றோடி வருகின்றன எனும் கருத்து]. இக்கருத்தை வெளிச்சொல்ல அவர்களுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது. அங்கே உருவானது தான் universe எனும் சொல், அதாவது uni + vort(ex) என்பது தான் பகுப்பு மூலங்கள், vortex எனும் சொல் சுழல் மையம் எனும் பொருளுடையது. என்பது uni ஒருங்கமைந்த எனும் பொருளுடையது. எனவே uni + ve(o)rse என்பது ஒருங்கமைந்த சுழல் அமைப்பு எனும் பொருள்படும்.
ஆதி, அனாதி / origin:

வெளி துகளாக ஆதல், துகள் அணுவாக ஆதல், அணு பேரியக்கமண்டலமாய் ஆதல், அணுக்கூட்டமே பஞ்சபூதமாய் ஆதல், பஞ்சபூதங்கள் கூடி உயிராய் ஆதல் என்று சொல்லும் போது, இந்த 'ஆதல்' எனும் சொல்லே 'காரண நிலை'யைக் [causative] குறிக்கப் பயன்படுகின்றது என்று உணர்ந்து கொள்ளலாம். எது ஒன்று 'ஆதல்' நிகழ்வை மேற்கொண்டதோ அதுவே ஆத(ல்) + இ = ஆதி. இ என்பது இங்கே பெண்பால் விகுதி. ஆதி எனும் சொல் பிரபஞ்சம் தோன்றக் காரணமாக இருந்த பொருளைக் [causative] குறிப்பது, அதாவது சுத்தவெளியே ஆதி.

ஆதி எனும் சொல்லுக்கு முன்னால் அன்,(அல், அ) போன்ற எதிர்மறைச் சொற்கள் இணைக்கப் படும் போது, அது அங்கே இல்லாமை எனும் பொருளைத் தருகின்றது. அதாவது, அன் + ஆதி = ஆதிக்கு ஆதி இல்லாமை என்று பொருள்படும். அதாவது எந்த ஒன்றை நாம் ஆதி [காரணப்பொருள்] என்று கொள்ளுகின்றோமோ அதற்க்கு ஆதி [காரணப்பொருள்] கிடையாது. எளிமையாக சுத்தவெளியின் தோற்றத்துக்கு காரணமாய் அமைந்த பொருளென்று ஏதும் இல்லை, என்பதே அனாதி என்பதின் பொருள்.

[குறிப்பு: அ எனும் சொல் எதிர்மறைப் பொருளைத் தருமென்பது தெளிவாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும், அது எவ்வாறு அன், அல் என்றெல்லாம் புணர்ந்து மாறுகின்றது என்பது ஆராய்ச்சிப்பகுதியே உதாரணம்: [**அன் + அவசியம் = அனாவசியம்; அல் + அது = அது இல்லாமையில் [or otherwise]; அத்துவைதம் = அ + துவைதம்].]

origos எனும் கிரேக்கச் சொல்லும் மிகப் பழமையானதே. அதன் பொருளும் காரணப்பொருள் என்பதே. எதிலிருந்து உருவாகின்றதோ[உரு + ஆதல்] அந்தப் பொருளே origos. ஆக ஆதல் என்பதுவும் origos என்பதுவும் ஏறத்தாழ ஒன்றே தான்.
சக்தி [சத்தி] களம் என்று சொல்லும் போது அங்கே இரு விதமான பகுப்புச் சொற்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

1. முதலில், சக்கரம் எனும் தமிழ்ச்சொல்லை நாம் ஆயும் போது ஆரம் [வட்ட வடிவப் பொருள்] மற்றும் சக் [சமசுகிருதத்தில்: இயக்கம், ஆற்றல்] எனும் இரு பகுப்புச் சொற்கள் உள்ளடங்கியிருப்பது புலனாகும். இதில் வரும் இந்த் சக் எனும் மூலமே சக்தி களம் எனும் சொல்லில் வருவது, என்றும் சொல்லலாம். எனவே சக்தி = சக் [இயக்கம், ஆற்றல்] + இ என்றாகிறது. இதில் வரும் 'இ' பெண்பால் விகுதியே.

2. இன்னோர் வாய்ப்பும் உண்டு இங்கே. சத்தியம் எனும் தமிழ்ச் சொல்லை ஆயும் போது சத் [தமிழ் மற்றும் சமசுகிருதத்தில்: மெய், மெய்ப்பொருள்] மற்றும் இயம் [இயம்புதல்] எனும் மூலச்சொற்கள் புதைந்திருப்பது புலனாகும். அதாவது சத்தி களம் என்பது சுத்தவெளியின் வெளிப்பாடாகிய பிரணவம் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே சத்தி = சத் [மெய்ப்பொருள்] + இ என்றாகிறது. இதில் வரும் 'இ' பெண்பால் விகுதியே.

பழங்காலச் சித்தர் பெருமக்கள் பலர் ச'க்'தி என்ற சொல்லை விட ச'த்'தி என்ற சொல்லையே பெரிதும் பயன்படுத்தியிருக்கின்றனர், தம் செய்யுள்க்களில். சக்தி திரிந்து சத்தியானதா, சத்தி திரிந்து சக்தியானதா என்பது இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் பகுதி தான்.

Energia எனும் கிரேக்கச் சொல்லும் இயக்கம் எனும் பொருளுடையதே. இச்சொல் தான் energy [ஆற்றல்] எனும் நடைமுறைச் சொல்லின் மூலம். இச்சொல் கொண்டு தான் energy field என்று சக்திகளத்தை வருணிக்கின்றோம்.
அலை, நிலை:

நல்லது, அல்லது எனும் சொல்லை நாம் கூர்ந்து நோக்க வேண்டும். நன்மை + அது = நல்லது என்றாகியது, அல் + (நன்)மை + அது = அல்லது என்றாகியது. இந்த அன்[ல்] எனும் எதிர்மறை தான், நிலை எனும் சொல்லை அலை என்று ஆக்குவது. அதாவது நில் எனும் வினைச் சொல் ஐ விகுதியோடு இணைந்து நில் + ஐ = நிலை [எ.கா. கல் + ஐ = கலை] என்றானது. பின், அ[ல்] + நிலை = அலை என்றானது. அதாவது நிலையாக இல்லாத எந்த ஒரு பொருளுமே அலை தான். மனம் என்பது அலை, அது நிலையாக நிற்கும் போது மனம் எனும் பெயரை இழந்து அறிவு என்று பெயர் மாற்றமடைந்து விடுகின்றது என்றே பொருள்.

நிலை = உண்மை, அறிவு என்றும் சொல்லப்படுவது.

அ. உள்[ளது] + ம் + ஐ = உண்மை: உள்ளதே உண்மை, சுத்தவெளி மட்டுமே பிரபஞ்சமனைத்துமாய் உள்ளது. எனவே அது மட்டுமே உண்மை.

ஆ. அறி + வ் + உ = அறிதல் எனும் தொழிலைச் செய்யவல்லது அறிவு. அறிவு என்பது தமிழ் இலக்கியங்களில் ஓரறிவு, ஈரறிவு என்று புலன் வழி அறிதலில் தான் துவங்கியிருக்க வேண்டும். காலத்தால் சித்தர் இலக்கியத்தில் தான் இது 'அறிவே தெய்வம்' எனும் கருத்தாக உயர்வடைந்திருக்க [elevated] வேண்டும் .

wave, static, dynamic:

I. statia எனும் கிரேக்கச் சொல் 'நிற்க வைப்பது' எனும் பொருளுடையது. இந்தச் சொல் கிரேக்கர்களின் தராசுப் பயன்பாட்டோடு தொடர்புடையது. மையத்தில் சரியாக முள் நிற்பதே statia. இன்றைய ஆங்கிலத்தில் இது 'ஸ்டாட்டிக் [static]'.

II. wafian எனும் கிரேக்கச் சொல் 'இரு கைகளையும் வீசி நடப்பவன்' எனும் பொருளுடையது. இதிலிருந்து தான் ஆங்கிலம் wave எனும் சொல்லைத் தருவித்துக்கொண்டது.

III. dynamikos எனும் கிரேக்கச் சொல் 'மிகவும் ஆற்றல் கொண்ட' என்று பொருள் படும். இதிலிருந்து தோன்றியவை தாம் dynamic [இயக்கம்], dynamite [சக்தி வாய்ந்த வெடிபொருள்] இன்ன பிற.

முற்றி [முத்தி, முக்தி]:

முற்றும் எனும் தமிழ் சொல்லை நாம், கூர்ந்து கவனிக்க வேண்டும், அச்சொல்லில் வரும் 'முற்' என்பது, 'முன்' எனும் வினைச்சொல்லோடு தொடர்புடையது. ஆங்கிலத்திலே front - frontier என்று இரு சொற்கள் உண்டு, அதாவது முன்னால் - முன் எல்லையில் என்று பொருள்படும். இனி frontல் போக இடம் இல்லை எனும் போது, அந்த நிலை frontier என்றாகின்றது [ஆங்கிலம் அறியாதோர் இந்த எடுத்துக்காட்டுக்காக என்னை மன்னிக்கவும், இதை விட எளிய ஒப்பீடு இல்லை]. அது போன்று 'முன்' எனும் சொல்மூலத்திலிருந்து தோன்றுவதே 'முற்றும்' எனும் தமிழ்ச்சொல். அதாவது முன் + அற் + உம் எனும் தொகுப்பில் உருவாகின்றது. அற் என்பது எதிர்மறை இணைப்பான அல் என்பதில் திரிபு, இதன் பயன்பாடு அற்றுப்போதல் எனும் சொல்லின் மூலம் நமக்குத் தெளிவாக விளங்கும். எனவே, முன் + அல் [இல்லாமை] + உம் = முற்றும், அதாவது 'முன்னே ஏதும் இல்லாமை' தான் முற்றும் எனும் நிலை.

எந்த ஒரு நிலையில் 'முற்றும்' என்பது வருகின்றதோ அந்த நிலை தான் முன் + அல் [ற்] + இ = முற்றி. அதாவது இந்த நிலையைத் தாண்டி செல்ல வேறு நிலை இல்லை எனும் போது தான் அது முற்றும் - முற்றி. சமன் ஆதி நிலையைத் தாண்டிச் செல்ல வேறு நிலை ஏதும் இல்லை எனும் போது தான், அது முற்றும் - முற்றி. இந்த முற்றி தான் முத்தி என்று திரிந்து பின்னாளில் வடமொழியில் முக்தி என்றாயிருக்க வேண்டும்.

சிற்றி (சித்தி):

சிற்றின்பம் எனும் சொல்லை நாம் நன்கு கவனிக்க வேண்டும். சிறுமை + இன்பம் = சிற்றின்பம். உடலோடு தொடர்புடையவைகளை ஆன்மீகத்தில் சிறுமை எனும் சொல் கொண்டு அழைப்பது வழக்கமாயிருந்தது அக்காலத்தில். இதை ஒத்து நாம் சிற்றி எனும் சொல்லை பகுக்கும் போது,

சிறு(மை) + இ = சிற்றி, பின்னாளில் திரிந்து சித்தி.

சித்துக்கள் உடல் எனும் நிலையியினின்று ஆற்றப்படுவன தாமே, அவற்றை சிறுமை என்று வகைப்படுத்தியதில் வியப்பேது? மேலும் இந்த 'சித்' எனும் வட மொழி மூலமும் தமிழில் உள்ள 'சிறுமை' எனும் சொல்லின் வழிவந்தவையே என்பது என் எண்ணமாகும்.

கிரேக்கம் முற்றி, சிற்றி என்பன பற்றியெல்லாம் சிந்திக்கவேயில்லை, எனினும் பிற்கால ஆன்மீகம் ஆங்கிலத்தில் attainment [முற்றி], black magic [சிற்றி] போன்ற சொற்களை தனதுள் ஏற்று வடிவமைத்துக் கொண்டது, இச்சொற்கள் செம்மொழிச்சொற்கள் அல்ல, என்பதால், அவைகளது பகுப்பு இங்கே அவசியமற்றது.
மூலக் கூறு - மூலம் + கூறு

கூறு என்பது பகுக்கப் பட்ட குறும் பகுதி எனும் பொருளுடையது [உபயோகம்: காய்கறிக் கூறு].
மூலம் என்பது சுத்தவெளியைக் குறிக்கின்றது, என்பதையும் நாமறிவோம்.

மூலத்தை, அதாவது சுத்தவெளியை குறும் துண்டுகளாகப் போட்டால் என்ன கிடைக்குமோ அதுதான் மூலத்தின் கூறுகள், அதாவது மூலக்கூறுகள். எனவே மூலக்கூறு என்பது சுத்தவெளியின் நொறுங்கிய துண்டுகள் எனும் பொருளைத் தரவல்லது.

No comments: